Wednesday, September 30, 2015

49. அரிசி அருங்காட்சியகம், கெடா, மலேசியா (2)

முனைவர்.சுபாஷிணி

மிக ரம்மியமான சூழலில் உள்ள புற நகர் பகுதியில் இந்த அரிசி அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு வரும்போதே பசுமையான வயல் வெளியையும் ஆங்காங்கே நிற்கும் காளை மாடுகளையும் பார்த்து ரசித்துக் கொண்டே பயணிக்கலாம்.

12,000 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த அருங்காட்சியகத்தை அமைத்திருக்கின்றனர். மூன்று மாடிகளில் இக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகக் கட்டிடத்தின் வடிவமே நெற்களஞ்சியத்தைக் காட்டுவது போலவும், நெற்பயிர்களின் படங்களுடனும், அலங்கரிக்கப்பட்டுள்ளன. நெற்பயிர்கள் பற்றியும் அரிசி வகைகள் பற்றியும் ஆராய்ச்சி செய்ய யாரேனும் விரும்பினால் எந்த ஐயமும் இன்றி இந்த அருங்காட்சியகத்திற்கு வரலாம். நெற்பயிர் தொடர்பான பல்வேறு தகவல்களை வழங்கும் ஒரு நிலையமாகவும் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.




நெல் பயிர் உற்பத்தி செய்யும் முறை பற்றிய தகவல்கள், வெவ்வேறு வகையான நெல் பயிர்கள், நெல் பயிரிடுவதற்கான விவசாயக் கருவிகள் ஆகியன இங்கு காட்சிப் பொருட்களாகவும் மூன்று தளங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.



நெற்பயிர் உற்பத்தி என்பது இன்றோ நேற்றோ தொடங்கிய ஒரு விசயமல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நெல்பயிரிடுதல் என்பது மக்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக அமைந்திருந்தது. மக்கள் நாகரிகம் அடைய அடைய விவசாயம் என்பதைக் கற்றுக் கொண்டு உணவு தயாரித்தலுக்காகப் பயிரிடுதல் என்பதை வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாகக் கடைபிடிக்க ஆரம்பித்தனர். நெல்பயிரில் இயற்கையாக விளைந்த பயிர்கள் என்பது போக அறிவியல் தொழில்நுட்பத்தின் வழியாக அரிசி வகைகளில் சில நுணுக்கமான அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தி சில வகை அரிசிகள் உருவாக்கப்பட்டதும் விவசாய உலகில் நிகழ்ந்திருக்கிறது.




மலேசிய மக்களின் உணவில் அரிசி மிக முக்கிய உணவாக அமைகின்றது. காலை பசியாறுதலுக்கும் அரிசி உணவு வகை. மதிய உணவுக்கும் அரிசி வகை, மாலை உணவுக்கும் அரிசி வகை. என ஒரு நாள் முழுமைக்குமான உணவுத் தேவைக்கு ஒவ்வொருவரும் அரிசியை மிக அதிகமான அளவில் இங்கே பயன்படுத்துகின்றனர்.



மலேசியா மலாய், சீனர், இந்தியர் என்ற வகையில் மூன்று இனங்களை பெருவாரியாகக் கொண்ட ஒரு நாடு. மூன்றுமே மிகச் சிறந்த உணவு பாரம்பரியத்தைக் கொண்ட இனங்கள்.



காலை, மதியம் மாலை உணவு வகைகள் எனும்போது பல வித்தியாசமான உணவுப் பண்டங்களைத் தயாரிக்கும் முறை அறிந்த இனங்கள் இவை மூன்றும். தமிழர்கள் அரிசியை குழம்புடன் சேர்த்து உண்ணும் சோறு என்ற வகை மட்டுமன்றி அரிசியைப் பயன்படுத்தி தோசை, இட்டிலி, ஆப்பம், ஊத்தப்பம், பணியாரம், வடகம், அப்பளம், என பல வகைப் பலகாரங்கள் செய்கின்றோம். சீனர்கள் அரிசியை குழம்புடன் சாப்பிடுவதோடு, கஞ்சி, நூடல் வகைகள் தயாரிப்பு என்ற வகையில் பயன்படுத்துகின்றனர். மலாய் இனத்தவர்கள் குழம்புடன் சேர்த்த சோறு என்ற ஒரு வகை மட்டுமன்றி மாறுபட்ட வகையிலான உணவுகளைத் தயாரிக்கும் முறை அறிந்தவர்கள்.



ஆக, இந்த மூன்று இனங்களுமே அரிசியை வெவ்வேறு வகையில் தங்கள் அன்றாட உணவில் பயன்படுத்துவதை நன்கு அறிந்து கொள்ளலாம்.

மலேசியா முழுமைக்கும் காலை உணவு எனச் சாலையோரக் கடைகளிலும், சந்தைகளிலும், உணவு விடுதிகளிலும் தேடினால் நமக்கு மிக எளிதாகக் கிடைப்பது நாசி லெமாக் எனும் தேங்காய்ப்பால் சாதமும் கெட்டியான மிளகாய்ச்சாந்து சேர்த்த குழம்பும் இணைந்த ஒரு வகை உணவு.

நாசிலெமாக், அத்துடன் ‘தே தாரிக்’ (மலேசிய வகை தேநீர்) – இதனை மலேசியா செல்லும் ஒவ்வொருவரும் கட்டாயம் சுவைத்துப் பார்க்க மறக்கக் கூடாது.

தொடரும்…

No comments:

Post a Comment