Wednesday, August 20, 2014

35. யொஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகம், வைல் டெர் ஸ்டாட், ஜெர்மனி

முனைவர்.சுபாஷிணி 
பிரச்சனைகள் இல்லாத ஒரு வாழ்க்கை என்பது உண்டா? அதிலும் குறிப்பாக சாதனைகள் பல படைப்போர் வாழ்க்கையில் அவர்கள் சந்தித்து கடந்து வந்த பாதைகள் கரடு முரடானவையாகத் தான் அமைந்திருக்கின்றன. வாழ்க்கை பாடம் கொடுக்கும் அனுபவங்களே ஒரு படி நிலையிலிருது மற்றொரு படி உயரத்திற்கு அழைத்துச் செல்கின்றது.யொஹான்னஸ் கெப்லரின் வாழ்க்கை இத்தகைய கடினமான தடைகள் பல நிறைந்த வாழ்க்கையாகத்தான் அமைந்தது.
jk2
யொஹான்னஸ் கெப்லர்
யொஹான்னஸின் தாயார் காத்தரினா ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் பிறந்தவர். இவருக்கும் ஒரு பிரபலமான வர்த்தகராக அந்த வட்டாரத்தில் திகழ்ந்த ஒரு வர்த்தகரின் மகனான ஹைன்ரிக் கெப்லருக்கும் திருமணம் நடந்தது. ஹைன்ரிக் பாடன் உர்ட்டென்பெர்க் பகுதி பிரபுவிடம் சற்று அனுக்கமாகப் பழகும் சூழல் அமைந்திருந்தாலும் தனது குடிப்பழக்கத்தால் வறுமை நிலையை அடைந்து குடும்பத்தையும் வறுமை வாட்ட காரணமாகிவிட்டார். யொஹான்னஸின் தாயார் காத்தரினா ஒரு முன்கோபம் படைத்தவர் என்றும் சிடுசிடு என்று எல்லோரிடமும் பழகுபவர் என்றும் வர்ணிக்கப்படுகின்றார். இதனால் இவர்களின் சுற்றத்தார் மற்றும் அவர்கள் சூழலில் நல்ல நட்புறவும் அமையாத நிலையே அப்போது சிறுவன் யொஹான்னஸுக்கு அமைந்தது. புதிய இடம் புதிய பாதையைக் காட்டலாம் என்ற முடிவில் ஹைன்ரிக் தன் மனைவியுடனும் யொஹான்னஸுடனும் நெதர்லாந்துக்குப் பயணமானார். ஆனால் அங்கும் இவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல மாற்றம் அமையவில்லை. மனம் உடைந்து இவர்கள் மீண்டும் தங்கள் கிராமமான ஜெர்மனியின் வைல் டெர் ஸ்டாட் கிராமத்துக்கே வந்து சேர்ந்தனர்.
இந்த காலகட்டத்தில் தான் காத்தரீனாவின் அத்தை ஒருவர் விஷம் வைத்து ஒருவரை கொன்று விட்டார் என்று கைதாகி விசாரணைக்குப் பின் ஒரு சுனியக்காரி என்று அறிவிக்கப்பட்டு உயிருடன் எரிக்கும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். இது அவர்கள் குடும்பத்தில் எவ்வகை துயர சூழலை உருவாக்கியிருக்கும் என்று நம்மால் ஓரளவு ஊகிக்க முடிகின்றது. இந்த பிரச்சனைகளுக்கு இடையில் யொஹான்னஸின் கவனமும் கல்வியின் மீதான ஆர்வமும் அதிகரித்துக் கொண்டேயிருந்ததே தவிர குறையவில்லை. தனது திறமையின் காரணமாக மானில பிரபுவின் பிரியத்துக்குள்ளான சிறுவர்களில் ஒருவராக யொஹான்னஸ் திகழ்ந்தார். இதனால் ட்யூபிங்கன் பல்கலைக்கழகத்தில் உபகாரச் சம்பளம் பெற்று படிக்கும் நல்வாய்ப்பையும் இவர் பெற்றார்.
jk1
கெப்லர் வாழ்க்கை குறிப்பு
இத்தருணத்தில் தான் யொஹான்னஸின் தந்தை யாரிடமும் சொல்லாமல் தன் வீட்டிலிருந்து வெளியேறி ஆஸ்திரிய நாட்டின் படையில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது துருக்கிக்கு எதிராக போர் நிகழ்ந்து கொண்டிருந்தமையால் அதற்குப் படையில் உழைக்க ஆட்கள் தேவைப்பட, வீட்டில் சொல்லாமலேயே புறப்பட்டு போய்விட்டார் ஹென்ரிக். தந்தையை இழந்தாலும் யொஹான்னஸின் கல்வி முயற்சிகள் பாதிப்படையவில்லை. தமது 20 வயதிற்குள்ளேயே பல்கலைக்கழத்தில் பட்டம் பெற்று சிறந்த ஆய்வாளராக உருவாகிக் கொண்டிருந்தார் யொஹான்னஸ்.
வின்வெளி ஆராய்ச்சி, சோதிட ஆராய்ச்சி இவையிரண்டும் தனித்தனி துறைகளாக வளர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது. இந்த இரண்டு துறைகளிலும் தக்க பாண்டித்தியம் பெற்றிருந்தார் யொஹான்னஸ். 17ம் நூற்றாண்டின் உலகின் தலைச் சிறந்த அறிவியல் ஆய்வாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் யொஹான்னஸ். அறிவியல் புரட்சிக்கு வித்திட்ட மிக முக்கியமானவர்களில் ஒருவர் இவர் என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மை. இவரது ஆய்வின் கண்டுபிடிப்புக்களான Mysterium cosmographicum, Astronomia nova, Harmonice Mundi அனைத்துமே மிக முக்கிய அறிவியல் ஆய்வுகளின் பட்டியலில் இடம் பெறுபவையாக அமைகின்றன. வானியல் துறை நிபுணராக இருந்தாலும் ஜோதிட குறிப்புக்களைக் கணித்துக் கொடுக்கும் வழக்கத்தையும் தொழிலாகவும் இவர் செய்து வந்தார். இந்த ஜோதிடக் கணிப்பு செய்யும் வேலையே இவரது ஜீவனத்துக்கும் வழியாக சில காலங்கள் அமைந்தது.
jk4
16ம் நூற்றாண்டு லத்தின் மொழி வகுப்பு – பள்ளி வகுப்பறை
வானியல் ஆய்வுக் கோட்பாடுகளை வெளியிட்டு யொஹான்னஸ் அறிவியல் புரட்சி செய்யத் தொடங்கியிருந்த சமயத்தில் தான் இவரது தாயாரின் தொடர்பில் ஒரு பிரச்சனை எழுந்தது. ஒரு சிறிய பூசலில் இவரது தாயாரை அக்கிராமத்துப் பெண் ஒருவர் விஷம் கொடுத்து இவர் கொல்லப்பார்க்கின்றார் எனக் குற்றம் சாட்ட அது அப்போதைய அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டு காத்தரினா ஒரு விட்ச் என வழக்காடு மன்றத்தில் அறிவிக்கப்பட்டு அவர் சிறைப்படுத்தப்பட்டார். இது 1620 ஆண்டு நடந்தது. மூலிகை தாவரங்களை உடல் நோய் தீர்க்க உபயோகித்தல், நாட்டு வைத்திய மருந்து தயாரித்தல், அதனை பிறருக்கு கொடுத்து சோதித்தல், நோயை இத்தகைய மூலிகைகளைக் கொண்டு குணமாக்க முயற்சி செய்தல் போன்றவை அக்காலத்தில் மிகக் கடினமான தண்டனைக்கு உட்படுத்தக்கூடிய சட்டமாக இருந்தது. இப்படி செய்வோர் விட்ச் என அறிவிக்கப்பட்டு வழக்கு பதியப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை கிடைப்பது வழக்கம். தண்டனைகள் பொதுவாக உயிருடன் எரித்துக் கொல்வது அல்லது இவர்களை ஒரு மரத்தில் வைத்து கட்டி ஓடும் ஆற்று வெள்ளத்தில் தூக்கிப் போட்டு விடுவது என்பதாக இருக்கும்.
jk3 (1)
16ம் நூற்றாண்டு லத்தீன் வகுப்பில் மாணர்கள் ஆசிரியரிடம் பாடம் கேட்பதைக் காட்டும் ஓவியம்
ஆக தன் தாய்க்கு எதிராக தொடரப்பட்டிருக்கும் வழக்கைப் பற்றி அறிந்து, இதனைக் கேள்விப்பட்டு பதைத்துப் போய் யோஹான்னஸ் லின்ஸ் நகரில் தான் மேற்கொண்டிருந்த ஆராய்ச்சிப் பணிகளை விட்டு வைல் டெர் ஸ்டாட் நகருக்கு திரும்பி வந்து தனது தாயாரை குற்றத்திலிருந்து விடுவிக்க முயற்சிகள் மேற்கொண்டார். தனது பல்கலைக்கழக நண்பர் கிறிஸ்தஃபர் பெசோல்டஸின் உதவியால் தனது தாயார் மூலிகை மருந்து தயாரித்து விஷம் கொடுத்து கொல்லும் விட்ச் அல்ல என நிரூபித்து அவருக்கு தண்டனையிலிருந்து விடுதலையும் பெற்று தந்தார். ஏறக்குறைய ஓராண்டுகள் இந்த வழக்கு நடைபெற்று அதாவது 1621ம் ஆண்டு தண்டனையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு சிறையிலிருந்து வெளியே வந்தார் கத்தரீனா. ஆயினும் பல மனக் குழப்பங்கள் இவருக்கு நீடித்துக் கொண்டிருந்ததால் அடுத்த ஆண்டே இவர் இறந்தார் என்றும் அறிகின்றோம்.
யோஹான்னஸ் கெப்லெர் அறிவியல் உலகுக்கு அளித்த கொடைகள் ஏராளம் என்றாலும் தனது வாழ் நாள் முழுமைக்கும் வருமையிலே தான் அவரது வாழ்க்கை நிலை அமைந்தது.
தொடரும்..
குறிப்புகள்

No comments:

Post a Comment