Sunday, June 21, 2015

43. அஞ்சல்தலை அருங்காட்சியகம், வாடூஸ், லிக்ஸ்டஸ்டைன்

இளம் பிராயத்தில், பள்ளியில் படிக்கும் காலங்களில், அஞ்சல் தலை சேகரிப்பு என்பது ஒரு சுவாரசியமான பொழுதுபோக்காகப் பலருக்கும் இருந்திருக்கும். எனது அனுபவத்திலும் அப்படியே. முன்பெல்லாம் இணைய வசதி என்பது இல்லாத சூழலில், ஈமெயில் என்பதே என்ன என்று தெரியாத காலகட்டத்தில், வீட்டில் பெற்றோருக்கு வருகின்ற எல்லா கடிதங்களையும் பார்க்கும் போது அதிலிருக்கும் அஞ்சல் தலைகள் தான் என் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தன. கடிதத்தில் இருக்கும் அஞ்சல் தலையை வெட்டி அதனை தண்ணீரில் லேசாக நனைத்து தாளிலிருந்து அகற்றி பின்னர் மிதமான வெயிலில் உலர்த்தி அஞ்சல் தலை சேர்க்கும் ஆல்பத்தில் சேர்த்து விடுவது என் வழக்கம். நம்மில் பலரும் இதே போல செய்தது இப்போது நினைவுக்கு வரலாம்.

அஞ்சல் தலைகளில் பல்வேறு வடிவங்கள் இருக்கின்றன. பொதுவாக நாம் பார்க்கும் பல அஞ்சல் தலைகள் சதுர வடிவமானவை என்றாலும், நீள் சதுரம், முக்கோணம், வட்டம், என்ற வடிவிலும் அஞ்சல் தலைகள் வெளியிடப்படுகின்றன. சிறப்பு வெளியீடுகளாக வருகின்ற அஞ்சல் தலைகள், அதாவது சுதந்திர தின வெளியீடு, முக்கிய அரசியல் தலைவர்களின் பிறந்தநாள் வெளியீடு, அல்லது முக்கிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பு பற்றிய செய்தியை பரவலாக்கும் வகையில் வெளியிடப்படும் அஞ்சல் தலைகள் ஆகியவை  அஞ்சல் தலைகள் சேகரிப்போரின் கவனத்தை எப்போதுமே ஈர்க்கத் தவறுவதில்லை.


​அஞ்சல் அட்டைகள் - இதே அருங்காட்சியகத்தில்

உலகளாவிய அளவில் அஞ்சல் தலை சேகரிப்பு என்பது சிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்களாலும் விரும்பி மேற்கொள்ளப்படும் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. தனி நபர் அஞ்சல் தலைகள் சேகரிப்பு என்பது ஒரு புறமிருக்க, அரசே அஞ்சல் தலைகள் சேகரிப்பிற்காக அருங்காட்சியகங்களை அமைத்து பராமரிப்பதும் உண்டு. அமெரிக்காவின் சில மானிலங்களிலும். கனடா, சுவிஸர்லாந்து, டென்மார்க், பாக்கிஸ்தான், எகிப்து, ஜெர்மனி, மோனாக்கோ, இந்தியா, ஜப்பான், ஹங்கேரி, ஃபின்லாந்து, இங்கிலாந்து மற்றும் சில நாடுகளிலும் அஞ்சல் தலைகளுக்கென்றே பிரத்தியேகமாக அருங்காட்சியகங்கள் இருக்கின்றன.  இதேபோல சுவிஸர்லாந்திற்கும் ஆஸ்திரியாவிற்கும் இடையில் இருக்கும் சிறிய நாடான லிக்ஸ்டஸ்டைன் நாட்டின் தலைநகர் வாடூஸிலும் ஒரு அஞ்சல் தலை அருங்காட்சியகம் இருக்கின்றது.


​அருங்காட்சியக முகப்பு பகுதி

இந்த அருங்காட்சியகம் வாடூஸ் நகரின் மையச் சாலையிலேயே அமைந்திருக்கின்றது. 1930ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த அருங்காட்சியம் முழுமை படுத்தப்பட்டு 1936ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. லிக்ஸ்டஸ்டைன் தேசிய அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும் இது தனித்து இயங்கும் ஒரு அருங்காட்சியகமாகவே அமைந்திருக்கின்றது.



​அஞ்சல்தலை சேகரிப்புக்கள் வரிசையாக அலமாரியில்

இந்த அருங்காட்சியகத்தின் முக்கிய நோக்கமாக லிக்ஸ்டஸ்டைன் நாட்டில் வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகளின் சேகரிப்புக்களே நிறைந்துள்ளன.  1912ம் ஆண்டு தொடக்கம் லிக்ஸ்டஸ்டைன் அரசால் வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகள் அனைத்தும் இங்கு சேகரித்து வரிசை வரிசையான காட்சிப் பலகைகளில் பொறுத்தி கண்ணாடி கதவுகள்  பாதுகாப்பாக வழங்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன. அஞ்சல் தலை சேகரிப்புக்கள் மட்டுமன்றி இங்கு வைக்கப்பட்டிருக்கும் அஞ்சல் தலை தயாரிப்பு பணிகளோடு தொடர்பு கொண்ட கருவிகளும் இங்கு வரும் பார்வையாளர்களுக்குக் கவனத்தை ஈர்க்கும் அம்சங்களாக அமைகின்றன.


​அஞ்சல்தலைகளில் சில..

இந்த அருங்காட்சியகத்தைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர் http://www.postmuseum.li/ என்ற முகவரியில் முக்கிய தகவல்களைப் பெறலாம். நான் இந்த அருங்காட்சியகத்திற்கு இவ்வாண்டு மேமாதத்தில் ஒரு சனிக்கிழமையில் சென்றிருந்தேன். அருங்காட்சியகம் திறக்கும் நேரத்தை அறிந்து செல்வது ஏமாற்றத்தை தவிர்க்க உதவும். திங்கட்கிழமைகளில் இந்த அருங்காட்சியகம் திறப்பதில்லை.


​பழங்காலத்தில் கடிதம் கொண்டு வரும் குதிரை வண்டியின் ஓவியம்

சுவிஸர்லாந்து செல்பவர்கள் வாய்ப்பு கிடைத்து லிக்ஸ்டஸ்டைன் வந்தால் தவறாது இந்த அருங்காட்சியகம் சென்று வரவேண்டும். ஒரு தளத்தில் மட்டுமே சேகரிப்புக்களும் கருவிகளும் இருந்தாலும்  அஞ்சல் தலை தயாரிப்பு பற்றிய விரிவான விளக்கத்தை வழங்க இந்த அருங்காட்சியகம் தவறவில்லை.

சரி.. இந்தஅருங்காட்சியகத்திலிருந்து மற்றுமொரு அருங்காட்சியகத்திற்கு அடுத்த வாரம் அழைத்துச் செல்கிறேன். காத்திருக்கவும்!.

Monday, June 1, 2015

42. நியாண்டர்தால் அருங்காட்சியகம் - டூசல்டோர்ஃப், ஜெர்மனி (3)

நியாண்டர்தால் அருங்காட்சியகம் ஒரு தகவல் சுரங்கமாக திகழ்கின்றது. மனித இனத்தின் படிப்படியான வளர்ச்சியில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ச்சியான இக்காலகட்டத்தில் மனித இனத்தின் பண்டைய பழம்கூறுகளையும் அதன் பொதுத் தன்மைகளையும் வெளிப்படுத்தும் ஒரு காட்சிக் கூடமாகவும் இந்த அருங்காட்சியகம் விளங்குகின்றது.

கற்கால மனிதர்களின் ஈமச்சடங்கு முறைகளை ஆராயும் போது உலகின் பல மூலைகளில் இவ்வகைச் சடங்குகளில் இருக்கும் ஒற்றுமைக் கூறுகளைக் காண முடிகின்றது. பூகோள ரீதியாக மனிதர்கள் நிலப்பரப்பில் பிரிக்கப்பட்டிருந்தாலும் அடிப்படையில் மனித மனம் ஒரே வகையில் சிந்திப்பதைப் பொதுக்கூறுகளாகக் காண முடிகின்றது. உதாரணமாகப் பெருங்கற்காலத்தில் இறந்து போன மனிதர்களின் நினைவாக அமைக்கப்பட்ட கற்திட்டை வடிவங்களைக் கூறலாம். ஐரோப்பிய நிலப்பரப்பில் பிரித்தானியாவில் வரலாற்றாய்வாளர்கள் சுட்டும் stonehenge வடிவங்களைக் இவ்வகையில் இர்க்கும் ஒற்றுமையாகக் குறிப்பிடலாம். இதே போன்ற ஈமக்கிரியை தொல் வடிவங்களைத் தமிழக நிலப்பரப்பிலும் ஆய்வாலர்கள் கண்டுபிடித்துள்ளனர். 



மற்றொரு ஈமக்கிரியை தொல்வடிவம் வட்டக் கல் என்பது. நான் சென்னைக்கு புற நகர்ப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்த ஒரு வரலாற்றுப்பயணத்தில் இவற்றை நேரடியாகக் காணும் வாய்ப்பைப் பெற்றேன். அதே போல கொடுமணல் அகழ்வாய்வுப் பகுதியிலும் இதே போன்ற வடிவங்களைக் கண்டேன்.இதே போன்ற மெகாலித்திக் காலகட்டத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கபப்ட்ட Mystical Circle  எனப்படுபவை பிரித்தானிய தீவுகளில் இருப்பதையும் இங்கே புகைப்படங்களுடன் கூடிய தகவல் வழி இங்கு வருவோர் பார்த்து அறிந்து கொள்ள முடியும்.

தாய் தெய்வ வழிபாடு என்பது தொண்மையான ஒரு வழிபாட்டு முறை. பழம் நாகரிகங்கள் அனைத்திலும் ஏதாகினும் ஒரு வகையில் தாய் தெய்வ வழிபாடு என்பது அமைந்திருந்தது என்பதும் அவற்றின் உருவப் படிமங்களும் உலகின் பல நாடுகளில் அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பதும் வரலாற்று உண்மை.




இதன் தொடர்பில் ஐரோப்பிய நிலப்பரப்பில்  கண்டெடுக்கப்பட்ட தொண்மையான தாய்தெய்வ வடிவங்களை இந்த அருங்காட்சியகத்தில் சிறு தொகுப்பில் காணமுடிகின்றது.  ஆஸ்திரிய நிலப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 25,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தாய்தெய்வ வடிவத்தின் ரெப்ளிக்கா ஒன்றினை இந்த அருங்காட்சியகத்தில் காணலாம். இதன் அசல் வடிவம் ஆஸ்திரியாவின் வீன் அருங்காட்சியகத்தில் இருக்கின்றது. இதனைப் போலவே உக்ரயேன் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட 22,000 ஆண்டு பழமையான ஒரு தாய்தெய்வ வடிவமும் இங்கு உள்ளது.

உலகில் வேறெங்கும் சென்று ஆச்சரியங்களைத் தேடவேண்டியதில்லை. நம்  உடலே ஆச்சரியங்கள் பல கொண்ட ஒரு அற்புதப் புதையல் தான். நம் உடலில் இருக்கும் பாகங்களில் ஒவ்வொன்றும் ஒரு செயலைச் செய்தாலும் பிராதன முக்கியத்துவத்தைப் பெறுகின்ற மூளையானது ஆச்சரியத்தும் மேல் ஆச்சரியம் நிறைந்த ஒன்றாக இருக்கின்றது.  காலங்காலமாக நிகழ்ந்த பரிணாம வளர்ச்சியில் மனித உடலின் வளர்ச்சியில் மனித மூளையில் அளவின் வளர்ச்சி என்பதும் அடங்கும்.  மூளைவின் அளவு பெரிதாகப் பெரிதாக அதன் திறன்களும் அதிகரிக்கின்றன. சிந்தனையின் ஆழமும் சிந்தனைப் பதிவின் திறமும் மூளையின் அளவு பெரிதாகும் போது அதற்குத் தகுந்தார் போல பெரிதாகின்றன. இந்த அருங்காட்சியகத்தில் ஒரு பகுதியில் மனித மண்டை ஓடுகளும் மூளை பற்றிய ஆய்வுகளும் அமைந்துள்ள பகுதியில் இத்தகைய தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. 




மனித இனம் விலங்கினமாக இருந்து பின்னர் வேட்டையாடும் திறனை அமைத்துக் கொண்டு குடும்பம், சமூகம் என வளர்ந்து விவசாயத்தையும் கற்றுக் கொண்டு, அதனை பெருவாரியாக விரிவாக்கி, நாடு, நகரம், அரசியல், ராஜ்ஜியம் என இருந்து பின்னர் மொழி, கலை, வழிபாடு, சடங்குகள், மாந்திரீகம், தத்துவம்  என தன் ஆளுமையை விரிவாக்கிக் கொண்டு,  வர்த்தகம், தொழில் நுட்பம் என்றும் உயர்வடைத்து விட்டது. இந்தத் தொடர் வளர்ச்சி பல போராட்டங்களைக் கடந்து வந்த ஒரு வரலாற்று நிகழ்வு. இது பல தேடுதல்களும் மாற்றங்களும் இருந்தமையால் மட்டுமே சாதிக்க முடிந்த ஒரு வளர்ச்சி.


மாற்றங்களை விரும்பாத, தேடுதலில் ஈடுபடாத ஒரு இனம் வளர்ச்சி பெற முடியாது.  மனித இனத்தின் தேடுதல் தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டும்.

Was ist der Mensch?  (மனிதன் என்பர் யார்?)
Was soll ich tun? (நான் என்ன செய்ய வேண்டும்?)
Was kann ich wissen? (நான் என்ன தெரிந்து கொள்ள முடியும்?)
Was darf ich hoffen? (நான் எதை எதிர்ப்பார்த்திருக்க முடியும்?)
-Immanuel Kant




நமது தேடலையும் தொடர்வோம். அடுத்த கட்டுரையில் மற்றுமொரு நாட்டில் வேறொரு அருங்காட்சியகத்தில்!