Wednesday, September 30, 2015

49. அரிசி அருங்காட்சியகம், கெடா, மலேசியா (2)

முனைவர்.சுபாஷிணி

மிக ரம்மியமான சூழலில் உள்ள புற நகர் பகுதியில் இந்த அரிசி அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு வரும்போதே பசுமையான வயல் வெளியையும் ஆங்காங்கே நிற்கும் காளை மாடுகளையும் பார்த்து ரசித்துக் கொண்டே பயணிக்கலாம்.

12,000 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த அருங்காட்சியகத்தை அமைத்திருக்கின்றனர். மூன்று மாடிகளில் இக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகக் கட்டிடத்தின் வடிவமே நெற்களஞ்சியத்தைக் காட்டுவது போலவும், நெற்பயிர்களின் படங்களுடனும், அலங்கரிக்கப்பட்டுள்ளன. நெற்பயிர்கள் பற்றியும் அரிசி வகைகள் பற்றியும் ஆராய்ச்சி செய்ய யாரேனும் விரும்பினால் எந்த ஐயமும் இன்றி இந்த அருங்காட்சியகத்திற்கு வரலாம். நெற்பயிர் தொடர்பான பல்வேறு தகவல்களை வழங்கும் ஒரு நிலையமாகவும் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.




நெல் பயிர் உற்பத்தி செய்யும் முறை பற்றிய தகவல்கள், வெவ்வேறு வகையான நெல் பயிர்கள், நெல் பயிரிடுவதற்கான விவசாயக் கருவிகள் ஆகியன இங்கு காட்சிப் பொருட்களாகவும் மூன்று தளங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.



நெற்பயிர் உற்பத்தி என்பது இன்றோ நேற்றோ தொடங்கிய ஒரு விசயமல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நெல்பயிரிடுதல் என்பது மக்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக அமைந்திருந்தது. மக்கள் நாகரிகம் அடைய அடைய விவசாயம் என்பதைக் கற்றுக் கொண்டு உணவு தயாரித்தலுக்காகப் பயிரிடுதல் என்பதை வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாகக் கடைபிடிக்க ஆரம்பித்தனர். நெல்பயிரில் இயற்கையாக விளைந்த பயிர்கள் என்பது போக அறிவியல் தொழில்நுட்பத்தின் வழியாக அரிசி வகைகளில் சில நுணுக்கமான அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தி சில வகை அரிசிகள் உருவாக்கப்பட்டதும் விவசாய உலகில் நிகழ்ந்திருக்கிறது.




மலேசிய மக்களின் உணவில் அரிசி மிக முக்கிய உணவாக அமைகின்றது. காலை பசியாறுதலுக்கும் அரிசி உணவு வகை. மதிய உணவுக்கும் அரிசி வகை, மாலை உணவுக்கும் அரிசி வகை. என ஒரு நாள் முழுமைக்குமான உணவுத் தேவைக்கு ஒவ்வொருவரும் அரிசியை மிக அதிகமான அளவில் இங்கே பயன்படுத்துகின்றனர்.



மலேசியா மலாய், சீனர், இந்தியர் என்ற வகையில் மூன்று இனங்களை பெருவாரியாகக் கொண்ட ஒரு நாடு. மூன்றுமே மிகச் சிறந்த உணவு பாரம்பரியத்தைக் கொண்ட இனங்கள்.



காலை, மதியம் மாலை உணவு வகைகள் எனும்போது பல வித்தியாசமான உணவுப் பண்டங்களைத் தயாரிக்கும் முறை அறிந்த இனங்கள் இவை மூன்றும். தமிழர்கள் அரிசியை குழம்புடன் சேர்த்து உண்ணும் சோறு என்ற வகை மட்டுமன்றி அரிசியைப் பயன்படுத்தி தோசை, இட்டிலி, ஆப்பம், ஊத்தப்பம், பணியாரம், வடகம், அப்பளம், என பல வகைப் பலகாரங்கள் செய்கின்றோம். சீனர்கள் அரிசியை குழம்புடன் சாப்பிடுவதோடு, கஞ்சி, நூடல் வகைகள் தயாரிப்பு என்ற வகையில் பயன்படுத்துகின்றனர். மலாய் இனத்தவர்கள் குழம்புடன் சேர்த்த சோறு என்ற ஒரு வகை மட்டுமன்றி மாறுபட்ட வகையிலான உணவுகளைத் தயாரிக்கும் முறை அறிந்தவர்கள்.



ஆக, இந்த மூன்று இனங்களுமே அரிசியை வெவ்வேறு வகையில் தங்கள் அன்றாட உணவில் பயன்படுத்துவதை நன்கு அறிந்து கொள்ளலாம்.

மலேசியா முழுமைக்கும் காலை உணவு எனச் சாலையோரக் கடைகளிலும், சந்தைகளிலும், உணவு விடுதிகளிலும் தேடினால் நமக்கு மிக எளிதாகக் கிடைப்பது நாசி லெமாக் எனும் தேங்காய்ப்பால் சாதமும் கெட்டியான மிளகாய்ச்சாந்து சேர்த்த குழம்பும் இணைந்த ஒரு வகை உணவு.

நாசிலெமாக், அத்துடன் ‘தே தாரிக்’ (மலேசிய வகை தேநீர்) – இதனை மலேசியா செல்லும் ஒவ்வொருவரும் கட்டாயம் சுவைத்துப் பார்க்க மறக்கக் கூடாது.

தொடரும்…

Monday, September 28, 2015

48. அரிசி அருங்காட்சியகம், கெடா, மலேசியா (1)

தமிழர்களாகிய நமக்கு அரிசு உணவு என்பது அன்னியம் அல்ல. நாம் தினமும் உண்ணும் அரிசிக்கு ஒரு அருங்காட்சியகமா எனக் கேட்கத் தோன்றலாம்.

ஆச்சரியமாக இருக்கிறதா?

வாருங்கள். மலேசிய நாட்டின் வட பகுதி மாநிலங்களில் ஒன்றான கெடாவிற்கு இப்பதிவின் வழி உங்களை அழைத்துச் செல்கிறேன். மலேசியாவின் நெற்களஞ்சியம் எனப் பிரத்தியேகமாக அழைக்கப்படும் மலேசிய மாநிலம் தான் கெடா.


​கெடா மானிலத்தின் இயற்கை காட்சி (2011)

கண்களை மூடிக் கொண்டு கெடாவை நினைத்துப் பார்த்தால் என் மனக்கண்ணில் ஓடுவது கம்பளம் விரித்தார்போல் பரந்து விரிந்திருக்கும் கெடா மாநிலத்தின் பசுமை கொஞ்சும் நெல்வயல்கள்தாம். கரும்பச்சை மலைகள் சூழவும் இளம்பச்சை வயல்வெளிகள் சூழவும் எங்கும் பசுமை என நம்மை மயக்கும் ஒரு மலேசிய மாநிலம் கெடா.


​​கெடா மாநிலத்தின் நெல் வயல் (2011)

இம்மாநிலத்தின் பெரும்பான்மை மக்கள் மலாய் இனத்தவர்கள். கெடா மாநிலத்திற்கும் தென்னிந்தியாவிற்கும் பல்லாண்டுகள் தொடர்புண்டு என்பதை வரலாற்றை அறிந்தவர்கள் ஒப்புக் கொள்வர். கடாரம் என்றும் இதற்குப் பெயருண்டு எனச் சொன்னால் ராஜேந்திரச் சோழனின் நினைவு பலருக்கு வரலாம். ஆம் 11ம் நூற்றாண்டில் சோழ மன்னன் ராஜேந்திரன் படையெடுத்து வந்து கைப்பற்றி ஏறக்குறைய 99 ஆண்டுகள் ஆட்சி செய்த பகுதிதான் கெடா. அன்று இன்றைய கெடா மாநிலம் மட்டுமன்றி இந்த மாநிலத்தின் வடக்கு தெற்கு கிழக்கு பகுதி மாநிலங்களும் கூட கடாரத்தின் ஒரு பகுதியாக சோழ ஆட்சியில் இருந்தன. அது தமிழர்களுக்கு ஒரு பொற்காலம். ஆனால் இன்றோ நிலைமை வேறு. சரி. அந்த பழம்கதை ஏன் இப்போது? நாம் அருங்காட்சியகத்திற்குச் செல்வோமே..!



​​கெடா மாநிலத்தின் அரிசி அருங்காட்சியகம் – முகப்புப் பகுதி (2011)

உலகின் அதி முக்கிய தானிய வகை அரிசி என்பது மறுக்க முடியாத உண்மை. ஆசிய நாடுகளில் மட்டுமல்ல. ஆப்பிரிக்க கண்டத்திலும் சரி, வட அமெரிக்க, தென் அமெரிக்க கண்டங்களிலும், ஐரோப்பாவிலும் ஆஸ்திரேலியாவிலும்.. எங்கு சென்றாலும் அரிசி உணவு இல்லாமல் இல்லை என்பது இக்கால நிலை. கோதுமையையும் சோளத்தையும் தங்கள் முக்கிய உணவாகக் கொண்டிருந்த ஐரோப்பிய மக்கள் கூட கடந்த முப்பது ஆண்டுகளில் பெருவாரியாக அரிசியை தங்கள் உணவில் இணைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். அரிசி வகைகள் இல்லாத பல்பொருள் அங்காடிகள் இல்லை என தைரியமாகக் கூறலாம். அந்த அளவிற்கு அரிசி பயன்பாடு உலகளாவிய அளவில் விரிவடைந்துள்ளது.



​​​கெடா மாநிலத்தின் அரிசி அருங்காட்சியகம் – முகப்புப்பகுதி (2011)

தற்சமயம் இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் எக்ஸ்போ 2015ன் ஒரு பகுதியில் ஆசிய நாடுகளின் முக்கிய உணவாகச் சித்தரித்து பாசுமதி அரிசிக்கான விரிவான தகவல் மையத்தை வைத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெர்லிஸ் மாநிலத்திலிருந்து கெடா மாநிலத்தை அடையும் நெடுஞ்சாலையில் பயணித்து வந்தால் ஏறக்குறைய 10 கி.மீ தூரத்திலேயே பசுமையான வயல் வெளிகளுக்கு மத்தியிலே இருக்கும் இந்த பிரமாண்டமான அரிசி அருங்காட்சியகத்தை அடையலாம்.



​​​கெடா மாநிலத்தின் அரிசி அருங்காட்சியகம் – நுழைவாயிலில் (2011)

இந்த அருங்காட்சியகத்தின் பெயர் Kedah Paddy Museum. Padi என்னும் சொல்லிற்கு மலாய் மொழியில் அரிசி எனப் பொருள். ஆங்கிலச் சொல்லான Paddy என்பது இந்த மலாய் மொழிச் சொல்லிலிருந்து உருவாகி இருக்க வேண்டும். உலகில் அரிசிக்காக இருக்கும் அருங்காட்சியகங்களென கணக்கிட்டால் மலேசியாவைத் தவிர்த்து ஜப்பான், பிலிப்பைன்சு ஆகிய நாடுகளைக் குறிப்பிடலாம்.

தொடரும்..

Friday, September 18, 2015

47. கார்ல் மார்க்ஸ் அருங்காட்சியகம் (2), ட்ரியா, ஜெர்மனி


http://www.vallamai.com/?p=62015

சுபாஷிணி

​கார்ல் மார்க்ஸ் பிறந்த  ஊரான ட்ரியா ​மிக அழகிய ஒரு நகரம். மோஸல் நதிக்கரையில் அமைந்திருக்கும் நகரங்களில் ஒன்று இது. இன்றும் இந்த நகரில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ரோமானியப் பேரரசின் கட்டிடங்களின் எச்சங்களைக் காணலாம். போர்ட்டோ நியாக்ரா, 2ம் நூற்றாண்டின் மிகப் பழமையான கேத்திட்ரல், ரோமானிய மாவீரர்களான க்ளேடியேட்டர்கள் போர் செய்யும் அம்ஃபிதியேட்டர் , ரோமானிய அரண்மனையில் பாதாள நீச்சல் குளம் ஆகியவற்றை இவ்வகை உதாரணங்களாகக் கூறலாம். இத்தகைய வரலாற்றுச் சிறப்புக்களோடு அரசியல் தனிச்சிறப்பையும் இந்த நகர் பெறுவதற்குக் கார்ல் மார்க்ஸ் ஒருவர் போதாதா?




கார்ல் மார்க்ஸ் இளம் வயதிலேயே லத்தீன், க்ரீக், டோய்ச், ப்ரென்சு ஆகிய மொழியில் புலமை பெற்றிருந்தார்.  இளமைக் கல்வி முடிந்து பல்கலைக்கழகக் கல்வியை முதலில் அவர் தொடக்கியது போன் (Bonn) பல்கலைக்கழகத்தில் தான். ஆனால் ஓராண்டு மட்டுமே அவரது படிப்பு அங்கு அமைந்தது. பின்னர் பெர்லின் பல்கலைக்கழகத்தில் இவர் தன் கல்வியைத் தொடர்ந்தார். பெர்லினில் படிக்கும் காலத்தில் கோடை விடுமுறைக்கு வந்திருந்த ஒரு நாளில் தான் தன் வாழ்க்கை துணையான ஜென்னியை இவர் சந்திக்க நேர்ந்தது.

ஜென்னி பணக்கார குடும்பத்துப் பெண் என்பதோடு அவர் தந்தை அரசாங்கத்தில் முக்கியப்பதவி வகித்தவர் என்பதும் அவரது குடும்பச் செழுமையைச் சொல்லும். ஆனால் பிற்காலத்தில் திருமணத்திற்குப் பின்னர் கார்ல் மார்க்ஸுடன் அவர் இணைந்திருந்த காலகட்டத்தில்,  அதிலும் குறிப்பாக இங்கிலாந்தில் இருந்த காலத்தில் அவர்களது குடும்பத்திற்கு ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சனைகள் எல்லாவற்றையும் பொறுமையுடன் சமாளித்து, வறுமையில் வாடினாலும் கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்கள் எந்த வகையிலும் பலம் இழக்கா வண்ணம் அவருடன் உற்ற துணையாக இருந்தவர் என்ற பெருமை ஜென்னிக்கு உண்டு.

மார்க்ஸூக்கும் ஜென்னிக்கும் பிறந்த  குழந்தைகளில் இறந்த குழந்தைகள் போக எஞ்சியவர்கள் 4 பேர்.  அவர்களில் 3 பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் அடங்குவர். இவர்கள் திருமணம் முடித்து குழந்தையும் குடும்பமுமாக ஆகிப்போயினர். ஆனால் வாழ்க்கையின் பிற்பகுதியில் பெரும்பாலும் வருமையிலேயே கழித்த ஜென்னி உடல் நோய் முற்றி அதற்கு சரியான மருத்துவம் செய்வதற்கு வசதியில்லாத நிலையில் 1881ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதி இவ்வுலகை விட்டு உயிர் நீத்தார். தனது வாழ்வின் திருமணத்திற்குப் பிந்தைய எல்லா கால நிலையிலும் ஜென்னியுடனேயே கழித்து வந்த மார்க்ஸுக்கு இது ஒரு பேரிழப்பு. ஜென்னி இறந்த போதே  கார்ல் மார்க்ஸின் சக்தியும் பிரிந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதற்குப் பின்னர் கார்ல் மார்க்ஸ் வாழ்ந்தது அடுத்த  15 மாதங்கள் தான். இடையில் இவரது மூத்த பெண் மரணமும் நிகழ அதுவும் மார்க்ஸின் உடல் நிலையையும் மன நிலையையும் மிகப் பாதித்தது. இந்தத் துக்கங்களுடன் 1883ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி கார்ல் மார்க்ஸின் உயிர் உடலிலிருந்து பிரிந்தது. அதே மாதம் 17ம் தேதி லண்டன் ஹைகேட் மயானத்தில் அவரது பூத உடல் அடக்கம் செய்யப்பட்டது.




​உலகில்​ தோன்றிய,  சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுத்த முக்கிய மனிதர்களில் ஒருவர் கார்ல் மார்க்ஸ் என்பது மிககையற்ற கூற்று. புதிய கருத்துக்களை உருவாக்குவதிலும் தத்துவங்களை அலசுவதிலும் நூல்களை வாசிப்பதிலும் அவரது நாட்கள் பல கழிந்தன. அவரது அறை முழுவதுமே புத்தகங்களின் குவியலும், ஒழுங்குபடுத்தப்படா எழுத்துக்கள் அடங்கிய காகிதங்களும் நிரம்பியிருக்குமாம். தன் வாழ்க்கையின் மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு தன் சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி எப்போதும் எவ்வேளையும் முதலாளித்துவத்தின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் சமுதாய அமைப்பினால் உருவாக்கப்பட்டிருக்கும் அரசுகளின் சித்தாந்தங்களை மாற்றுவதற்கான வழிமுறைகளைத் தேடுவதிலும் அவற்றை எங்கனம் செயல்படுத்தி தொழிலாளர்களுக்கு உரிய  வகையில் அவர்கள் உழைப்பு மதிப்பைப் பெறும் நிலையைப் பெற்றுக் கொடுப்பது என்பதிலுமாகவே அவர் சிந்தனை இருந்தது.

கார்ல் மார்க்ஸ் தான் வாழ்ந்த காலத்தில் அரசாலும் சரி அரசாங்க பெரு மனிதர்களாலும் சரி வெறுக்கப்பட்டார் என்று தான் சொல்ல வேண்டும். நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கு இவரது சித்தாந்தங்கள் கேடு விளைவிக்கும் என்று சொல்லி ஜெர்மனி, பிரான்சு, பெல்ஜியம் என இந்த நாடுகள் எல்லாம் அவரை நாட்டிலிருந்து துரத்தின. இதனால் தன் இறுதிக் காலத்தில் இங்கிலாந்தில் தான் இவரது வாழ்க்கை அமைந்தது.

கார்ல் மார்க்ஸின் சித்தாந்தத்தின் நூல் வடிவம்   Das Kapital. டோய்ச் மொழியில் இதனை, "அரசியல் பொருளாதாரத்தின் மீது வைக்கப்படும் விமர்சனம்"  எனக் கொள்ளலாம்.

இந்த நூல் 1967ம் ஆண்டில் அச்சாகி லண்டனிலிருந்து வெளியிடப்பட்டது. இந்த நூல் வெளிவந்த காலத்தில் கார்ல் மார்க்ஸ் அனுபவித்து வந்த கஷ்டங்களுக்கு ஒரு அளவில்லை என்றே சொல்ல வேண்டும். ஏகப்பட்ட கடன். தினமும் கடன் கேட்டு வீட்டு வாசலில் வந்து நிற்கும் கடன்காரர்களின் வசைமொழிகளுக்கிடையேயும், வறுமையில் வாடி பசியால் நலிந்து வாடிக்கொண்டிருந்த தன் மனைவி குழந்தைகளின் உடல் நிலை நலிவினைக் கண்ணுற்றவாறே தான் தனது சிந்தனையின் கருவூலமான இந்த நூலை அவர் படைத்தார். இத்தகைய இன்னல்களுக்கிடையில்,   ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி 1867 ஆண்டு இந்த  புரட்சி சிந்தனை நிறைந்த நூல் வெளிவந்தது என்பதை நினைக்கும் போது மனம் சிலிர்க்கின்றது.

கார்ல் மார்க்ஸின் சித்தாந்தம் ஏற்படுத்திய சிந்தனை அலை மிகப் பெரிது. அது தொழிலாள வர்க்கத்தினிடையே பெறும் வரவேற்பை பெற்ற கருத்தாக புரட்சியாக வெடித்தது. ஜெர்மனி, பிரான்சு என்று மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றில் மிக ஆழமாக மார்க்ஸின் சித்தாந்தங்கள் பரவ ஆரம்பித்தன என்றாலும் முதலாளி வர்க்கத்தினரின் எதிர்ப்பை எளிதில் பெற்றன என்பதும் உண்மையே.



இந்த கார்ல்ஸ் மார்க்ஸ் அருங்காட்சிகம் மிக நன்கு சீரமைக்கப்பட்டு ஒவ்வொரு தளத்திலும் கார்ல் மார்க்ஸ் தொடர்பான வரலாற்றுத் தகவல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இளமை காலத்துத் தகவல்கள் முதல் பகுதியில் அமைக்கப்படிருக்கின்றன. இரண்டாம் தளத்தில் ஜென்னியைப் பற்றிய விபரங்கள், குழந்தைகளின் புகைப்படம்,  அவர்கள் பற்றிய தகவல்கள் என உள்ளன. அதே  தளத்தில் 19ம் நூற்றாண்டு தொழிலாளர் புரட்சி, கார்ல் மார்க்ஸ்  பணியாற்றிய பத்திரிக்கை செய்திகள், அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் ஆகியன புகைப்படங்களோடு வழங்கப்பட்டுள்ளன. கார்ல் மார்க்ஸின் கையெழுத்துப் பதிவுகள், ஜென்னியின் கையெழுத்துப் பதிவாக சில கடிதங்கள், மார்க்ஸின் சில கடிதங்கள் ஆகியனவும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.



அதற்கடுத்த தளத்தில் மார்க்ஸிய சிந்தனை ஜெர்மனியில் மட்டுமன்றி ஏனைய நாடுகளில் உருவாக்கிய தாக்கத்தை விளக்கும் அரிய வரலாற்றுச் செய்திகள் நிறைந்திருக்கின்றன.  உலக வரலாற்றில்  ஜெர்மனியை நினைப்பவர்களுக்கு நாஸி சித்தாந்தம் என்பது தான் உடனுக்குடன் நினைவுக்கு வரும். ஆனால் கார்ல் மார்க்ஸ் என்ற சிறந்த அறிஞனைத் தந்த நாடும் இதே  ஜெர்மனிதான் என்பதை உலகம் மறந்து விடக் கூடாது.

கார்ல் மார்க்ஸ் என்ற மனிதரின் வாழ்க்கையின்  நோக்கமே das Kapital  நூலை உருவாக்குவதற்காகத்தானோ என்ற சிந்தனை தோன்றுவதில் மறுப்பதற்கேதுமில்லை. ஆனால் இந்த நூலை வடிப்பதற்கு வாழ்நாளில் அவர் அனுபவித்த இன்னல்களை நோக்கும் போது, இவை எல்லோருக்கும் நல்ல கற்றல் அனுபவமாக நிச்சயம் அமையும். கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது சித்தாந்தங்களின் தொகுப்பான  das Kapital  நூலையும் இளைஞர் சமூகம் ஒதுக்காமல் கட்டாயமாகக் கற்க வேண்டும்.

அடுத்த பதிவில் மேலும் ஒரு அருங்காட்சியகத்தை அறிமுகப்படுத்துகின்றேன். அதற்காக நாம் மலேசியா செல்லலாம். காத்திருங்கள்!!



















































Wednesday, September 16, 2015

46. கார்ல் மார்க்ஸ் அருங்காட்சியகம், ட்ரியா, ஜெர்மனி



ஐரோப்பிய அரசியல் சிந்தனையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சிறப்பு மார்க்ஸியத்திற்கு உண்டு.  அரசாட்சியை மட்டுமே தொடர்ந்து பல ஆண்டுகளாக அனுபவித்து வந்த ஐரோப்பிய நாடுகளில் மக்களின் சிந்தனையில் மாற்றுக்  கருத்தை விதைத்த சித்தாந்தங்களில் மார்க்ஸியம் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றது.  மார்க்ஸியம் என இன்று அழைக்கப்படுகின்ற இந்த அரசியல் சித்தாந்தத்தை வழங்கியவர் கார்ல் மார்க்ஸ். 19ம் நூற்றாண்டின் ஐரோப்பிய சரித்திரத்தை மார்க்ஸின் சித்தாந்தங்களிலிருந்து பிரித்து வைத்துப் பார்ப்பது  இயலாத ஒன்று. அத்தகைய ஆளுமையான கார்ல் மார்க்ஸ் பற்றிய வரலாற்றுச் செய்திகளை வருகை தருகின்ற பார்வையாளர்களுக்கு வழங்கும் கார்ல் மார்க்ஸ் அருங்காட்சியகம் பற்றிய தகவல்களே இன்றைய பதிவாக அமைகின்றது.



கார்ல் மார்க்ஸ் அருங்காட்சியகம் ஜெர்மனியின் ட்ரியா நகரில் அமைந்திருக்கின்றது. இந்த நகரம் மிகப் பழமை வாய்ந்த ரோமானிய பேரரசு கோட்டை கட்டி வாழ்ந்த ஒரு அரச நகர்ப்பகுதி என்ற தனிச்சிறப்பும் கொண்டது. ட்ரியா நகர் அமைந்திருக்கும் இடம் ஏனைய பிற அண்டை நாடுகளான பிரான்சு, லுக்ஸம்பர்க், பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு அருகாமையில் அமைந்திருப்பது அக்காலத்தில் கார்ல் மார்க்ஸ் மட்டுமன்றி ஜெர்மானிய தொழிற்சங்க வாதிகளும், அரசுக்கு எதிர்மறையான அரசியல் சிந்தனை போக்கு கொண்டோருக்கும் ஓர் பெரும் நகரத்திலிருந்து மற்றொரு நகரம் சென்று கலந்துரையாடல்களையும் சந்திப்புக்களையும் நிகழ்த்த மிக ஏதுவாக அமைந்திருந்தது என்பது ஒரு முக்கிய விஷயம்.



கார்ல் மார்க்ஸ் ஜெர்மனியில் பிறந்து தன் இளம் பிராயத்தை ட்ரியா நகரில் கழித்து பின்னர் பெர்லினில் தனது பட்டப்படிப்பை முடித்து தனது இளம் வயதில் குடும்ப  வாழ்க்கையை மீண்டும் ட்ரியாவில் தொடங்கினாலும் அவர்  தன் வாழ் நாளில் ஜெர்மனியை விட்டு ஏனைய நாடுகளில் செலவழித்த ஆண்டுகள் தான் அதிகம். ஜெர்மனியில் தனது அரசியல் சித்தாந்தத்திற்கான அடித்தளத்தை அவர் உருவாக்கிக் கொண்டார்.  பிரான்சில் பணியாற்றிய காலத்தில் புறச் சூழலும் தன் நட்பு வட்டாரமும் ஏற்படுத்திய தாக்கத்தால் ஒரு புரட்சியாளராக வடிவெடுத்தார்.  பின்னர் பெல்ஜியத்தில் சில நாட்கள் அகதி நிலை போன்ற வாழ்க்கை அவரை மட்டுமன்றி ஒட்டுமொத்த குடும்பத்தையும் தாக்கினாலும் தனது கொள்கையில் அவர் எந்த மாற்றத்தையும் செய்து கொள்ளவில்லை. இறுதியில் அவரது இங்கிலாந்து வாழ்க்கை அவரை உலகம் போற்றும் ஒரு பெரும் அறிஞராக வடிவமைத்தது.



கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை சரித்திரத்திலிருந்து பிரிக்கமுடியாத இருவர் என்றால் அது அவரது மனைவி ஜெனியும் அவரது நண்பர் ஃப்ரெடெரிக் எங்கெல்ஸும் என்று தயங்காது கூறலாம். இவர்கள் இருவரும் அவரோடு இணைந்து இருந்தவர்கள் மட்டும் அல்ல. கார்ல் மார்க்ஸிற்கு எல்லா சிரம காலங்களிலும் உடன் துணையாக இருந்து  அவரை உள்ளமும் உடலும் சோர்வடையாது இருக்க உதவியவர்கள்.வரலாறு இவர்களை மறக்காது!


கார்ல் மார்க்ஸ் அடிப்படையில் ஒரு யூத இனத்தவர். அவரது தந்தையார் ஹைன்ரிக் மார்க்ஸ் பின்னர் கிறிஸ்துவ மதத்தை தழுவிக் கொண்டு ட்ரியா நகரிலே வக்கீலாகத் தொழில் புரிந்து வந்தார். மத நம்பிக்கைகள் மிக ஆழமாக வேறூன்றிய காலகட்டத்தில் ஜெர்மனி அப்போது இருந்தது.  இன்றைய ஜெர்மனியிலிருந்து மாறுபட்ட சிந்தனையைக் கொண்ட மக்கள் இருந்த காலகட்டம் அது. வக்கீல் தொழில் மட்டுமல்லாது அரசியலிலும் ஈடுபட்டு வந்தார் ஹைன்ரிக்மார்க்ஸ். ஹென்ரிட்டே என்னும் பெண்மனியை மணந்து மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடந்தி வந்தார். இவர்களுக்கு 1818 மே மாதம் 5ம் தேதி பிறந்தவர் தான் கார்ல் மார்க்ஸ். பிறந்து வளர்ந்து தன் இளமை காலத்தை கார்ல் என்னும் இளைஞன் கழித்த அந்த  இல்லமே இப்போது கார்ல் மார்க்ஸ் அருங்காட்சியகமாக இருக்கின்றது.



ஒரு நாட்டின் எல்லா வளங்களுக்கும் அடிப்படையில் மனித சக்தியே இருக்கின்றது. ஆனால் அந்த உழைப்பாளிகளை விட அவர்களை வைத்து வேலை வாங்கும் முதலாளிகளே பெரும் அளவில் லாபத்தை அனுபவிப்பவர்களாக இருக்கின்றனர். உழைத்து வளத்தைப் பெருக்கும் உழைப்பாளி வர்க்கமோ அந்த வளத்தை அனுபவிக்க இயலாத ஒரு சமூகமாகவே இருக்கின்றது. இது மனித இனத்தில் ஏற்றத்தாழ்வை உருவாக்கும் வகையில் அமைகின்றது.


மக்கள் வாழ்க்கையில் பொருளாதார சமன்பாடு என்பது நடந்தால்தானே ஒட்டு மொத்த சுபிட்சத்தை ஒரு நாடு அனுபவிக்க முடியும்?
மக்களில் பெருவாரியானோர் சுபிட்சமாக இருந்தால் தானே நாடு வளமுடன் இருக்கும்?
ஒரு சிலர் மட்டுமே பொருளாதார அனுகூலங்களை அனுபவிப்பதும் ஏனையோர் வருமையில் வாடி துன்பத்திலும் நோயிலும் கிடந்து அல்லல் படுவதும் மட்டும் நிகழ்ந்தால் அந்த நாட்டில் அமைதி எவ்வாறு நிலவும்?
மக்களின் தொடர்ச்சியான அதிருப்தியானது சமூகப் பிரச்சனைகளான கொள்ளை, போராட்டம் பொருள் சேதம் ஆகியனவற்றில் தான் ஒரு நாட்டை கொண்டு வந்து சேர்க்கும். இது ஒரு ஆரோக்கியமான வளர்ச்சிக்குப் பெரும் தடையாக அல்லவா அமையும்?









































தொடரும்..