Sunday, November 15, 2015

51. ஆதிகலாமணி எகிப்து கோயில், மட்ரிட், ஸ்பெயின்

முனைவர்.சுபாஷிணி

http://www.vallamai.com/?p=63735

ஆதிகலாமணி எகிப்து கோயில், மட்ரிட், ஸ்பெயின்
ஸ்பெயின் நகரின் தலைநகரமான மட்ரிட் நகரில் பணி நிமித்தமாக 18 மாதங்கள் ஒவ்வொரு வாரமும் செல்லும் நிலை எனக்கு ஏற்பட்டிருந்தது. ஜூலை மாதம் 2012 தொடங்கி 2014 இறுதி வரை இப்படி ஒவ்வொரு வாரமும் பயணம் மேற்கொள்ள வேண்டிய சமயங்களில் மாலை வேளைகளில் கிடைக்கும் நேரத்தில் நான் எனது தங்கும் விடுதிக்கு அருகாமையில் நடைப்பயணம் செல்வதுண்டு. அப்படி செல்லும் போது அடிக்கடி நான் கண்டு தரிசித்த ஒரு கோயில் ஆதிகலாமணி கோயில்.



​கோயிலின் முன் வாசல் தோற்றம்

ஆதிகலாமணி கோயிலா..?
ஸ்பெயின் தலைநகரமான மட்ரிட் நகரிலா?
இது தமிழ்ப்பெயராக இருக்கிறதே?
இந்தியர்கள், அதிலும் தமிழர்கள் கட்டிய கோயிலாக இருக்குமோ என்ற சிந்தனை உங்களுக்கு வரலாம்.

இக்கோயிலைச் சென்றடைந்து அதன் முகப்புப் பகுதியில் உள்ள கோயில் பெயர், கட்டிய ஆண்டு ஆகியன பற்றி அறிந்து கொள்ள விபரங்களை நான் வாசித்த போது ஆச்சரியத்தில் அதிசயித்துப் போனேன், இந்த ஆதிகலாமணி கோயில் என்ற ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பெயரைப் பார்த்து. பெயர் நமக்கு தமிழ்ப்பெயரை நினைவுறுத்தினாலும் இது தமிழர்கள் கட்டிய கோயில் அல்ல. தமிழகத்தில் கட்டிய கோயிலுமல்ல? பிறகு எங்கே யாரால் கட்டப்பட்டதாக இருக்கும் என்ற ஐயம் எழுகின்றதல்லாவா? அதே ஆவல் தான் எனக்கும் எழுந்தது. அதனை அறிந்து கொள்ள கோயிலே அருங்காட்சியமாக இருக்கும் இக்கோயிலுக்குள் சென்றேன்.

இது எகிப்து நாட்டில் கட்டப்பட்ட கோயில். எகிப்து நாட்டின் தெற்குப் பகுதியில் அதாவது சூடான் எல்லைக்கு மேலே ஏறக்குறைய 15 கிமீ தூரத்தில் அஸ்வான் ஏரி என்ற ஒரு மாபெரும் கடலை ஒத்த ஏரியின் பெயரை கேள்விப்பட்டிருப்போம். அந்தப் பகுதியில் இருந்த ஒரு கோயில் தான் இது.

என்ன புதிராக இருக்கின்றதே.. இருந்த கோயில் என்று சொல்கின்றேனே என்ற ஆச்சரியம் உங்களுக்கு எழலாம். ஆம். இது அங்கே இருந்த ஒரு கோயில் தான். முழுமையாக எகிப்திலிருந்து பெயர்த்து எடுத்துக் கொண்டு வரப்பட்டு ஸ்பெயின் நாட்டின் தலைநகராம் மட்ரிட்டின் மையப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. ஆச்சரியத்தில் விழிகள் விரிகின்றதா..? வாருங்கள் ஆலயத்தின் உள்ளே சென்று மேலும் பல விபரங்களை அறிவோம்.

இக்கோயில் ஐசிஸ் எனப்படும் தாய்தெய்வத்திற்காக உருவாக்கப்பட்ட நைல் நதிக்கரை ஓரத்து வளாகத்தில் ஆமூன் என்ற கடவுளுக்காக பிரத்தியேகமாகக் கட்டப்பட்ட கோயில். இது கட்டப்பட்ட காலம் கி.மு 2ம் நூற்றாண்டு. இதனைக் கட்டியவர் தாம் ஆதிகலாமணி [Adikhalamani (Tabriqo)] என்ற குஷைட் பகுதியின் அரசர். ஆதிகலாமணி இக்கோயிலை முதலில் கட்டினாலும் இதனை சிறிது சிறிதாக விரிவாக்கியவர்கள் 4ம் தாலமி, 8ம் தாலமி, 12ம் தாலமி ஆகிய கிரேக்க அரசர்கள். பிறகு எகிப்து ரோமானிய அரசின் ஆட்சிக்குட்பட வேளையில் இதே கோயிலை மேலும் விரிவாக்கினர் மன்னன் ஆகஸ்டஸும் மன்னன் டிபேரியஸும்.

மன்னன் ஆதிகலாமணி ஹார்ப்போக்ரெட்டஸ் வாட்ஜே ஆகிய கடவுளர்களுக்கு நைவேத்தியம் அளிக்கும் காட்சி மேலே கோயிலின் உள்ளே கல்வெட்டாக, கீழே வரை படமாக.








1960ம் ஆண்டு எகிப்தின் விவசாயத்தை வளமாக்க அஸ்வான் ஏரிப்பகுதியில் அணை கட்டும் திட்டம் உருவாக்கப்பட்டது. அஸ்வான் பகுதி எகிப்தை பொருத்த வரை மிகப் பிரமாண்டமான பல கோயில்களையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுச் சின்னங்களையும் கொண்டிருக்கும் பகுதி. ஆக இங்கே இருந்த ஏரியைப் பெரிதாக்கி அணை கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது யுனெஸ்கோ இந்தப் பகுதில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்களை பாதுகாக்கவும், எகிப்திற்கே நீர்வளத்தைப் பெருக்கும் அணையைக் கட்டவும் உதவ கரம் கொடுக்கக்கோரி உலக நாடுகளுக்கு விண்ணப்பம் வைத்தது.

அப்போது ஸ்பெயின் நாடு எகிப்தில் இருக்கு உலகப் பிரசித்தி பெற்ற அபு சிம்பெல் கோயிலை பெயர்த்து எடுத்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் சென்று அங்கே வைத்து எழுப்பி அதனை பாதுகாக்கும் முழு பொறுப்பையும் எடுத்துக் கொண்டு செய்து காட்டியது. எகிப்தின் மிகச்சிறந்த ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 13ம் நூற்றாண்டு எகிப்திய பண்டைய கோயில் அபு சிம்பல்.

ஆக, இந்த மாபெரும் உதவியைச் செய்த ஸ்பெயின் நாட்டிற்கு தமது நன்றியை செலுத்தும் முகமாக தனது கோயில்களில் ஒன்றை எகிப்து நாடு ஸ்பெயின் நாட்டிற்கு வழங்கியது. அது தான் Temple of Debod என அழைக்கப்படும் இந்த ஆமூன் கடவுளுக்காக ஆதிகலாமணி அரசன் கட்டிய கோயில்.

எங்கோ ஒரு மன்னன் கட்டிய கோயில், எங்கோ ஒரு நாட்டில் முழுதாக கொண்டுவரப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது என்பது வியப்பு தரக்கூடிய ஒரு விசயம் அல்லவா?



​கோயிலின் கர்ப்பக்கிருகம்

டெபோட் என்னும் கிராமத்தில் ஆதியில் இக்கோயில் இருந்ததால்  இங்கே மட்ரிட் நகரிலும் இந்தக் கோயில் அதே பெயருடன் அழைக்கப்படுகிறது. கோயிலின் உள்ளே சென்றால் ஒரு பக்கத்தில் ஆமூன் ரா வின் கர்ப்பக்கிரகப் பகுதி அமைந்திருப்பதைக் காண்போம். அடித்தளம் சென்றால் இக்கோயிலின் அருங்காட்சியகத்தைக் காண்போம். இந்த அருங்காட்சியகத்தில் முதலில் இக்கோயில் இருந்த அஸ்வான் நகரப் பகுதிகள், அங்கிருந்து எவ்வாறு இக்கோயில் பெயர்த்து எடுத்துக் கொண்டு வரப்பட்டது, விமானத்தில் எவ்வாறு இக்கோயிலின் முழு பகுதியும் கொண்டு வந்து சேர்க்கப்பட்டன ஆகியன தொடர்பான எல்லாத் தகவல்களும் புகைப்படங்களும் விளக்கங்களுமாக வழங்கப்பட்டுள்ளன.

​கடவுள் ஆமூன் – லேசர் வெளிச்சமாக

மட்ரிட் நகரில் இக்கோயில் இருக்கும் இடத்தின் முகவரி Ferraz, 1 28008 Madrid, Parque del Cuartel de la Montaña
இக்கோயிலைச் சென்று காணவும் உள்ளே உள்ள அருங்காட்சியகம் செல்லவும் கட்டணம் ஏதும் தேவையில்லை.



​கோயில் நுழை வாயில் பகுதி

நான் ஏறக்குறைய ஒவ்வொரு வாரமும் மாலையில் இக்கோயில் இருக்கும் பகுதிக்கு அருகிலேயே தங்கும் விடுதியில் தங்கியிருந்தமையால் இப்பகுதியில் உள்ள பூங்காவிற்கு நடக்கச் செல்வேன். கோயிலின் அழகு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக சூரிய வெளிச்சத்தின் நிலைக்கேற்ப தென்படும். சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் இக்கோயிலின் அழகு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

இக்கோயில் என்ன முதலில் ஈர்த்தமைக்குக் காரணம் இதனைக் கட்டிய அரசன் ஆதிகலாமணியின் பெயர்தான். தமிழ் பெயர் போல ஒலிக்கின்றதே என யோசித்துத் தான் உள்ளே சென்று பார்த்தேன். மேலும் எகிப்தின் தெற்கு பகுதியின் வரலாற்று விபரங்களை அறிந்து கொள்ள முனைந்து நூல்களை வாசிக்க முனைந்த போதும், இணையத்தில் மேலும் என் ஆய்வுகளை மாலை வேளைகளில் தொடர்ந்த போதும் எகிப்தின் எல்லைப் பகுதி நாடான சூடானுக்கும் அதன் அருகே இருக்கும் எத்தியோப்பிய நாட்டிற்கும் தமிழ் இன மக்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை நான் உணர்ந்தேன்.

2007ம்  ஆண்டில் 16 நாட்கள் பயணமாக எகிப்து சென்று 7 நாட்கள் நைல் நதியில் பயணித்து சூடான் வரை சென்றேன். அங்கே செல்லும்போது என்னைப் பார்த்த உள்ளூர் எகிப்திய மக்கள் பலர் என்னைப் பார்த்து நான் நூபியனா என்று வினவினார்கள். காரணம் எனது உடல் தோற்றம் கண்கள் ஆகியவை சூடானிய, எகிப்திய எத்தியோப்பிய மக்களின் சாயலை ஒத்ததாக அவர்கள் கருதியதுதான்.



​2007ம் ஆண்டு என் எகிப்து பயணத்தில் கைரோவில் சியோப் ப்ரமிட்டின் முன்பகுதியில்

எகிப்தின் பண்டைய இறை வழிபாடு, தெய்வ உருவங்கள் ஆகியன பற்றி நான் ஆராய முனைந்தபோது குறிப்பிடத்தக்க ஒற்றுமைகளைக் காணமுடிகிறது. என் எண்ணப்படி பண்டைய எகிப்து, சூடான், எத்தியோப்பிய நாடுகளிலிருந்து வந்த மக்களில் பலர் இன்றைய தமிழக நிலப்பரப்பிற்கு குடியேறி இருக்கலாம். இதனை மேலும் வலுவாக்கும் வகையில் தமிழகத்தில் திருமயம் போன்ற பகுதிகளில் கிடைக்கின்ற பாறை ஓவியங்கள் அமைகின்றன. 2007ம் ஆண்டில் நான் எகிப்தின் லுக்ஸூர், மற்றும் ஏனைய பகுதி ஆலயங்களில் பார்த்த சில பண்டைய எகிப்திய தெய்வ வடிவங்களின் உருவங்களுக்கு ஒத்ததான உருவங்களை தமிழகத்தின் காரைக்குடிக்கு அருகாமையில் இருக்கும் திருமயம் நகரில் உள்ள பாறைகளில் ஓவியங்களாக நான் எனது தமிழகத்திற்கான 2012ம் ஆண்டு பயணத்தில் கண்டு வியப்புற்றேன். இது என்ன இப்படி ஒரு ஒற்றுமை என என்னை திகைக்க வைத்தன அந்த உருவங்கள்.

எகிப்து, சூடான், எத்தியோப்பியா ஆகிய நாடுகளுக்கும் இன்றைய தமிழகத்திற்கும் இருக்கும் ஒற்றுமைகளை ஆராய வேண்டியது வரலாற்று ஆய்வுப் பணிகளில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். தமிழக பல்கலைக்கழகங்களின் வரலாற்று ஆய்வுத்துறையும் தமிழ்த்துறையும் இணைந்து இவ்வகையான ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும். இவ்வகையில் ஆய்வுகள் தொடங்கப்படும் போது இந்த இரு வேறு நிலப்பகுதிகளுக்கும் இடையிலான மொழி, பண்பாட்டு, இறையியல் கூறுகளின் ஒற்றுமைகள் அறியப்பட நிறைய வாய்ப்புகள்  உள்ளன.

No comments:

Post a Comment