Monday, August 8, 2016

67. பிலடெல்ஃபியா கலை அருங்காட்சியகம், ஃபிலடெல்ஃபியா, வட அமெரிக்கா

முனைவர்.சுபாஷிணி

மேலை நாடுகளில் தங்கள் நாட்டு அரும்பொருட்களைச் சேகரித்து வைப்பது போல அல்லது அதற்கும் சற்று கூடுதலான ஆர்வத்துடன் ஆசிய, ஆப்பிரிக்க தென் அமெரிக்க நாடுகளின் அரும்பொருட்களைச் சேகரித்து வைக்க வேண்டும் என்ற பெரும் ஆர்வம் இருப்பது, இந்த நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களுக்குச் செல்லும் போது உணர முடியும். ஆசிய நாடுகளுக்கே உரித்தான இறைவடிவங்கள், எழுத்து முறை வளர்ச்சி தொடர்பானவை, நூல்கள், இலக்கியங்கள் என்பனவோடு விலை உயர்ந்த கற்கள், பொன், வைடூரிய ஆபரணங்கள் என்ற வகையிலும் தங்கள் சேகரிப்புக்களை இத்தகைய அருங்காட்சியகங்கள் சேகரித்து வைத்துள்ளன. உலகப் பிரசித்தி பெற்ற அருங்காட்சியகங்களில் எகிப்திய பண்டைய நாகரிகத்தின் சின்னங்களும், இந்திய உபகண்டத்தின் சமயச்சின்னங்களும், சீன தேசத்தின் மன்னர்களின் உடமைப் பொருட்களும், ஆப்பிரிக்க தேசத்தின் ஆதிவாசிகளின் நம்பிக்கைக்கு உரிய பொருட்களும் இவ்வகை சேகரிப்புக்களில் முக்கியமானைவையாக இடம்பெறுகின்றன. ஐரோப்பிய நாடுகளின் பெரும் நகரங்களில் உள்ள ஏறக்குறைய அனைத்து அருங்காட்சியகங்களிலும் இத்தகைய சேகரிப்புக்களைப் பார்த்திருக்கின்றேன்.


அண்மையில் வட அமெரிக்கா சென்றிருந்தபோது நான் சென்று வந்த சில அருங்காட்சியகங்களில் இத்தகைய அரும்பொருட் சேகரிப்புக்களைப் பார்த்தேன். அத்தகைய அருங்காட்சியகங்களில் ஒன்றுதான் பிலடெல்ஃபியா அருங்காட்சியகம்.

திரு.நரசய்யா அவர்கள் எழுதி வெளியிட்ட ஆலவாய் நூலை வாசித்த போது மதுரையிலிருந்த ஒரு கோயிலின் சில பகுதிகள் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டதை அவர் குறிப்பிட்டிருந்தது என் நினைவில் இருந்தது. அதனை நேரில் சென்று பார்ப்பதுடன் இங்குள்ள ஏனைய அரும்பொருட்களையும் காணும் ஆவலுடன் இங்கு சென்றிருந்தேன்.



இந்த அருங்காட்சியகத்தின் மூன்றாம் மாடியில் சில கோயில்களின் மண்டபங்களும் கருவறைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. மதுரையிலிருந்து கொண்டு வரப்பட்ட கோயிலில் ஒரு பகுதியானது ஸ்ரீ மதனகோபாலசுவாமி கோயில் மண்டபம். மதுரையிலிருந்து இந்த கோயில் மண்டபத்தை அமெரிக்காவிற்கு கொண்டு வந்திருக்கின்றனர். 1912ம் ஆண்டில் திருமதி அடலீன் பெப்பர் என்பவர் இதனை மதுரையில் காசு கொடுத்து வாங்கியிருக்கின்றார். பின்னர் அவரது மகள் சூசன் பெப்பர் இந்த மண்டபத்தை பிலடெல்ஃபிய அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கியிருக்கின்றார்.


இன்று தான் கோயில் கலைப்பொருட்கள் ஒரு சில சமூக விரோதிகளால் கொள்ளயடிக்கப்பட்டு திருடப்படுகின்றன என்றால் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளிப்படையாக காசு கொடுத்து ஒரு அம்மையார் கோயில் மண்டபத்தையே வாங்கிக் கொண்டு வந்திருக்கின்றார் என்பது திகைக்க வைக்கின்றது தானே. இந்தக் கோயில் நாயக்கர் காலத்தில் அதாவது கிபி 1550ம் ஆண்டு வாக்கில் கட்டப்பட்ட கோயிலென இங்குள்ள குறிப்பில் காணலாம்.

நான் சென்றிருந்த நேரத்தில் இப்பகுதியை சீரமைப்பு செய்து கொண்டிருந்தமையால் என்னால் சரியாகப் புகைப்படம் எடுக்க இயலவில்லை. இருட்டாக ஒளி வெளிச்சம் குறைந்த நிலையில் இருந்ததால் புகைப்படம் சரியாக எடுக்க இயலவில்லை. இவை கருங்கற்களால் ஆன தூண்கள். நாயக்கர் கால அமைப்புடன் கூடியவை. கோயில்களில் நாம் காணும் கற்தூண்களில் பொறுத்திய சிற்பங்கள் என வரிசையாக இவை இங்கே உள்ளன. அருங்காட்சியகத்திற்குள் நம் கண்கள் பழகிய ஒரு கோயிலைக் காண வியப்பாகத்தான் இருந்தது. 1940ம் ஆண்டு தொடங்கி இந்த மண்டபம் பொது மக்கள் பார்வைக்காக இங்கே இருக்கின்றது. இந்த அருங்காட்சியகம் வருவோரின் கண்களுக்கு இது விருந்து.

பிலடெல்ஃபியா கலை அருங்காட்சியகம் திங்கள் தவிர ஏனைய நாட்களில் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். அருங்காட்சியகத்தின் முகவரி, 2600 Benjamin Franklin Parkway, Philadelphia, PA 19130.



ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட பழமையானது இந்த அருங்காட்சியகம். 1876ம் ஆண்டில் தொடங்கப்பட்டு பின்னர் இந்த அருங்காட்சியகத்தின் சேகரிப்புக்கள் படிப்படியாக விரிவாக்கம் கண்டன. இங்குள்ள மேலும் சில அரும்பொருட்கள் பற்றி அடுத்த பதிவில் தொடர்கின்றேன்.

No comments:

Post a Comment