Friday, September 18, 2015

47. கார்ல் மார்க்ஸ் அருங்காட்சியகம் (2), ட்ரியா, ஜெர்மனி


http://www.vallamai.com/?p=62015

சுபாஷிணி

​கார்ல் மார்க்ஸ் பிறந்த  ஊரான ட்ரியா ​மிக அழகிய ஒரு நகரம். மோஸல் நதிக்கரையில் அமைந்திருக்கும் நகரங்களில் ஒன்று இது. இன்றும் இந்த நகரில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ரோமானியப் பேரரசின் கட்டிடங்களின் எச்சங்களைக் காணலாம். போர்ட்டோ நியாக்ரா, 2ம் நூற்றாண்டின் மிகப் பழமையான கேத்திட்ரல், ரோமானிய மாவீரர்களான க்ளேடியேட்டர்கள் போர் செய்யும் அம்ஃபிதியேட்டர் , ரோமானிய அரண்மனையில் பாதாள நீச்சல் குளம் ஆகியவற்றை இவ்வகை உதாரணங்களாகக் கூறலாம். இத்தகைய வரலாற்றுச் சிறப்புக்களோடு அரசியல் தனிச்சிறப்பையும் இந்த நகர் பெறுவதற்குக் கார்ல் மார்க்ஸ் ஒருவர் போதாதா?




கார்ல் மார்க்ஸ் இளம் வயதிலேயே லத்தீன், க்ரீக், டோய்ச், ப்ரென்சு ஆகிய மொழியில் புலமை பெற்றிருந்தார்.  இளமைக் கல்வி முடிந்து பல்கலைக்கழகக் கல்வியை முதலில் அவர் தொடக்கியது போன் (Bonn) பல்கலைக்கழகத்தில் தான். ஆனால் ஓராண்டு மட்டுமே அவரது படிப்பு அங்கு அமைந்தது. பின்னர் பெர்லின் பல்கலைக்கழகத்தில் இவர் தன் கல்வியைத் தொடர்ந்தார். பெர்லினில் படிக்கும் காலத்தில் கோடை விடுமுறைக்கு வந்திருந்த ஒரு நாளில் தான் தன் வாழ்க்கை துணையான ஜென்னியை இவர் சந்திக்க நேர்ந்தது.

ஜென்னி பணக்கார குடும்பத்துப் பெண் என்பதோடு அவர் தந்தை அரசாங்கத்தில் முக்கியப்பதவி வகித்தவர் என்பதும் அவரது குடும்பச் செழுமையைச் சொல்லும். ஆனால் பிற்காலத்தில் திருமணத்திற்குப் பின்னர் கார்ல் மார்க்ஸுடன் அவர் இணைந்திருந்த காலகட்டத்தில்,  அதிலும் குறிப்பாக இங்கிலாந்தில் இருந்த காலத்தில் அவர்களது குடும்பத்திற்கு ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சனைகள் எல்லாவற்றையும் பொறுமையுடன் சமாளித்து, வறுமையில் வாடினாலும் கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்கள் எந்த வகையிலும் பலம் இழக்கா வண்ணம் அவருடன் உற்ற துணையாக இருந்தவர் என்ற பெருமை ஜென்னிக்கு உண்டு.

மார்க்ஸூக்கும் ஜென்னிக்கும் பிறந்த  குழந்தைகளில் இறந்த குழந்தைகள் போக எஞ்சியவர்கள் 4 பேர்.  அவர்களில் 3 பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் அடங்குவர். இவர்கள் திருமணம் முடித்து குழந்தையும் குடும்பமுமாக ஆகிப்போயினர். ஆனால் வாழ்க்கையின் பிற்பகுதியில் பெரும்பாலும் வருமையிலேயே கழித்த ஜென்னி உடல் நோய் முற்றி அதற்கு சரியான மருத்துவம் செய்வதற்கு வசதியில்லாத நிலையில் 1881ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதி இவ்வுலகை விட்டு உயிர் நீத்தார். தனது வாழ்வின் திருமணத்திற்குப் பிந்தைய எல்லா கால நிலையிலும் ஜென்னியுடனேயே கழித்து வந்த மார்க்ஸுக்கு இது ஒரு பேரிழப்பு. ஜென்னி இறந்த போதே  கார்ல் மார்க்ஸின் சக்தியும் பிரிந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதற்குப் பின்னர் கார்ல் மார்க்ஸ் வாழ்ந்தது அடுத்த  15 மாதங்கள் தான். இடையில் இவரது மூத்த பெண் மரணமும் நிகழ அதுவும் மார்க்ஸின் உடல் நிலையையும் மன நிலையையும் மிகப் பாதித்தது. இந்தத் துக்கங்களுடன் 1883ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி கார்ல் மார்க்ஸின் உயிர் உடலிலிருந்து பிரிந்தது. அதே மாதம் 17ம் தேதி லண்டன் ஹைகேட் மயானத்தில் அவரது பூத உடல் அடக்கம் செய்யப்பட்டது.




​உலகில்​ தோன்றிய,  சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுத்த முக்கிய மனிதர்களில் ஒருவர் கார்ல் மார்க்ஸ் என்பது மிககையற்ற கூற்று. புதிய கருத்துக்களை உருவாக்குவதிலும் தத்துவங்களை அலசுவதிலும் நூல்களை வாசிப்பதிலும் அவரது நாட்கள் பல கழிந்தன. அவரது அறை முழுவதுமே புத்தகங்களின் குவியலும், ஒழுங்குபடுத்தப்படா எழுத்துக்கள் அடங்கிய காகிதங்களும் நிரம்பியிருக்குமாம். தன் வாழ்க்கையின் மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு தன் சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி எப்போதும் எவ்வேளையும் முதலாளித்துவத்தின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் சமுதாய அமைப்பினால் உருவாக்கப்பட்டிருக்கும் அரசுகளின் சித்தாந்தங்களை மாற்றுவதற்கான வழிமுறைகளைத் தேடுவதிலும் அவற்றை எங்கனம் செயல்படுத்தி தொழிலாளர்களுக்கு உரிய  வகையில் அவர்கள் உழைப்பு மதிப்பைப் பெறும் நிலையைப் பெற்றுக் கொடுப்பது என்பதிலுமாகவே அவர் சிந்தனை இருந்தது.

கார்ல் மார்க்ஸ் தான் வாழ்ந்த காலத்தில் அரசாலும் சரி அரசாங்க பெரு மனிதர்களாலும் சரி வெறுக்கப்பட்டார் என்று தான் சொல்ல வேண்டும். நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கு இவரது சித்தாந்தங்கள் கேடு விளைவிக்கும் என்று சொல்லி ஜெர்மனி, பிரான்சு, பெல்ஜியம் என இந்த நாடுகள் எல்லாம் அவரை நாட்டிலிருந்து துரத்தின. இதனால் தன் இறுதிக் காலத்தில் இங்கிலாந்தில் தான் இவரது வாழ்க்கை அமைந்தது.

கார்ல் மார்க்ஸின் சித்தாந்தத்தின் நூல் வடிவம்   Das Kapital. டோய்ச் மொழியில் இதனை, "அரசியல் பொருளாதாரத்தின் மீது வைக்கப்படும் விமர்சனம்"  எனக் கொள்ளலாம்.

இந்த நூல் 1967ம் ஆண்டில் அச்சாகி லண்டனிலிருந்து வெளியிடப்பட்டது. இந்த நூல் வெளிவந்த காலத்தில் கார்ல் மார்க்ஸ் அனுபவித்து வந்த கஷ்டங்களுக்கு ஒரு அளவில்லை என்றே சொல்ல வேண்டும். ஏகப்பட்ட கடன். தினமும் கடன் கேட்டு வீட்டு வாசலில் வந்து நிற்கும் கடன்காரர்களின் வசைமொழிகளுக்கிடையேயும், வறுமையில் வாடி பசியால் நலிந்து வாடிக்கொண்டிருந்த தன் மனைவி குழந்தைகளின் உடல் நிலை நலிவினைக் கண்ணுற்றவாறே தான் தனது சிந்தனையின் கருவூலமான இந்த நூலை அவர் படைத்தார். இத்தகைய இன்னல்களுக்கிடையில்,   ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி 1867 ஆண்டு இந்த  புரட்சி சிந்தனை நிறைந்த நூல் வெளிவந்தது என்பதை நினைக்கும் போது மனம் சிலிர்க்கின்றது.

கார்ல் மார்க்ஸின் சித்தாந்தம் ஏற்படுத்திய சிந்தனை அலை மிகப் பெரிது. அது தொழிலாள வர்க்கத்தினிடையே பெறும் வரவேற்பை பெற்ற கருத்தாக புரட்சியாக வெடித்தது. ஜெர்மனி, பிரான்சு என்று மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றில் மிக ஆழமாக மார்க்ஸின் சித்தாந்தங்கள் பரவ ஆரம்பித்தன என்றாலும் முதலாளி வர்க்கத்தினரின் எதிர்ப்பை எளிதில் பெற்றன என்பதும் உண்மையே.



இந்த கார்ல்ஸ் மார்க்ஸ் அருங்காட்சிகம் மிக நன்கு சீரமைக்கப்பட்டு ஒவ்வொரு தளத்திலும் கார்ல் மார்க்ஸ் தொடர்பான வரலாற்றுத் தகவல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இளமை காலத்துத் தகவல்கள் முதல் பகுதியில் அமைக்கப்படிருக்கின்றன. இரண்டாம் தளத்தில் ஜென்னியைப் பற்றிய விபரங்கள், குழந்தைகளின் புகைப்படம்,  அவர்கள் பற்றிய தகவல்கள் என உள்ளன. அதே  தளத்தில் 19ம் நூற்றாண்டு தொழிலாளர் புரட்சி, கார்ல் மார்க்ஸ்  பணியாற்றிய பத்திரிக்கை செய்திகள், அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் ஆகியன புகைப்படங்களோடு வழங்கப்பட்டுள்ளன. கார்ல் மார்க்ஸின் கையெழுத்துப் பதிவுகள், ஜென்னியின் கையெழுத்துப் பதிவாக சில கடிதங்கள், மார்க்ஸின் சில கடிதங்கள் ஆகியனவும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.



அதற்கடுத்த தளத்தில் மார்க்ஸிய சிந்தனை ஜெர்மனியில் மட்டுமன்றி ஏனைய நாடுகளில் உருவாக்கிய தாக்கத்தை விளக்கும் அரிய வரலாற்றுச் செய்திகள் நிறைந்திருக்கின்றன.  உலக வரலாற்றில்  ஜெர்மனியை நினைப்பவர்களுக்கு நாஸி சித்தாந்தம் என்பது தான் உடனுக்குடன் நினைவுக்கு வரும். ஆனால் கார்ல் மார்க்ஸ் என்ற சிறந்த அறிஞனைத் தந்த நாடும் இதே  ஜெர்மனிதான் என்பதை உலகம் மறந்து விடக் கூடாது.

கார்ல் மார்க்ஸ் என்ற மனிதரின் வாழ்க்கையின்  நோக்கமே das Kapital  நூலை உருவாக்குவதற்காகத்தானோ என்ற சிந்தனை தோன்றுவதில் மறுப்பதற்கேதுமில்லை. ஆனால் இந்த நூலை வடிப்பதற்கு வாழ்நாளில் அவர் அனுபவித்த இன்னல்களை நோக்கும் போது, இவை எல்லோருக்கும் நல்ல கற்றல் அனுபவமாக நிச்சயம் அமையும். கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது சித்தாந்தங்களின் தொகுப்பான  das Kapital  நூலையும் இளைஞர் சமூகம் ஒதுக்காமல் கட்டாயமாகக் கற்க வேண்டும்.

அடுத்த பதிவில் மேலும் ஒரு அருங்காட்சியகத்தை அறிமுகப்படுத்துகின்றேன். அதற்காக நாம் மலேசியா செல்லலாம். காத்திருங்கள்!!



















































1 comment: