Friday, May 22, 2015

40 நியாண்டர்தால் அருங்காட்சியகம் - டூசல்டோர்ஃப், ஜெர்மனி (1)

சுமார் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதகுல வரலாற்றில் ஒரு வளர்ச்சி பதியப்பட்டது. ஹோமோ குழுவகை மனித குலம் கற்களாலும் பாறைகளாலும் உபகரணப் பொருட்களை உருவாக்கும் திறனைப் படிப்படியாக வளர்த்துக் கொண்ட காலகட்டம் அது. இன்று நமக்கு கிடைத்திருக்கும் சில சான்றுகளின் அடிப்படையில் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஹோமோ இரெக்டஸ் (Homo Errectus) மனித இனத்தின் உடற்கூறுகளை ஒத்திருப்பதை அறியமுடிகின்றது. இந்த வகையினர் விலங்கினத்திலிருந்து மாறுபட்ட, அறிவு வளர்ச்சி பெற்ற  ஒரு இனக்குழுவாக இருப்பதை கிடைத்திருக்ககூடிய சான்றுகளின் அடிப்படையில், அதிலும் குறிப்பாக மூளைப்பகுதியில் செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர். ஏனைய விலங்கினங்களிலிருந்து மாறுபடும் வகையில் இவர்களது கால்களின் அமைப்பு, ஓடும் தன்மை ஆகியவையும், இவர்களின் பற்கள் அளவில் சிறியதாக மாற்றம் கண்டதையும், உடலின் மேல் அமைந்திருக்கும் மயிர் மெல்லிதாக மாற்றம் கண்டமையையும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த ஹோமோ இரெக்டஸ் குழுவினர் அடிப்படையில் விலங்கினங்களிலிருந்து மாறுபட்ட வகையில்  கற்களையும் பாறைகளையும் கொண்டு அவர்களின் அன்றாட வாழ்க்கைத்தேவைக்கு அடிப்படையான கருவிகளை உருவாக்கும் திறனை படிப்படியாக வளர்த்துக் கொண்ட இனமாகத் திகழ்கின்றனர்.

ஜெர்மனியின் எஸ்ஸன் மானிலத்தில் டூசல்டோர்வ் அருகே, ஆகஸ்டு மாதம் 1856ம் ஆண்டு, ஒரு சாதாரண நாளில்,  காடுகளைத் தூய்மை செய்யும் ஊழியர்கள் ஃபெல்தோவ் குகைப்பகுதியைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது 16 எலும்புகள் ஒரு பகுதியில் இருப்பதைக் கண்டனர்.  இக்கண்டெடுக்கப்பட்ட எலும்புகளை ஆராய்ச்சிக் கூடத்திற்கு அனுப்பி பரிசோதனைச் செய்தனர். இந்த எலும்புகளை ஆய்வு செய்த யோஹான் கார்ல் ஃபூல்ரோத் அவர்கள் இவை மனித எலும்புகள் தாம் என உறுதி செய்தார். கண்டெடுக்கப்பட்ட போது அக்குகையில் உள்ளே முதுகுப்புறத்தைக்காட்டியபடி  படுத்த நிலையில் இந்த எலும்புக்கூடு குகையின் முன்பகுதியை நோக்கியபடி தலைவைத்து கிடந்ததாக இதனைக் கண்டெடுத்தோர் தெரிவித்த குறிப்பு மட்டுமே உள்ளது.


எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட குகைப்பகுதி (மே 2015)

இது மட்டுமே முதல் முறையாக கண்டெடுக்கப்பட்ட பழமையான மனித எலும்புகள் அல்ல என்பது உண்மை. ஏற்கனவே பெல்ஜியம், கிப்ரால்டா போன்ற நாடுகளிலும் பண்டைய மனித குலத்தின் எலும்புகள் கிடைக்கப்பட்டன என்ற போதும் அவற்றிற்கு இந்த எலும்புக்கூட்டிற்கு செய்யப்பட்ட விரிவான ஆய்வுகளைப் போல ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது முக்கிய விஷயம். 

தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுகளும் அதனைத் தொடர்ந்தார் போல  செப்டம்பர் 1959ம் ஆண்டில் வெளியான சார்ல்ஸ் டார்வினின்  "On the Origin of Species by Means of Natural Selection"  என்ற நூலும் இந்த நியாண்டர்தால் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளை மானுடவியல் ஆய்வுலகில் மிக துரிதமாகப் பிரபலமடைய உதவின.  அப்போதிருந்த பழமை வாத உலகச் சிந்தனையைத் திருப்பிப் போடும் சார்ல்ஸ் டார்வினின் இந்த அதி அற்புத கோட்பாடு, இந்த புதிய கண்டுபிடிப்பை மையப்படுத்தி தொடர் ஆய்வுகள் துரிதமாக மேற்கொள்ளப்பட அடிப்படையை அமைத்துக் கொடுத்தன. மனித இனம் அதன் பழமையான முன்னோர் இனத்திலிருந்து பரிமாணம் பெற்று வளர்ச்சி பெற்று வந்த ஒரு இனம் என்னும் கோட்பாடு இந்த விஞ்ஞான ஆய்வோடு இணைந்து செயலாற்றத் தொடங்கியது.



​அருங்காட்சியகத்தின் முகப்புப் பகுதியில்  (மே 2015)

அதன் பின்னர் இந்த ஆய்வுகள் தொடரப்படவில்லை. இந்த எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட குகைப்பகுதி இருக்கும் இடமும் பதியப்படாத நிலையில் அடுத்தடுத்து ஜெர்மனியில் நிகழ்ந்த யுத்தம், அரசியல் மாற்றம் என்ற வகையில் இந்த ஆய்வு தொடரப்படாமல் மறக்கப்பட்ட ஒன்றாக இருந்த நிலையில்,  1997லும் 2000லும் இரண்டு அகழ்வாய்த்துறையினர் இந்த இடத்தை கண்டுபிடித்தே தீரவேண்டும் என முயற்சி செய்து ஆய்வில் இறங்கினர். ரால்ஃப் ஸ்மித், யூர்கன் தீஸன் ஆகிய இருவருமே அவர்கள். இவர்கள் ஆய்வு தோல்வியில் முடியவில்லை. நிலத்தின் மேல்பரப்பிற்கு 4 அடி கீழே மண்ணையும் பாறைகளியும் தோண்டி எடுத்து ஆய்வு செய்ததில் கற்கருவிகள், விலங்குகளின் எலும்புக்கூடுகள் ஆகியன கிடைத்தன. அவை மட்டுமல்ல மனித இனத்தின் உடல்கூறுகளைக் கொண்ட எலும்புக்கூடுகளும் கிடைத்தன. அதில் முன்பு 1856ல் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளின் மிச்சப்பகுதியும் அடங்கி இருந்தமை ஆய்வாளர்களுக்கு வெற்றிப்பாதயைக் காட்டியது. 


அருங்காட்சியகத்தின் முகப்பு பகுதி (மே 2015)

ஜெர்மனியின் டூசல்டொர்ஃப் நகரில் பசுமையான சூழலில் ஃபெல்தோவ் குகைப்பகுதி அமைந்திருக்கின்றது. அங்கு தான் அழைத்துச் செல்கின்றேன். அருக்காட்சியகத்தைக் காண தொடர்ந்து வருக!

No comments:

Post a Comment