Friday, September 1, 2017

97. தேசிய ​அருங்காட்சியகம், கோலாலம்பூர், மலேசியா

http://www.vallamai.com/?p=79424


முனைவர் சுபாஷிணி
​மலேசியா ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலைப் பெற்று 60 ஆண்டுகள் ஆகிய மகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் அமைந்திருக்கும் தேசிய அருங்காட்சியகத்தினைப் பற்றி இந்தப் பதிவில் சில செய்திகள் பகிர்ந்து கொள்கிறேன்.
கோலாலம்பூரின் ப்ரிக்ஃபீல்ட்ஸ் பகுதிக்கு அருகே, டாமான்சாரா சாலையில் அமைந்திருக்கின்றது மலேசிய தேசிய அருங்காட்சியகம். மலேசிய மக்கள், வரலாறு, மன்னர்கள், பேரரசுகள், காலனித்துவ ஆட்சிக்கால செய்திகள், கலாச்சாரம், அகழாய்வு என மலேசியாவைப் பற்றி பொதுவாக ஒருவர் அறிந்து கொள்ள விரும்பும் அனைத்துத் தகவல்களையும் அறிந்து கொள்ளும் வகையில், மிக நேர்த்தியான வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரங்குகளில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. சிலாங்கூர் அருங்காட்சியகம் சிதிலமடைந்த பிறகு இந்த புதிய கட்டிடத்தை உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 21 ஆகஸ்ட் 1963ஆம் ஆண்டு இப்புதிய கட்டிடம் திறப்பு விழா கண்டது. பாரம்பரிய மீனாங்கபாவ் கட்டுமான வடிவத்தில் இந்தக் கட்டிடம் அமைக்கப்பட்டிருக்கின்றது என்பது இதன் தனிச்சிறப்பாகும்.
as4
அருங்காட்சியகத்தின் நுழைவாயிலில் இருக்கும் வரவேற்பு வளையம் கெடா மாநிலத்திலிருக்கும் குவாலா கெடா கோட்டையின் முகப்பில் இருந்த வரவேற்பு வளையமாகும். அதனை பெயர்த்தெடுத்து வந்து இந்த அருங்காட்சியகத்தின் முகப்புப் பகுதியாக அது​ இங்கு​ இணைக்கப்பட்டிருக்கின்றது. கெடா மாநிலத்திலிருக்கும் அக்கோட்டைப் போர்த்துக்கீசியர்கள் மலாயாவைக் கைப்பற்ற 1611ம் ஆண்டில் நிகழ்த்திய போரின் போது பெருமளவு சேதமடைந்தது. மீண்டும் 1771ம் ஆண்டு அக்கோட்டை அப்போதைய கெடா மன்னர் சுல்தான் முகமது ஜீவா ஜைனல் அசீலீன் முஆஸாம் ஷா (1778 – 1797) அவர்களால் புதுப்பிக்கப்பட்டது. மலாயாவை ஆட்சி செய்த மன்னர்களின் பலத்தையும் உறுதியையும் பிரதிபலிக்கும் ஒரு அம்சமாக இந்தக் கோட்டையின் வாயில் பகுதி திகழ்வதால்​,​ அது இந்த அருங்காட்சியகத்திற்குக் கொண்டு வரப்பட்டு முன் வாயிலில் பொருத்தப்பட்டு சிறப்பளிக்கப்பட்டுள்ளது.
as3
வாசல் பகுதியிலேயே அன்றைய மலாயாவில் செயல்பாட்டில் இருந்த ரயில்பெட்டிகள் சில வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக இந்த ரயில்பெட்டி 121,600,00 மலேசிய ரிங்கி​ட்டிற்கு இங்கிலாந்திலிருந்து வாங்கப்பட்டதாகும். 1921ம் ஆண்டு இது​ தன்​ சேவையைத் தொடங்கியது. இதன் எடை 88 1/2 டன் ஆகும். Kitson and Co. என்ற இங்கிலாந்தில் உள்ள நிறுவனம் இதனைத் தயாரித்தது. நவம்பர் மாதம் 1969ம் ஆண்டு இது தன் சேவையை நிறுத்திக் கொண்டது என்றும் தனது சேவைக் காலத்தில் இந்த ரயில் மலாயா தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில் சேவையில் இருந்ததாகவும், ஏறக்குறைய ஒன்றரை மில்லியன் ரயில் மைல்கள் இது பயணித்துள்ளது என்றும் அறிய முடிகின்றது. இதைப் போல இன்னும் சில ரயில்கள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பினாங்கு மலை உச்சிக்குச் செல்ல பயன்படுத்தப்பட்ட பழைய கேபிள் ரயில் ஒன்றின் பகுதி ஒன்றும் இதே அருங்காட்சியகத்தில் இடம்பெறுகின்றது.
as2
​அன்றைய மலாயா உட்பட கிழக்காசிய நாடுகள்​ அனைத்தும் புத்தமதம் செழித்துப் பரவிய நாடுகள் எனலாம். கி.பி 2ஆம் நூற்றாண்டு தொடக்கம் கிழக்காசிய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து வந்த வணிகர்கள் வணிகம் செய்யவந்து பின்னர் இந்த​ புதிய நிலப்பகுதியிலேயே தங்கி​,​ இங்கே பௌத்த மதம் செழிக்கவும் காரணமாக இருந்திருக்கின்றனர். அப்படி வந்தவர்கள் இங்குள்ள சூழலுக்கேற்ப தங்கள் வாழ்க்கை நிலையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டாலும் கூட பௌத்த மத வழிபாட்டினைக் கடைபிடிப்போராகவே தங்கள் பண்பாட்டினைத் தொடர்ந்தனர் என்பதை அறியமுடிகின்றது. கி.பி.6ஆம்​,​ 7ஆம் நூற்றாண்டு கோயில்களின் பகுதிகள்​ ஆங்காங்கே நிகழ்த்தப்பட்ட ​ அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. கெடா மாநிலத்திலுள்ள பூஜாங் பள்ளத்தாக்கு இன்றளவும் இந்திய பழம் பண்பாட்டின் தாக்கத்தைக் காட்டும் உதாரணமாகத் திகழ்கின்றது எனலாம். அந்த வகையில் பேராக் மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட அவலோகிதர் சிற்பம் ஒன்று இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது. 1936ஆம் ஆண்டில் ஈயம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு குழுவினருக்கு இந்தச் சிற்பம் கிட்டியது. இது செம்பினால் செய்யப்பட்ட சிற்பம். இதன் காலம் கி.பி 7ஆம் நூற்றாண்டிலிருந்து 12ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்டதாக இருக்கலாம் எனக்கணக்கிடுகின்றனர். இக்காலகட்டத்தில் இந்து சமயமும் பௌத்த சமயமும் இப்பகுதிகளில் மிகச் செழிப்புற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
as1
மலேசிய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் என்றால் அது 31 ஆகஸ்ட் 1957ஆம் ஆண்டினைத்தான் குறிப்பிட வேண்டும். சுதந்திரம் வேண்டிய உள்ளூர் மக்கள் இங்கிலாந்தின் காலணித்துவ அரசை எதிர்த்து அகிம்சைப் போராட்டத்தை நடத்தினர். 1955ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1955ஆம் ஆண்டும் சட்டப்பேரவைக்கான முதல் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் கூட்டணிக் கட்சிகளாகச் செயல்பட்ட அம்னோ, எம்.ஐ.சி, எம்.சி.எ ஆகிய மூன்று கட்சிகளும் மலாயாவின் பெரும்பான்மை சமூகத்தினைப் பிரதிநிதித்து தேர்தல் களத்தில் போட்டியிட்டன. இத்தேர்தலில் இக்கூட்டணி பெரும்பான்மையைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. அடுத்த இரண்டாண்டுகளில் படிப்படியாக நிகழ்ந்த முன்னேற்றம் மலேசியா விடுதலைப் பெற்ற சுதந்திர நாடாக வலம் வர வழிவகுத்தது. சுதந்திர மலேசியாவின் முதல் பிரதமராக துன் அப்துல் ரகுமான் அவர்கள் பதவி ஏற்றுக்கொண்ட நாள் மலேசிய வரலாற்றில் ஒரு பொன்னாள் என்பதில் ஐயமில்லை. இந்த அருங்காட்சியகத்தின் ஒரு பகுதி மலேசிய சுதந்திரம் தொடர்பான பல ஆவணங்களையும் புகைப்படங்களையும் காட்சிக்கு வைத்துள்ளது.
as
இப்படி இங்கிருக்கும் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியே விவரித்துக் கொண்டே போகலாம். பெருங்கற்காலக்கருவிகள், மரப்பட்டை ஆடைகள், மனித எலும்புக்கூடுகள், விவசாயக் கருவிகள், மன்னர்களின் வரலாறுகள், பேரரசர்களின் வரலாறுகள் என சுவாரசியம் குறையாமல் இந்த அருங்காட்சியகத்தில் நேரத்தைச் செலவிடலாம். ஒவ்வொரு பகுதியும் வருகை தருவோருக்குத் தேவையான தகவல்களை​ குறையாமல் வழங்குகின்றன. மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் வருபவர்கள் தவறாமல் வந்து பார்த்து செல்ல வேண்டிய ஒரு முக்கிய இடமாக இந்த தேசிய அருங்காட்சியகத்தை நான் கருதுகிறேன்.
சரி. அடுத்த பதிவில் மற்றுமொரு நாட்டில் சுவாரசியமான தகவல்கள் அடங்கிய அருங்காட்சியகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். வரத் தயார் தானே?​

No comments:

Post a Comment