Monday, May 11, 2015

39. பெரியார்-அண்ணா நினைவகம், ஈரோடு, தமிழகம் - பகுதி 3

பெயரில் குறிப்பிட்டிருப்பது போலவே இந்த நினைவகம் பெரியாரின் நினைவுகளோடு அண்ணாவை நினைத்துப் பார்க்கவும் வைக்கும் ஒரு இடமாக அமைந்திருக்கின்றது. தந்தை பெரியார் தொடர்பான வரலாற்றுத் தகவல்கள் அனைத்தும் இக்கட்டிடத்தின் முற்பகுதியில் இடம்பெறுகின்றன. இக்கட்டிடத்தின் பின்பகுதியில் அண்ணா நினைவகம் உள்ளது. இப்பகுதியே பேரறிஞர் அண்ணா அவர்கள் விடுதலை பத்திரிக்கையில் ஆசிரியராகப் பணிபுரிந்த போது வாழ்ந்த இடம் என்ற குறிப்பையும் காண்கின்றோம். இது அலுவலகம் என்ற நிலையின்றி வீடு போலவே உள்ளது. இக்கட்டிடத்தைப் பார்ப்பவர்கள் 20ம் நூற்றாண்டின் மத்தியப்பகுதி கட்டிட அமைப்பை இவ்வீட்டினைப் பார்த்து நன்கு ஒருவர் அறிந்து கொள்ள முடியும்.


நினைவகத்தில் இருக்கும் அறிஞர் அண்ணா சிலையுடன் நான்

சமையல் அறை, உறங்கும் அறை, திறந்த விசாலமான வீட்டின் நடுப்பகுதி, குட்டையான மேற்கூறை பகுதி ஆகியவை அதன் வடிவம் மாறாமல் இங்கே அவ்வாறே வைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியிலும் சுவரில் கண்ணாடி போடப்பட்ட அலமாரிகளுக்குள் அண்ணா தொடர்பான பல தகவல்கள், பத்திரிக்கைச் செய்திகள் ஆகியன இருக்கின்றன. உள்ளே உள்ள ஆவணங்களை புகைப்படம் எடுக்க எனக்கு அனுமதி கிடைக்காததால் அவற்றை இப்பதிவில் பயன்படுத்த முடியவில்லை.


​அறிஞர் அண்ணா வாழ்ந்த பகுதியில் தோழியர் பவளா, டாக்டர்.பத்மாவதி

பேரறிஞர் அண்ணா தந்தை பெரியாருக்கு மிக அணுக்கமாக இணைந்திருந்தவர். தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்று அவரோடு சமூகப் பணிகளில் தம்மைப் பல ஆண்டுகள் ஈடுபடுத்திக் கொண்டவர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்த இவருக்கு அங்கு ஒரு நினவைகம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.  பேரறிஞர் அண்ணாவின் பேச்சாற்றலைப் பற்றி பலரும் அறிந்திருப்பர். தமிழ் மொழி மட்டுமன்றி ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு என வேற்று மொழிகளிலும் புலமை பெற்றவர் இவர். 

அரசியல் தலைவர், பேச்சாளர் என்பது மட்டுமன்றி கலைத்துறையிலும் ஈடுபட்டவர். முற்போக்கு சீர்திருத்த கருத்துக்களையும் கொள்கைகளையும் நாடகங்களின் வழியாகவும் திரைப்படங்களின் வழியாகவும் தமது எழுத்துக்களால் வெளிப்படுத்தி மக்களிடையே முற்போக்கு சிந்தனைகள் வளரச் செய்ததில் முக்கியப் பங்கு இவருக்கு உளளதை மறுக்க முடியாது.  



​​

தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரது நீதிக்கட்சியில் இணைந்து பின்னர் திராவிடர் கழகத்திலும் இணைந்து சமூக விழிப்புணர்வு தரும் பல நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். பெரியாருடன் கொண்ட கருத்து வேறுபாட்டினால் திராவிடர் கழகத்தின் முக்கிய உறுப்பினர்கள் சிலருடன் 1949ம் ஆண்டு விலகி திராவிடர் முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற புதிய இயக்கமொன்றை இவர் நிறுவினார்.  தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சராகவும் அறிஞர் அண்ணா பொறுப்பேற்றிருந்தார். தமது இறுதிக்காலத்தில் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு பிப்ரவரி 2ம் தேதி 1969ம் ஆண்டில் அறிஞர் அண்ணா மறைந்தார்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா இருவருமே தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் ஏற்பட உழைத்தவர்கள். இருவருமே தமிழ்ச்சமூகத்திலே அக்கால கடத்தில் நிறைந்திருந்த மூட நம்பிக்கைகள், பெண் விடுதலை, சாதிக் கொடுமைகள், தீண்டாமை கொடுமை ஆகியன ஒழிய மக்கள் மத்தியில் பல்வேறு வகையில் சிந்தனையைத் தூண்டும் செயல் நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள்.



பெரியார் அண்ணா நினைவகம்

இவர்கள் இருவரையும் நினைவு கூறும் வகையில் அமைந்திருக்கும் இந்த ஈரோடு பெரியார் அண்ணா நினைவகம் நல்லதொரு வகையில் பராமரிக்கப்படும் ஒரு அருங்காட்சியகமாகத் திகழ்கின்றது. ஈரோடு செல்பவர்களும் தந்தைபெரியார் பற்றி அறிந்து கொள்ள விருப்பம் உள்ளவர்களும் இந்த அருங்காட்சியகம் சென்று பார்த்து வரலாம்.



​ஈரோட்டில் இருக்கும் பெரியார் புத்தகக்கடை

ஈரோட்டில் இந்த நினைவகத்தின் அடுத்த பகுதியிலேயே தந்தை பெரியார் நூலகம் ஒன்றும் இருக்கின்றது. பெரியார் எழுதிய நூல்களும் பெரியாரைப் பற்றி வேறு சிலர் எழுதிய நூல்களும் இப்புத்தகக் கடையில் கிடைக்கின்றன. நான் சென்ற போது தந்தை பெரியாரின்  11 சிறு நூல்களை வாங்கிக் கொண்டேன். 

சரி..ஈரோட்டிலிருந்து புறப்பட்டு விட்டோம். அடுத்த கட்டுரையில் உங்களை வேறொரு நாட்டில் உள்ள மேலும் ஒரு அருங்காட்சியகம் அழைத்துச் செல்கிறேன்.. புதிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன... பகிர்ந்து கொள்ள..!

No comments:

Post a Comment