Friday, September 15, 2017

98. உடைந்த உறவுகள் – அருங்காட்சியகம், சாக்ரெப், குரோய்ஷியா

http://www.vallamai.com/?p=79753

முனைவர் சுபாஷிணி
காதல்.. காதல்.. காதல்..
பழமையைப் போற்றுவதற்கும், மானுடவியல் ஆய்வுகளில் உதவுவதற்கும், தொல்லியல் கண்டுபிடிப்புகளையும் அறிவியல் ஆக்கங்களைப் பட்டியலிடவும் மட்டும் தான் அருங்காட்சியகமா? மனித உறவுகளில் உள்ள சில கூறுகளைப் பதிவாக்கி வைக்கவும் அருங்காட்சியகங்கள் வேண்டாமா?
as1
வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்கள் பலர்.
தற்செயலாகச் சந்திக்கும் அவர்களில் யாரோ ஒருவருடன் மனதில் திடீரென ஈர்ப்பு ஏற்பட்டு விடுவதை மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருமே உணர்ந்து அனுபவித்துக் கடந்து வருகிறோம். மனிதர்களின் வாழ்வில் நடக்கும் முக்கிய அம்சங்களான குழந்தை பிறப்பு, திருமணம், இறப்பு ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடும் நாம், நம் தனி மனித உணர்வுகளின் அதி உயர்வான காதல் உணர்வைப் போற்றி மதிக்காமல் போய்விடுகின்றோமே..
சில வேளைகளில் காதல் தோல்வியைத் தற்கொலையால் பூசிப்பவர்களும் உண்டு. காதல் தோல்வியால் மதுபானம், போதைப்பொருள் என சில தீய பழக்கங்களுக்கு ஆளாகி, தன் நலனையே கெடுத்துக் கொள்பவர்களும் உண்டு. ஒரு சிலரோ, உடைந்து போன காதலுக்கு மரியாதையைச் செலுத்தி விட்டு புதிதாகத் தோன்றியிருக்கும் காதலை வளர்த்தெடுப்பதில் மூழ்கிவிடுபவர்களும் உண்டு. மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் காதல் உணர்வுகள் எழுவது இயல்பு. காதல் வயப்பட்டோர் ஏதாவதொரு ஒரு காரணத்திற்காகத் தோல்வியைச் சந்தித்திருப்பதும் உண்டு. அதிலிருந்து மீண்டு வந்து புதிய காதலை ரசித்து வாழ்க்கையைத் தொடர்வதே வாழ்க்கைக்கான வெற்றி. ஒருவர் வாழ்வில் நிகழ்ந்த சோகம் மற்றொருவருக்குப் புதிய பாதையைக் காட்டலாமே, என்ற சிந்தனையுடன் உருவாக்கப்பட்டதுதான் குரோய்ஷியா நாட்டின் தலைநகரமான சாக்ரெப்பில் அமைந்திருக்கும் உடைந்த உறவுகள் அருங்காட்சியகம்.


2006ஆம் ஆண்டு இத்தகைய ஒரு அருங்காட்சியகம் உருவாக்கப்பட வேண்டுமென்ற எண்ணம் ஏற்படவே அரசு இந்த முயற்சியில் இறங்கியது. அதன் அடுத்த ஆண்டில் இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டு படிப்படியாகப் பல ஆவணங்களும் காட்சிப் பொருட்களும் இங்கு இணைக்கப்பட்டன. இன்றளவும் இணைக்கப்படுகின்றன.
அருங்காட்சியகங்கள் என்றால் பொதுவாக எதனை எதிர்பார்ப்போம்..? சிதிலமடைந்த சுவர்கள், சிற்பங்கள், கற்கள், எலும்புக் கூடுகள், சின்னங்கள், நாணயங்கள் … இப்படித்தானே..?
இங்கே அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பொருட்கள் எல்லாம் தனி நபர்கள் நன்கொடையாக இந்த அருங்காட்சியகத்திற்கு வழங்கிய சுய அனுபவங்களின் சான்றுகள் தாம். இங்கு உலகம் முழுவதிலிருந்து இத்தகைய பொருட்கள் வந்து சேர்ந்திருக்கின்றன. அவற்றை முறையாகக் காட்சிப்படுத்தி குரோய்ஷிய மொழியிலும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தும் இங்கு வைத்திருக்கின்றார்கள்.
இங்குள்ள ஒரு சில சொந்தக் கதை அனுபவங்கள் சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.
நெதர்லாந்தில் வசிக்கும் பெண்மணி ஒருவர். அவரது ஒரு காலணியும் எதனால் இதனை நினைவுச் சின்னமாக அனுப்பினார் என்ற விளக்கமும் உள்ளது. அதில் அவர் சொல்கிறார்.
“1959ஆம் ஆண்டு. எனக்கு 10 வயது. அவனுக்கு 11 வயது. நாங்கள் இருவரும் மிகுந்த காதலில் இருந்தோம். நாங்கள் இருவரும் வெளியே தனியாகச் சுற்றினோம் என்பதை என் தாயாருக்குச் சொன்ன போது என் காதில் பலமான அடி விழுந்தது. என்னை என் அத்தை வீட்டிற்கு அனுப்பி விட்டனர். எனக்கு 15 வயது. மீண்டும் அவனைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. சில மாதங்கள் எங்கள் உறவு இனிமையாகக் கழிந்தது. பின்னர் அவன் ஜெர்மனி சென்று விட்டான். ஆனால் கடிதத் தொடர்பில் இருந்தோம். வேறு யாரையும் திருமணம் செய்து கொள்வதில்லை என உறுதி எடுத்துக் கொண்டோம். ஆனால் எங்கள் தொடர்பு துண்டித்துப் போனது.1998ஆம் ஆண்டு. நான் தொழில் ரீதியாக ஒரு பணியில் இருந்தேன். அச்சமயம் ஒரு வாடிக்கையாளர் வந்து பேசிக் கொண்டிருந்தார். சில நிமிடங்களில், அவர் அவன் தான் என அறிந்து கொண்டேன். அவனும் என்னை அடையாளம் கண்டு கொண்டான். தனக்கு முதல் திருமணம் வெற்றியாக அமையவில்லை என்றும் இரண்டாம் திருமணம் செய்திருப்பதாகவும் கூறினான். இனி இருவரும் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக் கூடாது என நான் கூறினேன். அவன் என் நினைவாக நான் அணிந்திருந்த காலணியில் ஒன்றினைக் கேட்க அவனுக்குக் கொடுத்து விட்டேன். பின்னர் யோசித்தேன். அந்த நினைவுகள் மீண்டும் தேவையில்லை. எஞ்சிய இந்த ஒரு காலணியை அருங்காட்சியகத்திற்கு என் வாழ்க்கை நினைவாகக் கொடுக்கின்றேன்.”
..என அவரது காதல் தோல்வி கதை அமைகிறது.
அடுத்த கதை. இதனையும் ஒரு பெண் பிரேசில் நாட்டிலிருந்து எழுதியிருக்கின்றார். கடிதத்தோடு காகிதத்தால் செய்யப்பட்ட திருமண அலங்கார வளையத்தை அனுப்பியுள்ளார்.
“நான் ஒரு எழுத்தாளர். நான் எனது பதிப்பக உரிமையாளரையே மணந்து கொண்டேன். திருமணத்திற்காக இந்த காகித அழகு வளையத்தை இருவருமே செய்தோம். இது முழுக்க முழுக்க காகிதத்தால் மட்டுமே ஆனது. நாங்கள் இருவரும் எழுத்துத் துறையில் இருப்பதால் அதனைப் பிரதிபலிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்தோம். எங்கள் 5ஆம் ஆண்டு திருமண நாளின் போது அவன் மற்றொரு பெண்ணுடன் உறவு வைத்திருக்கின்றான் என்பதை அறிந்து கொண்டேன். மேலும் ஆராய்ந்த போது அது ஊர்ஜிதமாகியது. அவனிடமிருந்து விலகி விட்டேன். அவன் நினைவுகளும் தேவையில்லை என்பதால் இந்தக் காகித அலங்கார வளையத்தை இந்த அருங்காட்சியகத்திற்கு அனுப்புகிறேன். ”
.. இது அவரது கதை.
இன்னொரு பெண்மணி.. குரோய்ஷியாவிலேயே இருப்பவர். அவரது திருமண ஆடையை இங்கு வழங்கியதோடு ஏன் என்ற காரணத்தை சில வரிகளில் கூறியிருக்கின்றார்.
as3
“நீண்ட சண்டைகள் எங்களுக்குள் ஏற்பட்டன. அவை தொடர்ந்தன. அவன் தன் பக்க நியாயத்தை மட்டுமே ஓயாது பேசிக் கொண்டிருந்தான். பேசுவதே அதிகம். தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. அவன் வேலைக்கும் செல்லவில்லை. திருமணம் முதல் எல்லாமே எனது செலவிலேயே நடந்தது. அவனால் எனக்குக் கடன் தொல்லையும் ஏற்பட்டது. அவனது கடன்களை அடைத்தேன். அவனை வெளியே விரட்டினேன். அவன் நினைவுகளும் வேண்டாம். இந்தத் திருமண கவுனும் வேண்டாம். ”
..இது அவரது வாழ்க்கையில் காதல் ஏற்படுத்திய காயத்தின் சான்று.
இங்குள்ள காதல் தோல்வி சான்றுகள் பெண்கள் அனுப்பியவே அதிகம். இங்கிலாந்தின் லண்டன் நகரிலிருந்து ஆண் ஒருவர் அனுப்பிய காதல் தோல்விக்கான காரணத்தையும் சான்றையும் பார்ப்போமே.
“நான் அவளை முதன் முதலில் டிசம்பர் மாதத்தில் சந்தித்தேன். ஆரம்பத்தில் நட்பாக மட்டுமே எங்கள் உறவு தொடர்ந்தது. ஏனெனில் நான் அப்போது ஒரு காதலிக்காக ஏங்கிக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அவளிடம் எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அவள் ஆஸ்திரேலியாவிலிருந்து படிக்க வந்திருந்தாள். எங்கள் உறவு இனிதே தொடங்கியது. அவள் திரும்பிச் செல்ல வேண்டிய காலம் வந்தது. என்னையும் அழைத்தாள். நான் லண்டனிலிருந்து வரமுடியாது எனக் கூறிவிட்டேன். எங்கள் உறவு முறிந்தது. “
ஏன் முறிந்தது? எதனால் லண்டனிலிருந்து வரமுடியாது என 10 காரணங்களைச் சொல்லி அவளை அனுப்பி வைத்திருக்கின்றார் இந்த ரோமியோ. அந்த 10 காரணங்கள் அடங்கிய பட்டியல் மனதை உறுத்தி வருத்தியிருக்கும் போல. அதனால் அதனை இந்த அருங்காட்சியகத்திற்கு அனுப்பிவிட்டார்.
இன்னொரு பெண்மணி.. தனது ஒரு வருடக் காதல் அனுபவம் .. பின் ஏற்பட்ட காதல் முறிவு ஆகியவற்றுக்கான காரணத்தை இப்படிக் கூறுகிறார்.
as4
“ஒரு முறை போதைப் பொருளுக்கு அடிமையானவன் மீண்டும் அதிலிருந்து தப்பவே முடியாது. போதைக்கு அடிமையானவன் வாழ் நாள் முழுதும் போதைப்பொருளுக்கு அடிமைதான். ஆனால் முதலில் என் நண்பர்கள் இதனைக்கூறியபோது நான் ஏற்றுக் கொள்ளவில்லை. போதைப் பொருளுக்கு அடிமையான ஒருவன் வாழ்க்கையில் மறு வாய்ப்பு வழங்கப்படும் போது மாறிக் கொள்ள மாட்டானா? என் காதல் அவனை மாற்றும் என என் நண்பர்களிடம் வாதிட்டு அவனுடன் காதல் நட்பினைத் தொடங்கினேன். அவன் என்னை அதிகம் காதலித்தான். நானும் அவனை உயிருக்கு உயிராகக் காதலித்தேன். எனக்குச் சிரமம் ஏற்படும் போதெல்லாம் துணையாக இருந்தான். அதனால் என் நண்பர்களிடமிருந்தும் கூட விலகி விட்டேன். நாங்கள் இணைந்து வாழ்க்கையைத் தொடங்கினோம். வியாபாரத்தைத் தொடங்கினோம் . குடும்பம் அமைப்பது பற்றி அதிகமாகப் பேசினோம். ஒருநாள் திடீரென்று அவனிடம் மாறுதலைக் கண்டேன். எனக்குத் தெரியாமல் போதைப் பொருளை உட்கொள்வதை மீண்டும் தொடங்கியிருந்தான். சொல்லிப் பார்த்தேன். கேட்கவில்லை. ஆறு மாதங்கள் போராடிப் பார்த்தேன். அவன் மாறவில்லை. நான் அவனிடமிருந்து பிரிந்து வந்து என் வாழ்க்கையைத் தொடர்கின்றேன். அவன் நினைவாகக் போதைப்பொருள் சோதனைக்கருவி ஒன்றினை சான்றாக அனுப்பி, இக்கடிதத்தையும் அனுப்பியிருக்கின்றார். “
இப்படிப் பல பல கதைகள்.. நின்று வாசித்தால் பெருமூச்சு ஏற்படும். ஆனாலும் தங்கள் வாழ்க்கை நிகழ்வுகள் பிறருக்கு புது வாழ்க்கையைத் தொடங்க ஒரு தூண்டுதலாக இருக்கும் என்ற நல்ல எண்ணத்துடன் இத்தகைய தகவல்களை அனுப்பியிருக்கும் நல்ல உள்ளங்களை வாழ்த்தத்தான் வேண்டும்.
as5
காதலில் தோல்வி ஏற்பட்டு மனம் வருந்திக் கொண்டிருப்பவர்கள் முதலில் அக்காதலை நினைவூட்டும் எல்லாப் பொருட்களையும் ஒதுக்கி விடுவதே நல்லது. பழைய நினைவுகள் நிகழ்கால வாழ்க்கையைப் பாதிக்க நாமே இடம் கொடுக்கக் கூடாது., ஆக, காதலில் தோல்வி அடைந்தோர் ஏதேனும் நினைவுப் பொருட்கள் வைத்திருந்தால் உங்கள் காதலை விவரித்து அப்பொருளையும் சேர்த்து இந்த அருங்காட்சியகத்திற்கு அனுப்பி விடலாம். இதன் முகவரி,
Museum of Broken Relationships,
Ćirilometodska ul. 2, 10000, Zagreb, Croatia
வாழ்வதற்குத்தான் வாழ்க்கை. முதல் தோல்வி என்றும் தோல்வியல்ல. ஒருமுறை காதலில் தோல்வியடைந்தால் மனம் உடைந்து போக வேண்டாம் தோழர்களே. வாழ்க்கையில் நல்ல துணையைக் காதலித்துக் கைகோர்த்து நலமுடன் காதல் செய்து மகிழ்ந்து வாழ்வீர். முடிந்தால், சாக்ரெப் செல்லும் வாய்ப்பு கிடைத்தால், அப்படியே ஒரு முறை இந்த அருங்காட்சியகத்திற்கும் சென்று இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுயவாழ்க்கை அனுபவக் காதல் தோல்விச் சான்றுகளையும் பார்த்துச் செல்லுங்கள்!

Friday, September 1, 2017

97. தேசிய ​அருங்காட்சியகம், கோலாலம்பூர், மலேசியா

http://www.vallamai.com/?p=79424


முனைவர் சுபாஷிணி
​மலேசியா ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலைப் பெற்று 60 ஆண்டுகள் ஆகிய மகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் அமைந்திருக்கும் தேசிய அருங்காட்சியகத்தினைப் பற்றி இந்தப் பதிவில் சில செய்திகள் பகிர்ந்து கொள்கிறேன்.
கோலாலம்பூரின் ப்ரிக்ஃபீல்ட்ஸ் பகுதிக்கு அருகே, டாமான்சாரா சாலையில் அமைந்திருக்கின்றது மலேசிய தேசிய அருங்காட்சியகம். மலேசிய மக்கள், வரலாறு, மன்னர்கள், பேரரசுகள், காலனித்துவ ஆட்சிக்கால செய்திகள், கலாச்சாரம், அகழாய்வு என மலேசியாவைப் பற்றி பொதுவாக ஒருவர் அறிந்து கொள்ள விரும்பும் அனைத்துத் தகவல்களையும் அறிந்து கொள்ளும் வகையில், மிக நேர்த்தியான வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரங்குகளில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. சிலாங்கூர் அருங்காட்சியகம் சிதிலமடைந்த பிறகு இந்த புதிய கட்டிடத்தை உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 21 ஆகஸ்ட் 1963ஆம் ஆண்டு இப்புதிய கட்டிடம் திறப்பு விழா கண்டது. பாரம்பரிய மீனாங்கபாவ் கட்டுமான வடிவத்தில் இந்தக் கட்டிடம் அமைக்கப்பட்டிருக்கின்றது என்பது இதன் தனிச்சிறப்பாகும்.
as4
அருங்காட்சியகத்தின் நுழைவாயிலில் இருக்கும் வரவேற்பு வளையம் கெடா மாநிலத்திலிருக்கும் குவாலா கெடா கோட்டையின் முகப்பில் இருந்த வரவேற்பு வளையமாகும். அதனை பெயர்த்தெடுத்து வந்து இந்த அருங்காட்சியகத்தின் முகப்புப் பகுதியாக அது​ இங்கு​ இணைக்கப்பட்டிருக்கின்றது. கெடா மாநிலத்திலிருக்கும் அக்கோட்டைப் போர்த்துக்கீசியர்கள் மலாயாவைக் கைப்பற்ற 1611ம் ஆண்டில் நிகழ்த்திய போரின் போது பெருமளவு சேதமடைந்தது. மீண்டும் 1771ம் ஆண்டு அக்கோட்டை அப்போதைய கெடா மன்னர் சுல்தான் முகமது ஜீவா ஜைனல் அசீலீன் முஆஸாம் ஷா (1778 – 1797) அவர்களால் புதுப்பிக்கப்பட்டது. மலாயாவை ஆட்சி செய்த மன்னர்களின் பலத்தையும் உறுதியையும் பிரதிபலிக்கும் ஒரு அம்சமாக இந்தக் கோட்டையின் வாயில் பகுதி திகழ்வதால்​,​ அது இந்த அருங்காட்சியகத்திற்குக் கொண்டு வரப்பட்டு முன் வாயிலில் பொருத்தப்பட்டு சிறப்பளிக்கப்பட்டுள்ளது.
as3
வாசல் பகுதியிலேயே அன்றைய மலாயாவில் செயல்பாட்டில் இருந்த ரயில்பெட்டிகள் சில வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக இந்த ரயில்பெட்டி 121,600,00 மலேசிய ரிங்கி​ட்டிற்கு இங்கிலாந்திலிருந்து வாங்கப்பட்டதாகும். 1921ம் ஆண்டு இது​ தன்​ சேவையைத் தொடங்கியது. இதன் எடை 88 1/2 டன் ஆகும். Kitson and Co. என்ற இங்கிலாந்தில் உள்ள நிறுவனம் இதனைத் தயாரித்தது. நவம்பர் மாதம் 1969ம் ஆண்டு இது தன் சேவையை நிறுத்திக் கொண்டது என்றும் தனது சேவைக் காலத்தில் இந்த ரயில் மலாயா தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில் சேவையில் இருந்ததாகவும், ஏறக்குறைய ஒன்றரை மில்லியன் ரயில் மைல்கள் இது பயணித்துள்ளது என்றும் அறிய முடிகின்றது. இதைப் போல இன்னும் சில ரயில்கள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பினாங்கு மலை உச்சிக்குச் செல்ல பயன்படுத்தப்பட்ட பழைய கேபிள் ரயில் ஒன்றின் பகுதி ஒன்றும் இதே அருங்காட்சியகத்தில் இடம்பெறுகின்றது.
as2
​அன்றைய மலாயா உட்பட கிழக்காசிய நாடுகள்​ அனைத்தும் புத்தமதம் செழித்துப் பரவிய நாடுகள் எனலாம். கி.பி 2ஆம் நூற்றாண்டு தொடக்கம் கிழக்காசிய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து வந்த வணிகர்கள் வணிகம் செய்யவந்து பின்னர் இந்த​ புதிய நிலப்பகுதியிலேயே தங்கி​,​ இங்கே பௌத்த மதம் செழிக்கவும் காரணமாக இருந்திருக்கின்றனர். அப்படி வந்தவர்கள் இங்குள்ள சூழலுக்கேற்ப தங்கள் வாழ்க்கை நிலையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டாலும் கூட பௌத்த மத வழிபாட்டினைக் கடைபிடிப்போராகவே தங்கள் பண்பாட்டினைத் தொடர்ந்தனர் என்பதை அறியமுடிகின்றது. கி.பி.6ஆம்​,​ 7ஆம் நூற்றாண்டு கோயில்களின் பகுதிகள்​ ஆங்காங்கே நிகழ்த்தப்பட்ட ​ அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. கெடா மாநிலத்திலுள்ள பூஜாங் பள்ளத்தாக்கு இன்றளவும் இந்திய பழம் பண்பாட்டின் தாக்கத்தைக் காட்டும் உதாரணமாகத் திகழ்கின்றது எனலாம். அந்த வகையில் பேராக் மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட அவலோகிதர் சிற்பம் ஒன்று இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது. 1936ஆம் ஆண்டில் ஈயம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு குழுவினருக்கு இந்தச் சிற்பம் கிட்டியது. இது செம்பினால் செய்யப்பட்ட சிற்பம். இதன் காலம் கி.பி 7ஆம் நூற்றாண்டிலிருந்து 12ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்டதாக இருக்கலாம் எனக்கணக்கிடுகின்றனர். இக்காலகட்டத்தில் இந்து சமயமும் பௌத்த சமயமும் இப்பகுதிகளில் மிகச் செழிப்புற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
as1
மலேசிய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் என்றால் அது 31 ஆகஸ்ட் 1957ஆம் ஆண்டினைத்தான் குறிப்பிட வேண்டும். சுதந்திரம் வேண்டிய உள்ளூர் மக்கள் இங்கிலாந்தின் காலணித்துவ அரசை எதிர்த்து அகிம்சைப் போராட்டத்தை நடத்தினர். 1955ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1955ஆம் ஆண்டும் சட்டப்பேரவைக்கான முதல் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் கூட்டணிக் கட்சிகளாகச் செயல்பட்ட அம்னோ, எம்.ஐ.சி, எம்.சி.எ ஆகிய மூன்று கட்சிகளும் மலாயாவின் பெரும்பான்மை சமூகத்தினைப் பிரதிநிதித்து தேர்தல் களத்தில் போட்டியிட்டன. இத்தேர்தலில் இக்கூட்டணி பெரும்பான்மையைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. அடுத்த இரண்டாண்டுகளில் படிப்படியாக நிகழ்ந்த முன்னேற்றம் மலேசியா விடுதலைப் பெற்ற சுதந்திர நாடாக வலம் வர வழிவகுத்தது. சுதந்திர மலேசியாவின் முதல் பிரதமராக துன் அப்துல் ரகுமான் அவர்கள் பதவி ஏற்றுக்கொண்ட நாள் மலேசிய வரலாற்றில் ஒரு பொன்னாள் என்பதில் ஐயமில்லை. இந்த அருங்காட்சியகத்தின் ஒரு பகுதி மலேசிய சுதந்திரம் தொடர்பான பல ஆவணங்களையும் புகைப்படங்களையும் காட்சிக்கு வைத்துள்ளது.
as
இப்படி இங்கிருக்கும் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியே விவரித்துக் கொண்டே போகலாம். பெருங்கற்காலக்கருவிகள், மரப்பட்டை ஆடைகள், மனித எலும்புக்கூடுகள், விவசாயக் கருவிகள், மன்னர்களின் வரலாறுகள், பேரரசர்களின் வரலாறுகள் என சுவாரசியம் குறையாமல் இந்த அருங்காட்சியகத்தில் நேரத்தைச் செலவிடலாம். ஒவ்வொரு பகுதியும் வருகை தருவோருக்குத் தேவையான தகவல்களை​ குறையாமல் வழங்குகின்றன. மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் வருபவர்கள் தவறாமல் வந்து பார்த்து செல்ல வேண்டிய ஒரு முக்கிய இடமாக இந்த தேசிய அருங்காட்சியகத்தை நான் கருதுகிறேன்.
சரி. அடுத்த பதிவில் மற்றுமொரு நாட்டில் சுவாரசியமான தகவல்கள் அடங்கிய அருங்காட்சியகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். வரத் தயார் தானே?​