Monday, September 19, 2016

73. பாப்பிரஸ் அருங்காட்சியகம், வியன்னா, ஆஸ்திரியா

முனைவர்.சுபாஷிணி

பண்டைய எழுத்து ஆவணங்களைப்பற்றி ஆராய முற்படும்போது கல்வெட்டு ஆவணங்களைப் போலவே நமக்கு பேப்பிரசில் கீறப்பட்ட ஆவணங்களும் கிடைக்கின்றன. மிகப்பழமையான பேப்பிரஸ் ஆவணங்கள் எகிப்தின் செங்கடல் பகுதியைச் சுற்றி செய்யப்பட்ட அகழ்வாய்வுகளில் கிடைத்திருக்கின்றன. இன்றைக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பழமையான பேப்பிரஸ் ஆவணங்கள் கி.மு.2560- கி.மு2550 எனக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த குறிப்பிடத்தக்க பேப்பிரஸ் ஆவணங்கள் உலக அதிசயங்களில் ஒன்றான கீசே பிரமிட் கட்டப்பட்ட இறுதி ஆண்டுகளின் நிகழ்வுகளை பதிவனவாக அமைந்துள்ளன. உலகின் ஏனைய பாகங்களை விட எகிப்தில் தான் பேப்பிரஸ் ஆவணங்கள் நமக்குக் கிடைக்கின்றன. பேப்பிரஸ் தாட்கள் நைல் நதிக்கரையோரத்தில் வளர்கின்ற பேப்பிரஸ் செடிகளைத்தக்க முறையில் பதப்படுத்தி தயார் செய்து அதிலிருந்து தாட்களாக உருவாக்கப்படுகின்றன.



உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் பேப்பிரஸ் ஆவணங்கள் அரும்பொருட்களில் ஒன்றாக இடம்பெறுவதை நம்மில் பலர் பார்த்திருக்கலாம். பல அரும்பொருட்களுடன் ஒன்றாக என்றில்லாமல், பேப்பிரஸ் ஆவணங்களுக்கு மட்டுமன்றி பிரத்தியேகமாக ஒரு அருங்காட்சியகம் ஆஸ்திரிய நாட்டின் வியன்னா நகரில் இருக்கின்றது. ஆஸ்திரிய தேசிய நூலகம் இருக்கும் அதே பிரமாண்டமான கட்டிடத்தின் மறுபகுதியில் இந்த பேப்பிரஸ் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

வியன்னாவில் உள்ள இந்த பேப்பிரஸ் அருங்காட்சியகத்தில் இருப்பவை அனைத்துமே எகிப்தின் கலாச்சார பண்பாட்டு வரலாற்று நிகழ்வுகளின் பதிவுகள். பல நூறு ஆண்டுகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் முழுமையான அல்லது சற்று சிதைந்த அல்லது பெரும்பாலும் சிதைந்த வகையில் காணப்படும் ஆவணங்கள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ஆவணங்களில் உள்ள செய்திகள் பெரும்பாலும் இறப்பு சடங்குகளை விவரிப்பதாகவோ, மருந்து மூலிகைகள் பற்றியோ, மேஜிக் விசித்திரமான நிகழ்வுகள் என்ற வகையிலோ, இலக்கியங்களாகவோ, உணவுப்பழக்கம் பற்றியதாகவோ, நைல் நதி பயணம் பற்றியதாகவோ என்ற வகையில் அமைந்திருக்கின்றன.



இங்கு ஆவணப்பகுதியில் ஏராளமான பேப்பிரஸ் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு அவை பாதுகாக்கப்படுகின்றன. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள சேகரிப்பில் 180.000 பேப்பிரஸ் ஆவணங்கள் உள்ளன என்பது வியப்பாக உள்ளது அல்லவா? இந்த அருங்காட்சியகம் மூன்று தளங்களில் அமைந்துள்ளது. அதில் ஒரு தளத்தில் மட்டுமே 200 பேப்பிரஸ் ஆவணங்கள் மட்டுமே பொது மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஏனையவை ஆய்வாளர்களுக்குப் பிரத்தியேக ஆய்வுகளுக்கு எனத்தகுந்த அனுமதி பெற்ற பின்னர் மட்டுமே வழங்கும் வகையில் பாதுகாக்கப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய பேப்பிரஸ் சேகரிப்பு உள்ள அருங்காட்சியகங்களில் இதுவும் ஒன்று என்பது இதன் சிறப்பை நமக்குப் புலப்படுத்தும். இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பினை பெருமைப்படுத்தும் வகையில் யுனெஸ்கோ நிறுவனம் 2001ஆம் ஆண்டு இந்த அருங்காட்சியகத்திற்கு “Memory of the World” என்று அறிவித்து சிறப்புச் செய்தது.



இந்த அருங்காட்சியகத்தின் வலைப்பக்கத்தில் நிரந்தர கண்காட்சி பற்றியும் சிறப்புக் கண்காட்சி பற்றியும் பல தகவல்களைப் பெறலாம். இதன் முகவரி
http://www.onb.ac.at/ev/papyrus_museum.htm. அருங்காட்சியகத்திற்கு நேரில் செல்ல விரும்புபவர்கள் வியன்னாவின் மத்திய சாலையில் தேசிய நூலகத்தை தேடிச் சென்றால் அதே பிரமாண்ட மண்டபத்தின் வலது புறத்தில் இந்த அருங்காட்சியகம் அமைந்திருப்பதைக் காணலாம். இதன் முகவரி:
Papyrus Museum
Heldenplatz, New Hofburg
1010 Wien
Tel.: (+43 1) 534 10-420

இங்குள்ள பேப்பிரஸ் ஆவணங்கள் ஒவ்வொன்றும் மாறுபட்ட செய்திகளைப் பதிவனவாக அமைந்திருக்கின்றன. உதாரணமாக ஒரு பெப்பிரஸ் ஆவணம் பார்லி, இறைச்சி, கோதுமை எண்ணெய் ஆகியவை பல்வேறு காலகட்டங்களில் கொடுக்கப்பட்டமையைக் குறிப்பதாக உள்ளது. இதில் பார்லி நைல் நதியில் ஏற்றிச் செல்லப்பட்டமையால் கூடுதல் வரி கட்டவேண்டியதைப் பற்றி குறிப்பிடுகின்றது. இந்த ஆவணம் கி.பி.4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.



இங்குள்ள மற்றுமொரு ஆவணம் எகிப்திற்கும் இந்தியாவிற்கும் ரோமானிய காலத்தில் இருந்த வர்த்தகத்தொடர்பை விளக்குவதாகவும் அமைந்துள்ளது. விலையுயர்ந்த பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டமையை இந்த ஆவணம் குறிப்பிடுகின்றது. இதில் ஒரு வியாபாரி கட்டவேண்டிய வரி பற்றிய செய்தியும் அவர் செங்கடல் பகுதியிலிருந்து இந்தியாவிற்குக் கப்பல் வழி பொருட்கள் ஏற்றி அனுப்பிய செய்தியையும் பதிகின்றது.


எகிப்து தொடர்பான பல்வேறு தகவல்களை வருவோருக்கு வழங்கும் ஆய்வுக்கூடமாக இந்த அருங்காட்சியகம் திகழ்கின்றது. நான் பார்த்து வியந்த அருங்காட்சியகங்களின் பட்டியலில் இந்த அருங்காட்சியம் தவறாமல் இடம் பெறும் ஒன்றே.

சரி. அடுத்த பதிவில் மற்றுமொரு அருங்காட்சியகத்திற்குச் செல்வோமா? தொடர்ந்து வாருங்கள்.

Monday, September 12, 2016

72. ஹெர்மான் ஹெஸ்ஸ அருங்காட்சியகம், கால்வ், ஜெர்மனி

முனைவர்.சுபாஷிணி

ஹெர்மான் ஹெஸ்ஸ 1962ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு மரணமுற்றபோது அவருக்கு வயது 82. ஜெர்மானிய இலக்கியவாதி என்ற ஒரு எல்லைக்குள் மட்டுமே அவரது இலக்கிய ஆளுமை என்றில்லாது உலகப்புகழ்பெற்ற, உலகத்தரம் வாய்ந்த ஒரு எழுத்தாளர் என்ற புகழைப் பெற்ற அவரை அன்றைய “டி சைட்” (Die Zeit) நாளேடு இனி இந்த எழுத்தாளர் காலத்தால் மறக்கப்படுவார் என எழுதியது. ஆனால் இந்தக் கூற்று பொய்யானது என்பதைக் காலம் நிரூபித்து விட்டது. ஹெர்மான் ஹெஸ்ஸ அவர்களின் எழுத்துக்கள் இதுவரை அறுபது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இன்றும் அவரது எழுத்துக்களால் அவர் நினைக்கப்படுபவராக இருக்கின்றார்.



தான் ஒரு இலக்கியவாதி.. இன்னும் சொல்லப்போனால் ஒரு கவிஞன் என்பதை அவர் உணர்ந்திருந்தார். இந்தியாவில் அவரது தந்தையார் ஒரு லூதரன் மதபோதகராகப்பணியாற்றியதாலும் அவரது தாயார் ஒரு லூதரன் மத போதகரின் மகள் என்பதாலும் பெற்றோரின் எண்ணம் தன் மகனும் அதே பணியைத் தான் மேற்கொள்ளப்போகின்றான் என்பதாக இருந்தது. ஆனால் தனது எண்ணம் முழுமையும் இலக்கியத்திலே தோய்ந்திருப்பதை அவர் உணர்ந்து தன் வாழ்க்கைப் பாதையை தன் விருப்பப்படியே அமைத்துக்கொண்டு, அழியாப் புகழை இன்று பெற்றிருக்கின்றார்.



ஹெர்மான் ஹெஸ்ஸ ஜெர்மனியின் பாடர்னுர்ட்டெம்பெர்க் மாநிலத்தின் கால்வ் நகரில் 1877ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2ஆம் தேதி பிறந்தார். இந்த கால்வ் ஒரு அழகிய சிற்றூர். எனது இல்லம் இருக்கின்ற லியோன்பெர்க் நகரிலிருந்து ஏறக்குறைய 27 கிமீ தூரம் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு ஊர் இது.

மதபோதனையாளர்கள் குடும்பத்தில் பிறந்த ஹெர்மான் ஹெஸ்ஸவிற்குப் ப்ராட்டஸ்டண்ட் சமய நம்பிக்கைகளை இளமைக் காலம் முதல் பெற்றோர் மற்றும் அவர் வளர்ந்த சூழல் அவருக்கு இயல்பாக ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால் அதில் மனம் நிறைவடையாமல் தனது சுயத்தைத் தேடுவதிலே அவர் கவனமும் ஆர்வமும் இருந்தது. ஒருபள்ளியை விட்டு மற்றொன்று என திருப்தியுறா நிலையிலேயே தன் கல்வியைத் தொடர்ந்து பின்னர் தன் 15ம் அகவையில் கல்வியை விட்டு விட்டு ஒரு கடிகாரம் செய்யும் பட்டறையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அவருக்குக் கடிகாரம் பழுது பார்த்தலோடு புத்தக விற்பனை செய்வதும் தொழிலாக அமைந்தது.

சமயத்திலிருந்து விடுதலை என்பதாகவும், தனி மனித சுதந்திர எண்ணங்களின் செயல்பாடு எவ்வகையில் அமைத்துக் கொள்வது என்றும் அவரது சிந்தனை இருந்தது. வாழ்க்கையைப் பற்றிய பல கேள்விகள் அவரது தேடலில் இருந்தன. தனது சுய அனுபவங்களையே தனது இலக்கியப்படைப்புகளில் புகுத்தி இலக்கியங்களைப் படைத்தார் ஹெர்மான் ஹெஸ்ஸ.



அவரது நாவலான Peter Camenzind அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து வெற்றியை அளித்தது. இது அவருக்கு இலக்கியத்தின் வழியே அவரது வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருளாதாரத்தை ஈட்டும் வழியை அமைத்துக் கொடுத்தது. ஒரு புகைப்படக்கலைஞரான மரியா பெர்னோலியை திருமணம் செய்து கொண்டு ஜெர்மனியின் தெற்குப் பகுதியான கான்ஸ்டன்ஸ் பகுதிக்குக் குடிபெயர்ந்தார். அங்கு அவரது மண வாழ்க்கை இனிமையாகத் தொடரவில்லை. இருவரும் திருமண பந்தத்திலிருந்து பிரிந்தனர். பின்னர் பயணங்களில் தன் வாழ்க்கையைச் செலவிட ஆரம்பித்தார் ஹெர்மான் ஹெஸ்ஸ. புதிய ஊர்களும் மக்களும் வாழ்க்கை நெறிமுறைகளும் சமய அனுபவங்களும் அவர் தேடுதலுக்கு விருந்தாக அமைந்தன. இலங்கைக்குச் சென்று பின்னர் இந்தோனீசியா சென்று சேர்ந்தார். ஆசிய நாடுகளின் வாழ்க்கை முறை அவருக்குப் புதிய அனுபவங்களைத் தர, வாழ்க்கையில் புதிய கோணங்களை அவர் உணர வாய்ப்பாக இது அமைந்தது. இந்தப் பயணங்கள் தொடர்ந்தன. பயணங்கள் தந்த அனுபவத்தின் சாராம்சமாக சித்தார்த்தா என்ற காப்பியத்தை இவர் வடித்தார்.

திருமண முறிவுக்குப் பின்னர் பல இடங்களில் பயணித்து பின்னர் சுவிச்சர்லாந்திற்குக் குடிபெயர்ந்தார், அங்குதான் அவரது பல இலக்கிய ஆக்கங்கள் படைக்கப்பட்டன. 1924ம் ஆண்டில் சுவிச்சர்லாந்தின் குடியுரிமை பெற்று ரூத் வாகனர் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணம் மூன்று ஆண்டுகள் தான் நிலைத்தது. பின்னர் வரலாற்றுத்துறை நிபுணரான நினோன் டோல்பின் என்பவரைத் திருமணம் செய்து தன் புது வாழ்க்கையை மீண்டும் 1931ம் ஆண்டில் தொடங்கினார். இவர்கள் உறவு அவரது வாழ்நாளின் இறுதி வரை நீடித்தது.




இரண்டாம் உலகப்போர் ஐரோப்பா முழுமையையும் பாதிக்கச் செய்த ஒரு நிகழ்வு. ஹெர்மான் ஹெஸ்ஸ, நாசி அரசின் மீதான தனது எதிர்ப்புகளை வெளிப்படையாகக் காட்டியதோடு ஜெர்மானிய அகதிகளுக்கு தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து வந்தார். இரண்டாம் உலகப்போர் காலகட்டமான 1946ஆம் ஆண்டில்தான் இவரது இறுதி படைப்பான “The Glass Bead Game” நூலுக்கு நோபல் பரிசு கிடைத்தது. இந்தப்பரிசு அவரது மனித உரிமைக் கருத்துகளை வெளிப்படையாகவும் தைரியமாகவும் உரக்கச்சொல்லும் அவரது இலக்கியப்படைப்புக்காக வழங்கப்படுவதாக நோபல் பரிசுக் குழு அறிவித்து அவரைப் பெருமைப்படுத்தியது. ஹெர்மான் ஹெஸ்ஸேவின் நூல்கள் ஜெர்மனியில் மிகப்பிரபலம் அடைந்தன. ஆனால் பின்னர் அவரது நூல்களுக்கான புகழ் சிறிது சிறிதாக குறையத் தொடங்கி அவரது மறைவு நேரத்தில் அவர் இலக்கிய உலகால் மறக்கப்படுவார் என சிலரால் பேசப்படும் அளவிற்கு அவரது நூல்கள் மேல் விமர்சனம் எழுந்தன. ஆனால் அந்த விமர்சனங்கள் பொய்யாக்கப்பட்டதை காலம் நிரூபித்தது.

அவரது நூல்கள் ஜெர்மனி மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்படுகின்றன. இவரது சித்தார்த்தா என்ற நாவல் தமிழில் திரிலோக சீத்தாராம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு தமிழ் வாசகர்களின் மனத்தையும் கொள்ளைக் கொண்டது. ஞானத்தேடலினை மையமாக வைத்து அவர் புனைந்த இந்த நாவல் பலரது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட காவியமாகத் திகழ்கின்றது.


ஹெர்மான் ஹெஸ்ஸே அவர்களின் பிறந்த இல்லம் ஒரு அருங்காட்சியகமாக கால்வ் நகரில் அமைக்கபப்டுள்ளது. நதி பாயும் ஓர் அழகிய சிற்றூர் இது. இங்கே நகரின் மையப்பகுதியில் ஹெர்மான் ஹெஸ்ஸ அவர்களின் வெண்கல சிலை வருவோரை வரவேற்கும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

அருங்காட்சியகத்தின் முகவரி
Hermann-Hesse-Museum
Marktpl. 30, 75365 Calw,Germany
00 497051 7522

Wednesday, September 7, 2016

71. தேசிய அருங்காட்சியகம், சூரிச், சுவிச்சர்லாந்து (3)

முனைவர்.சுபாஷிணி

ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலம் என்பது ஐரோப்பிய வரலாற்றுக்கு மட்டுமன்றி உலகின் ஏனைய கண்டங்களில் உள்ள நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு சரித்திர நிகழ்வு. ரெனைசான்ஸ், அதாவது மறுமலர்ச்சிக்காலம் எனக்கூறப்படுவது, 1400 தொடங்கி 1600 வரை எனக் கொள்ளலாம். இந்தக் காலகட்டத்தில் தீவிரமான மாற்றங்கள் பல நிகழ்ந்தன. அதில் குறிப்பாக, சமயம், கலை, அறிவியல், கட்டுமானக் கலை, மருத்துவம், தத்துவங்கள், சிற்ப வடிவமைப்புக்கள், கடல் பயணங்கள் எனப் பன்முகத் தன்மையில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தன. அதில் குறிப்பிடத்தக்க ஒரு விசயமாக அமைவது இதுகாறும் ஐரோப்பிய கலாச்சாரமாகவும் கலை வளங்களாகவும் தத்துவக் கருத்துக்களாகவும் இருந்த விசயங்கள் இக்காலகட்டத்தில் தான் பெருமளவில் கேள்விக்குட்பட்டுத்தப்பட்டன. இதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட கலைவடிவங்களும், தத்துவங்களும், தத்துவச்சிந்தனைகளும் கூட கேள்விக்குட்படுத்தப்பட்டு அவற்றினில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு அவை மக்கள் முன்னிலையிலும், சிந்தனையிலும் பொதுவாரியாக முன் வைக்கப்பட்டன. நீண்ட காலங்களாக அங்கீகரிக்கப்பட்ட தத்துவங்களின் மேல் கலந்துரையாடல்கள் முன் வைக்கப்பட்டன. அக்காலத்தில் ஐரோப்பவைத் தாக்கிய ப்ளேக் நோய் ஏற்படுத்திய மரண இழப்பின் உயர்ந்த எண்ணிக்கையின் பயங்கரமும் சேர்ந்து கொண்டு மக்கள் சிந்தனையை வேறு கோணத்தில் செலுத்தியது என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.

ஐரோப்பிய மறுமலர்ச்சி காலம் இத்தாலியில் தான் தொடங்கியது. சிற்ப வடிவமைப்பு, ஓவியங்கள் கட்டிடக் கட்டுமானங்கள் ஆகியவற்றில் முந்தைய வகையிலான ஆக்கங்களுக்கு மாற்றாக புதிய கோணத்தில் இக்கலைப்படைப்புகளைப் படைக்கும் முயற்சிகள் தொடங்கி விரிவடைந்தன. ஒரு சாராரின் ஆதரவைப் பெற்ற அதே வேளையில் பழமைவாத சித்தாந்தங்களில் ஊறிப்போனோருக்கு அதிலும் குறிப்பாக சமய ஸ்தாபனங்களுக்கு, இது கடும் எதிர்ப்பாகவே அமைந்தது.

புதிய கலைப்படைப்புகளை வடித்த சிற்பிகள் தம் புதிய கருத்துகளை, வரைபடங்களாக வரைந்து வைத்த கையெழுத்து படிவங்கள் ஐரோப்பாவின் பல நாடுகளில் இருக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்க ஆவணங்கள் சில சூரிச் தேசிய அருங்காட்சிகத்தில் உள்ளன.



ரோம் நகரின் கொலீசியத்தைச் சுற்றி வடிவமைத்து உருவாக்கப்பட்ட கலைப்படைப்புகளை அதனை மண்ணும் கற்களும் கொண்டு உருவாக்கும் முன்னர், கையெழுத்துப் பிரதியாக வடித்திருக்கின்றனர். இத்தாலியின் ரோம் நகருக்குச் சென்றவர்களுக்கு அங்கே கொலீசியம் அமைந்திருக்கும் பகுதிக்கு அருகே உள்ள கட்டிடங்கள், சிற்பங்கள் ஆகியன நினைவில் இருக்கலாம். அவற்றை உருவாக்கியபோது தயாரித்த அடிப்படை வரைபடங்கள் தொகுக்கப்பட்டு ஒரு நூலாக உருவாக்கப்பட்டது. இவை அனைத்தும் 1400களில் உருவாக்கப்பட்டவையே. இந்த வரைப்படங்களை மாடலாக வைத்துக் கொண்டு சிற்ப வேலைப்பாடுகளையும், கட்டிடங்களையும் உருவாக்கினர். இந்த நூலில் இருக்கும் வரைப்படங்களில் சில 15ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலகட்டத்தில் ஸ்பெயினுக்குக் கொண்டு செல்லப்பட்டன . இதில் உள்ள வரைபடங்கள் காட்டும் கட்டிட மாடல்களின் கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டு அவ்வகையில் புதுமையாக கலை வேலைப்பாட்டுடன் அமைந்த கட்டிட கட்டுமானக் கலை ஸ்பெயின் நாட்டிலும் உருவாக்கம் கண்டது. இதற்கு நல்லதொரு உதாரணமாக அமைவது, க்ரானாடாவுக்கு அருகே உள்ள காலாஹோரா அரண்மனை.



இங்கிருக்கும் மற்றுமொரு அரிய நூல் 1513ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதனை சுவிச்சர்லாந்தின் பாசல் நகரில் நீதிபதியாக பணியாற்றிய போனிஃபாஷியஸ் ஆம்மெர்பாக் என்பவர் உருவாக்கினார். இந்த நூலில் இருப்பவை அனைத்தும் ரோமன் கல்வெட்டுகளின் படியெடுத்த பிரதிகள் போன்றவையே. ரோமன் கல்வெட்டுகளில் மிகவும் ஈர்க்கப்பட்டு ஸ்ட்ராஸ்பூர்க் நகரின் தோமஸ் வூல்ஃப் என்பவர் சேகரித்து வைத்திருந்த கல்வெட்டுகளைப் பார்த்து அதனை நூலில் படியெடுத்து தயாரித்தார். இந்தச் சேகரிப்புகள் அனைத்தும் ரோம் நகரின் பல இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட கல்வெட்டுகள் பதிக்கப்பட்ட கற்களாகும். இந்த ஆவணப்படுத்துதல் பணியை அவரது மறைவுக்குப் பின்னர் திரு.ஆம்மர்பாஹ் அவர்களின் மகன் தொடர்ந்து செய்து வந்தார்.



5ஆம் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் அக்காலகட்டத்தில் ரோமானிய நகரில் உருவாக்கப்பட்ட நூல்கள் பல காணாமல் போயின. ஆயினும் ஆங்காங்கே கிடைத்த சில பழம் நூல்களை அக்காலத்தில் இயங்கி வந்த ரோமன் கத்தோலிக்க மடாலயங்கள் எடுத்து படியெடுத்து பாதுகாத்து வந்தன. இவை ஒவ்வொன்றும் கிடைத்தற்கரிய ஆவணங்களாகத் திகழ்கின்றன. இந்த மடாலயங்கள் அவற்றை ஏதோ ஒரு வகையில் பாதுகாத்திராவிட்டால் அதில் கூறப்பட்ட, பதியப்பட்ட எண்ணற்ற வரலாற்றுத் தகவல்கள் இன்று ஆய்வாளர்களுக்குக் கிடைக்காமல் போயிருக்கும்.


ரெனைசான்சு என்னும் சொல்லிற்கு உள்ள மற்றொரு பொருள் மறுபிறப்பு என்பதாகும். அதாவது கலைப்படைப்புகள், தத்துவச் சிந்தனைகள் ஆகியன மீள்பார்வை செய்யப்பட்டும் அல்லது வேறொரு கோணத்தில் புதுப்படைப்பாக பிரசவிக்கப்பட்ட காலகட்டம் அது என்றும் சொல்லலாம்.

சூரிச் தேசிய அருங்காட்சியகம் இத்தகைய விலைமதிக்க இயலாத பல்வேறு ஆவணங்களைப் பாதுகாத்து வருகின்றது. இங்கே சென்று இங்குள்ள ஆவணங்களையும், பாதுகாக்கப்படும் அரும்பொருட்களையும் பார்த்து வருபவர்களுக்கு ஐரோப்பிய வரலாற்றின் சில பரிமாணங்களைப் புரிந்து கொள்ள முடியும்.




நான் பார்க்க வேண்டும் என பல நாட்கள் காத்திருந்து பார்த்து மிக ரசித்து, பல விசயங்களை அறிந்து கொண்ட ஒரு அருங்காட்சியகம் இந்த சூரிச் தேசிய அருங்காட்சியகம்.

சரி.அடுத்த பதிவில் மேலும் ஒரு நாட்டில் மேலும் ஒரு அருங்காட்சியகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கின்றேன். தொடர்ந்து வாருங்கள்.

Friday, September 2, 2016

70. தேசிய அருங்காட்சியகம், சூரிச், சுவிச்சர்லாந்து (2) (ஜோஹான்னஸ் குட்டன்பெர்க்)

முனைவர்.சுபாஷிணி

அச்சுப்பதிப்பாக்கம் உலக மக்கள் வாழ்வியலில் மாபெரும் சிந்தனைப் புரட்சிக்கு அடித்தளம் அமைத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. மிகக்கடினமான எழுதும் முறையும், ஒரு நூலை உருவாக்க எடுத்துக் கொள்ளப்பட்ட நீண்ட நேரம் என்பதும் கல்வியை குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டும்தான் ஏதுவானதான ஒரு சூழலை இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலுமே ஏற்படுத்தியிருந்தன. அச்சு இயந்திரங்கள் படிப்படியாக பயன்பாட்டில் பரவத் தொடங்கியபின்னர் ஒரு தனி நூல் தயாரிப்பு என்பதற்கு பதிலாக ஒரே அச்சுக்கூடத்தில் ஒரு தயாரிப்பினை மட்டும் கொண்டு பல நூல்களை உருவாக்கலாம் என்ற நிலை உருவானது. இது அதிக அளவில் நூல்கள்பதிப்பாக்கம் பெறுவதற்கு அடித்தளம் அமைத்தது. இதுவே ஐரோப்பாவில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி அது உலகம் முழுவதும் பரவும் நிலையையும் உருவாக்கியது. இப்புரட்சிக்கு ஆதாரமாக அமைந்த அச்சு இயந்திரம் உருவாகி நூற்கள் எண்ணிக்கையில் பலவாக அச்சிடப்பட உருவான காலம் 15ம் நூற்றாண்டாகும்.



அச்சு இயந்திரத்தின் தந்தை என அறியப்படும் ஜொஹான்னஸ் குட்டன்பெர்க் 1436ம் ஆண்டில் அச்சு இயந்திரத்தைப்பற்றி தனது சூழலில் இருந்த ஏனைய சில ஆர்வலர்களுடன் சேர்ந்து தொடங்க முயன்றார். கடும் ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியாக, 1439ம் ஆண்டில் இம்முயற்சி வெற்றி பெற ஆரம்பித்தது. பதிப்புத்துறையில் புரட்சியை ஏற்படுத்திய இந்த முயற்சி தோன்றியபோது முதலில் ஜெர்மனியில் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் நகரமான மைன்ஸ் நகரில் தான் ஒரு அச்சு ஆலை உருவாக்கப்பட்டது. இதனை ஜொகான்னஸ் குட்டன்பெர்க் தொடங்கி நடத்தி வந்தார். அச்சுப்பதிப்பாக்கத்திற்கு வரவேற்பு கூடியபோது, அதாவது 1480ஆம் ஆண்டில் ஜெர்மனி தவிர்த்து ஏறக்குறைய் 270 இடங்களில் ஐரோப்பாவின் பல இடங்களில் அச்சு ஆலைகள் உருவாகின.


அச்சு ஆலைகள், கல்வியும், உலக அறிவும் சமூகத்தில் உள்ள ஒரு சாராருக்கு மட்டுமானதல்ல. அவை எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்ற புரட்சியை உருவாக்கி வெற்றியும் கண்டது. அச்சு இயந்திரங்கள் இல்லாத ஒரு நிலையை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது அல்லவா?

சுவிச்சர்லாந்தைப் பொறுத்தவரை அங்கு குட்டன்பெர்க்கின் அச்சு இயந்திரத்தை வாங்கி சூரிச் நகரில் அச்சு ஆலையை உருவாக்கியவர் கிறிஸ்தோவ் ஃப்ரோஷாவர் (1490 – 1564). ஆரம்ப காலத்தில் அச்சு ஆலைகளில் பைபிள்களே மிக அதிக அளவில் அச்சிடப்பட்டன. இவரது பெயரிலேயே தற்சமயம் சூரிச் நகரின் மையப்பகுதியில் ஒரு சாலையும் இருக்கின்றது. இவர் பைபிள் மட்டுமன்றி, மார்ட்டின் லூதரின் எழுத்துக்கள், சுவிங்லியின் எழுத்துக்கள் ஆகியனவற்றோடு யுராஸ்மூஸ் ஃபோன் ரோட்டர்டாம் அவர்களின் எழுத்துக்களையும் அச்சிட்டவர் என்ற சிறப்பினைப் பெறுகின்றார். இவரது அச்சுப்பணிக்குப் பயன்படுத்தப்பட்ட தாட்கள் அங்கே சூரிச் நகரிலேயே உள்ள லிம்மாட் தாள் தயாரிப்பு ஆலையில் தயாரிக்கப்பட்டன.



சூரிச் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள சேகரிப்புக்களில் ஜொகான்னஸ் குட்டன்பெர்கின் அச்சு இயந்திரம் ஒன்றும் உள்ளது. ஒரு முழு அச்சு இயந்திரம். மரத்தால் உருவாக்கப்பட்ட, இன்னமும் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருக்கும் அச்சு இயந்திரத்தை இங்கே பாதுகாப்பான ஒரு பகுதியில் இங்கே காட்சிக்கு வைத்துள்ளார்கள்.. இங்கே காட்சிக்கு இருக்கும் இந்த அச்சு இயந்திரம் போன்ற வடிவில் உள்ள ஒரு அச்சு இயந்திரம்தான் 16ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்து அங்கே கொல்லத்தில் தமிழின் முதல் தமிழ் அச்சு நூல் உருவாகக் காரணமாகவும் இருந்தது என்பதை நாம் இவ்வேளையில் நினைவுகூரத்தான் வேண்டும்.



இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த அச்சு இயந்திரத்தோடு 16, 17ஆம் நூற்றாண்டு அச்சு நூல்கள் சிலவற்றையும் காட்சிக்கு வைத்துள்ளனர். உலக வரலாற்றில் அறிவுத்தளத்தில், பெரும் புரட்சியை ஏற்படுத்திய இவ்வகைப் பணிகளைப் பற்றி அறிந்து கொள்ளும் போது வியக்காமல் இருக்க முடியவில்லை.



சூரிச் தேசிய அருங்காட்சியகத்தில் இருக்கும் ஏனைய சில அரும்பொருட்களைப் பற்றி மேலும் சொல்கிறேன். தொடர்ந்து வாருங்கள்.