Monday, December 30, 2013

20. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் - தாய்லாந்து

முனைவர்.சுபாஷிணி 


இந்த அருங்காட்சியகம் பற்றிய தொடரில் உங்களை நான் இன்று அழைத்துச் செல்லவிருப்பது தாய்லாந்திற்குத்தான்!

பொருளாதாரப் பிரச்சனைகள்; அரசியலில் நேர்மையற்ற நிலை; சிறுபாண்மையினர் சமூகத்தின் தேவைகள் வாக்களித்தபடி நிறைவேற்றப்படாத ஏமாற்றம்; ஐரோப்பிய ஆஸ்திரேலிய சுற்றுப் பயணிகளின் வரவை மையமாக வைத்து இயங்கும் விபச்சார விடுதிகள் – இவை தற்போதைய தாய்லாந்தைப் பற்றி அடிக்கடி ஊடகங்களின் வழி நாம் கேள்விப்படும் செய்திகள்.  ’இது மட்டுமா தாய்லாந்து?’ என நினைப்பதே கூட தவறு என நம்மை திகைக்க வைக்கின்றது நேரடியாக இங்கு பார்க்கும் போது.

இந்தப் பதிவு ஒரு வகையில் வித்தியாசமானதொரு பதிவு என்றே சொல்வேன். ஏனெனில், இப்பதிவை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்வதும் தாய்லாந்தின் தெற்குப் பகுதி  நகர் ஒன்றிலிருந்து தான் என்பதால்.

இந்தியா, சீனா என்ற இரண்டு பெரிய பண்பாட்டு, நாகரிக செழுமை நிறைந்த நாடுகளுக்கு இடையே அமைந்திருக்கின்றது தாய்லாந்து. இவ்விரண்டு பெரிய நாடுகளின் சமய, பண்பாட்டு, வாழ்வியல் தாக்கங்களின் விளைவாகவும், அதனால் விளைந்த ஒரு கலவையாகவும், ஆனால், அதே வேளை ஒரு தெளிவான தனித்துவம் ஒன்றினையும் பேணும் ஒரு கலாச்சாரத்தைக் கொண்டதாகவும் தாய்லாந்து திகழ்கின்றது.

இன்னொரு சிறப்பும் இந்த நாட்டிற்கு இருப்பதை குறிப்பாகக் காண்கின்றேன். காலனித்துவ ஆட்சியில் சிக்கி சில நூற்றாண்டுகள் தவித்த ஏனைய அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனிசியா போலல்லாது ஐரோப்பியர் வசம் தம் நாட்டை  இழக்காத ராஜ்ஜியத்தைக் கொண்டிருந்த நாடு இது.  அதிலும் குறிப்பாக இங்கிலாந்து, ஹாலந்து ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க கைப்பற்றும் முயற்சிகள் அனைத்தையும் முறியடித்து ஐரோப்பிய காலனித்துவ ஆட்சி என்பதே இல்லாமல் சுய ஆட்சியிலேயே தொடரும் ஒரு பெரும் நாடு இது என்பதே ஒரு தனிப் பெருமை.

இன்றைய இந்தோனிசியாவின் ஒரு தீவான சுமத்ராவிலிருந்து தாய்லாந்தின் தென் பகுதி வரை ஸ்ரீவிஜயா அரசு 10ம் நூற்றாண்டு வரை பரந்து விரிந்திருந்தது. அப்பேரரசும் கொஞ்சம் கொஞ்சமாக பலமிழக்க அதனைப் பயன்படுத்திக் கொண்டு,  போரிட்டு வெற்றி பெற்ற தாய் அரசு இப்போதைய அயோத்யாவில் தனது நாட்டின் முதல் தலைநகரை அமைத்து ஆட்சியைத் தொடங்கியது.  அதன் பின்னரும் கூட பற்பல போர்கள்,  குறிப்பாக பர்மா மற்றும் சீன மலைப்பகுதி அரசுகள் தொடர் தாக்குதல்களை நிகழ்த்தினாலும் கூட, தாய் அரசாட்சி என்பது மட்டும் மறையாமல்,  இன்றும் மன்னராட்சியுடன் கூடிய மக்களாட்சி தொடர்கின்றது.

இந்த ஆண்டு இறுதியையும் 2014ம் ஆண்டின் தொடக்க நாட்கள் சிலவற்றையும் தாய்லாந்தின் சில நகரங்களுக்குப் பயணித்து இந்நாட்டின் வரலாற்று கலாச்சார பின்னனியை அறிந்து கொள்ள வேண்டும் என்றும், தாய்லாந்தின் இயற்கை சூழலில் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு நானும் என் கணவரும் தாய்லாந்து வந்தோம்.  மிக அன்பான ஒரு சுற்றுலா பயண வழிகாட்டி தாய் பெண்மணி ஒருவருடன் 22 பேர் கொண்ட ஜெர்மானிய சுற்றுலா குழுவில் இணைந்து பாங்கோக் தொடங்கி அயோத்யா, சுக்கோத்தை, லம்பாங், சாங் ராய், சாங் மை, லோக் புரி, காஞ்சனாபுரி, சா ஆம் ஆகிய இடங்களுக்கு இப்பயணக்குழுவினருடன் 15 நாட்கள், 2800 கிலோமீட்டர் தூரம் வடக்கு மேற்கு தெற்குப் பகுதிகளில் பயணித்து விட்டு தற்சமயம் கோ சாமூய் தீவிலிருந்து இப்பதிவினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தாய்லாந்தின் அருங்காட்சியகங்களைப் பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு முன்னர் இந்த நாட்டின் வரலாற்றுப் பின்னணியைப் பற்றியும், நாட்டினைப் பற்றியும் சிறிது அறிந்து கொள்வது உதவலாம் என்பதால் ஒரு சிறு குறிப்பு.

பௌத்தம் தாய்லாந்தின் அதிகாரப்பூர்வ மதம்.  அதிலும் நாட்டின் மக்கள் தொகையில் 80% பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவர்கள். ஏனையோர் தாவோயிசம், ஹிந்து சமயம், கத்தோலிக்க கிறிஸ்துவ சமயம் என்ற வகையில் அமைந்துள்ள நாடு இது. இந்த 80% பௌத்தர்களில் ஏறக்குறைய 96 விழுக்காட்டினர் தேரவாத புத்த சமயத்தைப் பின்பற்றுபவர்கள். ஏனையோர் மஹாயானா பௌத்தத்தைப் பின்பற்றுவோர்.

தாய்லாந்து ஒரு அதிசயமான நாடு.

தேரவாத பௌத்தம் என்றாலும் மிகக் கட்டுப்பாடான வகையில் இந்த வகை பௌத்தத்தை கடைப்பிடிப்பது என்பது இங்கு நடைமுறையில் இல்லை.  பல வழக்குகளை இணைத்துக் கொண்டு புதுமையான ஒரு பௌத்த நெறியாக இங்கே பௌத்தம் நடைமுறையில் திகழ்கின்றது.



இரண்டு பௌத்த பிக்குகள் – சந்தையில்

இங்கு பிறக்கும் பௌத்த குடும்பத்து ஒவ்வொரு ஆணும் தம் திருமணத்திற்கு முன்னர் குறைந்தது மூன்று மாதங்களாவது ஒரு பௌத்த ஆலயத்தில் இணைந்து புத்த பிக்குவாக நியமங்களை அனுஷ்டிக்க வேண்டும் என்பது வழக்காக உள்ளது. சமூகத்தளத்தில் அதி உயரத்தில் இருக்கும் மன்னர் முதல் சாதாரண மக்கள் வரை அனைவருக்கும் உள்ள ஒரு விதி இது. இன்றைய மன்னர் பூமிபோல் அவர்களும் புத்த பிக்குவாக சில காலம் இருந்தார் என்பது குறிப்பிடப்பட  வேண்டிய ஒன்று. பெண்களும் வெள்ளை ஆடை உடுத்தி பெண் பிக்குணிகளாக தாம் விரும்பும் எக்காலத்திலும் ஒரு பௌத்த சங்கத்தில் தம்மை இணைத்துக் கொள்ளலாம். ஆணோ பெண்ணோ, தாங்கள் விரும்பும் வரை புத்த பிக்கு, பிக்குணிகளாக இருந்து விட்டு மீண்டும் சங்கத்திலிருந்து வெளியேறி சம்சார வாழ்க்கையில் தம்மை இணைத்துக் கொண்டு தம் வாழ்க்கையைத் தொடரலாம். இதற்கு சங்கத்திலும் சரி குடும்பத்திலும் சரி எத்தடையும் இல்லை. புத்த பிக்குகளுக்கும், பிக்குணிகளுக்கும் உணவு வழங்குவதையும் ஆலயங்களுக்கு நன்கொடை கொடுப்பதையும் மனதார அன்போடு செய்கின்றனர் தாய் மக்கள்.  அனாதையாகத் திரியும் பிராணிகளை எங்கேனும் கண்டால் அவற்றை அருகில் உள்ள புத்த விகாரைகளுக்குக் கொண்டு சென்று சேர்க்கின்றனர். அங்கே அப்பிராணிகள் பாதுகாக்கப்படுகின்றன.

இங்கு என்னை அதிசயத்தில் ஆழ்த்திய ஒன்று…

பௌத்த ஆலயங்களாகட்டும் கட்டிடங்களின் முன்புற வாசலாகட்டும், தனியார் வீடுகளாகட்டும், தங்கும் விடுதிகளாகட்டும், சாலையின் சந்திகளாகட்டும் – எங்கு நோக்கினும் விநாயகரின் மாபெரும் சிலைகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. புன்னகை பூத்த முகத்துடன் நர்த்தனமாடிக் கொண்டும் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டும் அழகாகக் காட்சியளிக்கும் விநாயகர் சிலைகள் ஒரு அதிசயம் என்றால் இன்னும் வியப்பில் ஆழ்த்துவது தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் போன்ற இடங்களில் வாசலில் இருக்கும் சிவபெருமான் சிலைகள் தாம். தாய் மக்கள் சிவபெருமானையும் விநாயகரையும் அதிர்ஷ்டத்தை தரும் தெய்வங்களாக இங்கே கருதுகின்றார்கள்.  அதே போல எல்லா இடங்களிலும் பிரம்மாவின் சிலைகள்.  விஷ்ணுவின் ஒரு அவதாரமாக புத்தரை தாய் மக்கள் கருதுவதால் இங்கு தனியாக விஷ்ணுவுக்கு சிலைகள் இல்லை. ஹிந்து சமயத்தின் மும்மூர்த்திகளே இங்கே தாய்லாந்தின் பௌத்த வழிபாட்டு நடைமுறையில் வித்தியாசமான முறையில் கலந்து விட்டனர் என்பதே ஆச்சரியமளிக்கின்றது அல்லவா?


விநாயகர் ஒய்யாரமாய் ஒரு உணவு விடுதியின் முன்னே

தாய்லாந்தில் நான் பார்த்த பெரிய சிறிய நகரங்கள் அனைத்திலும் புத்த விகாரைகள் எண்ணற்றவை உள்ளன.  ஒவ்வொரு கோயில்களிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட புத்தர் சிலை வடிவங்கள் நிறைந்திருக்கின்றன.  கோயிலைச் சுற்றி பல புத்தர் சிலை வடிவங்கள் தியான நிலையில் இருப்பது போல அமைந்திருந்தாலும்,  கோயில் மூலஸ்தானத்தில் ஏதாகினும் ஒரு வடிவில் சிறப்பான புத்தர் சிலை என்பது அமைந்திருக்கின்றது. சில ஆலயங்களில் இருபது கோண தங்க நிற ஸ்தூபம் தனிக் கோயில் போன்று வடிக்கப்பட்டு மைய வழிபாட்டு அம்சமாக கோயிலில் அமைந்திருக்கின்றது.

புத்தரின் உருவச் சிலைகள் எனும் போது பொதுவாக ஐந்து வகைகள் இருக்கின்றன. தியான வடிவில் புத்தர்; அனந்த சயனத்தில் புத்தர்; நின்ற வடிவில் புத்தர்; நடக்கும் வடிவில் புத்தர்; ஞானம் வழங்கும் வடிவில் புத்தர் இப்படி.

கி.பி. 3ம் நூற்றாண்டு தொடக்கம் பௌத்தம் இங்கு பரவி காலூன்றி செழித்தது என்று அறிந்து கொண்டேன். அதிலும் குறிப்பாக ஸ்ரீ லங்கா, பர்மா, தீபெத் ஆகிய நாடுகளிலிருந்து சியாம் (அப்போதைய தாய்லாந்து)  வந்த பிக்குகளின் முயற்சியால் இங்கு பௌத்தம் அறிமுகமாகியது. இப்படி பல நாடுகளின் தாக்கம் என்பது இருந்தாலும் இங்கு புழக்கத்தில் உள்ள பௌத்தம் பல வழிபாட்டு முறைகளை உள்வாங்கிக் கொண்ட ஒரு பரிமாணத்தில் தாய்லாந்து பௌத்தம் என்ற தனித்துவத்துடன் விளங்குகின்றது. இதில் விநாயகர், பிரம்மா, சிவன் ஆகிய ஹிந்துக் கடவுள்களும் இணைந்து விடுகின்றனர்.  பௌத்த மார்க்க சிந்தனைகளை உபதேசம் கேட்பதும் தியானிப்பதும் பிக்கு, பிக்குணிகளின் தலையாய நெறியாக அமைந்திருக்கின்றது. சாதாரண மக்கள் வழிபாடு, சடங்குகள் என்பனவற்றோடு தியான நெறி​யையும் அனுஷ்டிப்பது வழக்கமாக இருக்கின்றது.

ஆக,  ஒரு வகையில் இங்கு நாம் காணும் ஏறக்குறைய 80 விழுக்காட்டு அருங்காட்சியகங்கள் பௌத்த விகாரைகளுடனோ (Wat) பௌத்த சமயத்துடனோ சம்பத்தப்படுத்தப்பட்டவைகளாகவே இருப்பதைக் காண முடிகின்றது.

தாய்லாந்து தொடர்ச்சியாக பல போர்களை சந்தித்த நாடு என்பதும் உலகின் பல நாடுகளிலிருந்தும் இந்நாட்டிற்கு வணிகப் போக்கு வரத்து என்பது தொடர்ந்து நடைபெற்றுள்ளது என்பதாலும் அத்தகைய வரலாற்று விஷயங்களும் இங்குள்ள அருங்காட்சியகங்களில் கிடைக்கின்றன. ஆனாலும் ஒரு குறை இருப்பதை மறுக்க முடியாது. பெரும்பாலும் அனைத்து அருங்காட்சியகங்களிலும் தாய் எழுத்தில் மட்டுமே விளக்கங்கள் அமைந்திருக்கின்றன. இது அரும்பொருட்களின் தனிச்சிறப்புக்களை தாய் மொழி அறியாதோர் அறிந்து கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுத்துகின்றது.


சுக்கோத்தை – பர்மிய படையினரால் 13ம் நூற்றாண்டில் அழிக்கப்பட்ட அரச மாளிகை வாசலில் (டிசம்பர் 2013)

சரி.  அடுத்த வாரம் வித்தியாசமான ஒர் அருங்காட்சியகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். வரத் தயார் தானே?

Monday, December 23, 2013

19. லூவ்ரெ அருங்காட்சியகம் Louvre Museum (4), பாரிஸ், ப்ரான்ஸ்

முனைவர்.சுபாஷிணி 


சொல்ல வரும் ஒரு விஷயத்தை மறைபொருளாக உருவகப்படுத்தி வைப்பதில் சித்திரக்கலை படைப்பாளர்களுக்கு உதவத் தவறுவதில்லை. நேரடியாகக் காணும் ஒரு காட்சி தானே, அல்லது ஒருவரின் உருவகப் படம் தானே, அல்லது ஒரு நிகழ்வின் காட்சி தானே, அல்லது ஏதோ புரியாத கோடுகளின் சங்கமிப்பில் ஒரு படைப்பு என்பது தானே என ஒரு சித்திரத்தை எடைபோட முடியாது. பல நுணுக்கமான விஷயங்களை, ஒரு சரித்திர நிகழ்வை, சமூக நிகழ்வை அல்லது சமகால சிந்தனையை, ஒரு படைப்பாளியின் சிந்தனையை, கற்பனையை பிரதிபலிக்கும் கருவியாக சித்திரம் அமைந்து விடுகின்றது.

ஐரோப்பாவில் சித்திரங்களின் அமைப்பில் புதிய பாணியும் அணுகு முறையும் 14ம் நூற்றாணடு தொடங்கி பின்னர் 15ம் நூற்றாண்டில் மிக வலுவடைந்தது. அரசர்களின், பிரபுக்களின் ஆதரவைப் பெற்று குறிப்பிடத்தக்க சித்திர வல்லுனர்கள் பல சித்திரங்களை இக்காலகட்டங்களில் படைத்தனர். குறிப்பிடத்தக்க வகையில் இக்கலை இத்தாலியில் சிறப்புடன் வளர்ந்தது. பல  சித்திரக்கூடங்களும் சித்திரங்கள் வரையும் பயிற்சி வழங்கும் பள்ளிகளும் இக்கால கட்டத்தில் உருவாகின. இப்படி எழுந்த முயற்சிகளின் விளைவாக குறிப்பிடத்தக்க கலைஞர்கள் தங்கள் ஓவியத்திறனைக் கொண்டு கருத்துகளுக்கு உருவம் வழங்கும் பணியை செய்து வந்தனர்.

பொதுவாக ஐரோப்பா முழுமைக்கும், 13ம் நூற்றாண்டு தொடங்கி உருவாக்கப்பட்ட சித்திரங்களின் தன்மை கிறிஸ்துவ மறையான கத்தோலிக்க சமயத்தைப் பிரதிபலிக்கும் ஏதாகிலும் ஒரு அம்சத்தைக் கொண்டதாக அமைந்திருக்கும். அதில் ஏசு சிறிஸ்துவின் இறுதித் தீர்ப்பு நாள்,  இரவு உணவு, ஏசுவின் சிலுவையில் ஏற்றப்பட்ட வடிவம், தேவதைகள் ஏசுவின் நிலை கண்டு கண்ணீர் வடிக்கும் நிலை, இறந்த ஏசு பிரானின் உடலை அன்னை மேரியும் ஏனையோரும் சுற்றி நின்று கண்ணீர் உகுத்து மடியில் கிடத்தி வருந்தும் காட்சி என்பதாக ஒரு வகை; அடுத்ததாக, பைபிளில் உள்ள கதைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட சித்திரங்கள். உதாரணமாக ஆதாம் ஏவாள் இவர்களுடன் பாம்பு மரத்தில் தொங்க ஆப்பிளைப் பறிக்கும் சூழல், நரகத்தின் நிலை, தேவதைகள் சுவர்க்கத்தில் மகிழ்ந்திருக்கும் காட்சி என அமைந்திருக்கும். இவையல்லாது ஏனையன, போர்களை விவரிப்பதாக, மன்னனின் அல்லது மன்னனின் குடும்பத்தோர் உருவங்களை மையமாக வைத்து வரையப்பட்டதாக இருக்கும். இவற்றில் பைபிளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட சித்திரங்கள் பல நேரடி விளக்கத்தைத் தருவன அல்ல. மறைமுக கருத்துக்களை உட்புகுத்தி உருவாக்கப்பட்டவை பல.

லூவ்ரே அருங்காட்சியகத்தில் இப்பதிவில் நாம் காணவிருப்பது இங்குள்ள சித்திரக்கூடத்தைத் தான்.   எண்ணற்ற விலைமதிக்க முடியாத பல சித்திரச் சேகரிப்புக்களின் கூடம் லூவ்ரே.  டெனோன் (Denon) பகுதியில் முதல் மாடியிலும் இரண்டாம் மாடியிலுமாக இச்சித்திரங்களின் சேகரிப்புக்கள் இடம்பெறுகின்றன. முதலாம் மாடியில் இத்தாலி, ஸ்பெயின் கலைஞர்கள் உருவாக்கிய சித்திரங்கள் இடம்பெறுகின்றன. இரண்டாம் மாடியில்  ப்ரான்ஸ் பெல்ஜியம், ஜெர்மனி, ஹாலந்து, வடக்கு ஐரோப்பாவின் ஏனைய நாட்டு கலைஞர்களின் படைப்புக்கள் என இடம் பெறுகின்றன.

மன்னன் முதலாம் ப்ரான்ஸிஸ் முதலில் இத்தாலியின் அரச மாளிகையில் இருக்கும் சித்திரங்களைப் போல தனது மாளிகை ஒன்றில் சித்திரக்கூடம் ஒன்று அமைக்க திட்டமிட்டார். அதன் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட முயற்சியின் பலனாகச் சேர்ந்தவைதான் இன்று லூவ்ரேவில் இருக்கும் இப்பகுதி சேகரிப்புகள். இந்த மன்னன் இத்தாலியில் புகழ்பெற்ற கலைஞர்களான மைக்கல் ஏஞ்சலோ,  ரஃபேல் ஆகியோரது கலைப் படைப்புக்களை வாங்கி தனது மாளிகையில் அவற்றை இணைத்துக் கொண்டார். அது மட்டுமில்லாது சித்திரக் கலைஞர்களையும் தனது மாளிகைக்கு சிறப்பு அழைப்பில் அழைத்தார். லியோனார்டோ டா வின்சி இந்த வகையில் மன்னன் முதலாம் ப்ரான்ஸிஸின் அழைப்பின் பேரில் இங்கு  அழைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வகை முயற்சிகளின் வழி சித்திரச் சேகரிப்புகள் பெருகின.

மன்னன் 14ம் லூய்ஸ் மேலும் தொடர்ந்து தனது சேகரிப்பிற்காக இத்தாலிய சித்திரங்களை வாங்கி இணைத்தார். அதுமட்டுமில்லாது ஸ்பேனிஷ் கலைஞர்களின் ஓவியங்களையும் தனது சேகரிப்பில் இடம்பெறச் செய்யும் முயற்சியில் இறங்கி முரியோ (Murillo)  வின் கலைப்படைப்புகளை வாங்கி இணைத்தார்.  அதன் பின்னர் பல ப்ரென்ஞ்ச் சித்திரக் கலைஞர்களின் ஓவியங்கள் இச்சேகரிப்பில் இணைந்தன.

இனி இங்குள்ள சில ஓவியங்களை மட்டும் அதன் விளக்கத்துடன் காண்போம்.

Alexander in Babylon (1665)

இது ப்ரெஞ்ச்  ஓவியக் கலைஞர் சார்ல்ஸ் லெ ப்ரூன் (Charles Le Brun ) வரைந்த சித்திரம்.

கி.மு 333ல், பெர்ஸிய மன்னன் மூன்றாம் டார்ஸியுஸை போரில் தேற்கடித்து வெற்றிக் கொடி ஏந்திக் கொண்டு பாபிலோன் நகரத்திற்கு வருகின்றான் மாவீரன் அலெக்ஸாண்டர். அங்கே அவனுக்கு நகரின் கதவுகள் திறக்கப்படுகின்றன; நல்வரவு நல்கப்படுகின்றது.  இது அவனை திகைக்க வைக்கின்றது. 3ம் டாரியுஸின் படையிலிருந்து பிடிக்கப்பட்ட 2 யானைகள் ஓட்டி வரும் வாகனத்தில் வலம் வருகின்றான் அலெக்ஸாண்டர். இக்காட்சியில் பாபிலோனின் தொங்கும் தோட்டம் பின்புறக்காட்சியாக அமைந்திருக்கின்றது.  1665ம் ஆண்டில் இந்த ஓவியம் வாங்கப்பட்டு சித்திரக் கூடத்தில் இணைக்கப்பட்டது.

மன்னன் 14ம் லூய்ஸ் ஐரோப்பாவில் நிகழ்ந்த சில குறிப்பிடத்தக்க போர்களில் சிறந்த வெற்றி பெற்றவன். தன் பெருமைகளை வீரன் அலெக்ஸாண்டருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் வகையில் இந்த ஓவியம் அமைந்திருப்பதால் இதனை தன் சேகரிப்பில் இணைத்திருக்கின்றார்.  அது இப்போது லூவ்ரேவின் அருங்காட்சியகத்திற்குச் சிறப்பு சேர்க்கிறது.


A Table of Desserts (1640)

இது ஒரு டச்சு கலைஞனின் படைப்பு. மாட்டிசே Matisse இதன் 1635 அசலான டி ஹீம் வரைந்த ஓவொயத்தின் அடிப்படையில் இதனை உருவாக்கி  அதில் அதிகப்படியான பிரமாண்டத்தைச் சேர்க்க பாரோக் கலைவடிவத்தை இணைத்து உருவாக்கிய ஒன்று இது.

இது உணவு உண்ணல் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்ட படைப்பு.  விசித்திரமான இச்சித்திரத்தில் வெவ்வேறு சீதோஷ்ணத்தில் கிடைக்கும் பழங்களையும் க்ளாஸில் உள்ள வைன்,  அதோடு ஆங்காங்கே இசைக் கருவிகள் என பல அமசங்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இதில் ஒரு ஒழுங்கற்ற முறை தென்படுவதையும் காணமுடியும். ஒவ்வொரு பழத்திற்கும் ஒரு பொருள் இருப்பதாக குறியியல் அறிஞர்கள் (symbologist)  கருதுவதாகவும் குறிப்பு உள்ளது.  பைபிளில் குறிப்பிடப்படும் fruit if paradise  ஆகிய செர்ரி,  மறுக்கப்பட்ட பழங்களான ஆப்பிள், பீச் ஆகியவை தென்படுவதால் மறைமுக கருத்துக்கள் கொண்ட ஒரு கலைப்படைப்பு இது என்பது அவர்களின் விளக்கம்.


Allegory of Fortune (1729)

இது ஒரு ப்ளெமிஷ் (பெல்ஜியம்)  படைப்பு

ரோமன் கடவுள் ஃபோர்ச்சுனா இதில் ஒரு உலக உருண்டையின் மேல் இருப்பதாகக் காணலாம். நிலையற்ற தன்மை கொண்டது அதிர்ஷ்டம். இந்த உலக உருண்டை ஒரு கப்பலில் இருப்பது போலவும் அமைக்கப்பட்டுள்ளது.  கடலில் பயணிக்கும் பயணம் போன்றது வாழ்க்கை; நிறைய எதிர்பாராத விஷயங்கள் நேரலாம், என்ற வகையில் பொருள் கொள்ளலாம்.

மண்னன் 14ம் லூயிஸின் சேகரிப்பிலிருந்து பெறப்பட்ட ஓவியம் இது. இதன் அசலை உருவாக்கியவர் 2ம் ப்ரான்ஸ் எனப் பெயர்கொண்ட பெல்ஜிய ஓவியக் கலைஞர்.


Charles VII (1403-1461), King of France (1445)

1445ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சித்திரம் இது. பேரரசன் 7ம் சார்ல்ஸின் உருவப்படம் கொண்ட ஓவியம். இந்த மன்னன் அச்சமயத்தில் இங்கிலாந்துக்கும் ப்ரான்ஸுக்கும் இடையே நிகழ்ந்த நூறாண்டுப் போரில் மாபெரும் வெற்றியை ப்ராஸிற்கு பெற்று வந்ததன் பின்னர் உருவாக்கப்பட்ட படைப்பு.  ப்ரெஞ்சுப் படைப்பான இதனை வரைந்தவர் Jean Fouquet. ஆரம்பத்தில் யாரால் உருவாக்கப்பட்ட ஓவியம் இது என்பதில் சரியான தகவல் கிடைக்காவிடினும் பல ஒப்பீடுகளுக்குப் பிறகு இவை ப்ரெஞ்சு ஓவியர் Jean Fouquet உருவாக்கிய சித்திரம் என்பது அறியப்பட்டது.

இப்படி இங்கு இன்னும் பல ஓவியங்கள்.. அவற்றையும் அடுத்தடுத்து என பார்த்துக் கொண்டே செல்லலாம்.  அதோடு உலகின் பல நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட ஆவணங்களும் கலைப்பொருட்கலும் அரும்பொருட்களும் அடங்கியிருக்கும் மாபெரும் பொக்கிஷம் இம்மண்டபம். ஆனால் நாம் ஏனைய அருங்காட்சியகங்களுக்கும் செல்ல வேண்டுமல்லவா?

அடுத்ததாக உங்களை மற்றுமொரு அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்கிறேன். ஐரோப்பாவை விட்டு சற்றே நெடுந்தூரம் செல்வோம்.

வேறொரு நாட்டிற்கு வேறொரு அருங்காட்சியகத்திற்கு!​

குறிப்பு: படங்களில் சில http://www.louvre.fr/en

Monday, December 16, 2013

18. லூவ்ரெ அருங்காட்சியகம் Louvre Museum (3), பாரிஸ், ப்ரான்ஸ்

முனைவர்.சுபாஷிணி 

இப்போது நாம் லூவ்ரே அருங்காட்சியகத்தில் எகிப்திய பண்டைய நாகரீகச் சின்னங்கள் அரும்பொருட்கள் இருக்கும் பகுதிக்குச் செல்கின்றோம்.

1798-1801 ஆண்டு காலவாக்கில் நெப்போலியன் போனபார்ட்டின் எகிப்திய வருகை அவனுக்கு அந்த தேசத்தின் பண்டைய கலைப் பொக்கிஷங்களின் மேல் அளவற்ற ஆர்வத்தையும் மயக்கத்தையும் உண்டாக்கியிருக்கும் என்றே நினைக்கின்றேன். ஆனாலும் அவன் பயணம் முடிந்து திரும்புகையில் கொண்டு வந்தவையாக இங்கு கணிசமான எகிப்திய தொல்லியல் சான்றுகளோ ஏனைய ஆவணங்களோ இல்லை. மாறாக இங்கிருப்பவை பெரும்பாலும் அதற்கும் முன்பே மன்னன் 18ம் லூயிஸ் காலத்தில் சேர்த்தவையும் மேலும் தனியார் சேகரிப்பாக இருந்து பின்னர் இந்த அருங்காட்சியகத்துக்கு வந்து சேர்ந்தவையும் என்றே குறிப்பிடலாம்.

மன்னன் லூயிஸின் காலத்தில் சேகரிக்கப்பட்ட எகிப்திய அரும்பொருட்கள் ஏராளம். இன்றிருக்கும் நக்தோர்ஹெப் சிலையும் சேக்மட் சிலையும் அப்போது கொண்டு வரப்பட்டவையே. 1824லிருந்து 1827 வரை பற்பல சேகரிப்புக்களிலிருந்து என ஏறக்குறைய 9000 அரும்பொருட்கள் இங்கே கொண்டு வரப்பட்டதாம். இவை அனைத்தையும் பாதுகாக்கவும் ஆராய்ச்சி செய்யவும் ஒரு தனித்துறையை லூவ்ரே அருங்காட்சியகத்தில் அப்போதைய மன்னன் அமைத்திருக்கின்றார்.

இக்காலகட்டத்தில் லூவ்ரே அருங்காட்சியகத்தின் ஆதரவில் தொல்லியல் ஆய்வறிஞர் மரியேட் எகிப்துக்குப் பயணமானார் அங்கே அவர் கண்டெடுத்தவையே செராப்பியம் சக்காரா இவையிரண்டு கலைசிற்பத் தொகுதிகளும். இங்கே அவர் தொடர்ந்து களப்பணிகளை நடத்திக் கொண்டிருந்தார். 1852 முதல் 1853 வரை நடத்திய களப்பணிகளில் 5964 அரும்பொருட்கள் எகிப்தில் கண்டெடுக்கப்பட்டன. அவையனைத்தையுமே ஒன்று விடாமல் பாரிஸுக்கு அனுப்பி வைத்தார் மரியெட். களப்பணி முடிந்து பாரிஸ் திரும்பியதும் இவரே லூவ்ரே அருங்காட்சியகத்தில் எகிப்திய பண்டைய அரும்பொருட்கள் பகுதியின் அமைப்பாளராக பணியிலிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அகழ்வாய்வின் போது உயிரைப் பணையம் வைத்து களப்பணிகளில் ஈடுபட்டவர் மரியட். அப்படித் தேடி கண்டெடுத்த விலைமதிப்பற்ற அப்பொருட்களின் அருமை பெருமை அறிந்து அவை சரியாகப் பாதுகாக்கப்பட வேண்டும், இதனால் ப்ரான்ஸ் நாட்டிற்கும் பெருமை ஏற்படும் என்ற எண்ணம் அவருக்கு மனம் நிறைய இருந்திருக்க வேண்டும்.

இக்காலகட்டத்தில் ஆங்கிலேய, ஜெர்மானிய, ப்ரென்ச் தொல்லியல் அறிஞர் குழுக்கள் சில எகிப்தில் வரிசையாக பல அகழ்வாய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தன. உதாரணமாக அபு ரோசா அகழ்வாய்வு, ஆசூய்ட் அகழ்வாய்வு, பாவிட் அகழ்வாய்வு, மெடாமுட் அகழ்வாய்வு என சிலவற்றை குறிப்பிடலாம். இதன் அடிப்படையில் தொடர்ந்து சில அரும்பொருட்கள் லூவ்ரெவிலும் வந்து சேர்ந்தன.

லூவ்ரெவின் எகிப்திய அரும்பொருட்கள் பகுதியில் இருக்கும் சில அற்புதப் படைப்புகளைக் காண்போம்.

1

மூன்று கடவுள்கள் இருக்கும் வகையில் ஒரே க்ரனைட் கல்லில் செதுக்கப்பட்ட ஒரு சிற்பம் இது. தரையில் வைக்கப்பட்டிருக்கின்றது. ஒரு அரசன் (ராம்ஸஸ் II அல்லது மெர்னெபத் ஆக இருக்கலாம்) இடது புறத்திலிருக்க, கழுகுத் தலை கொண்ட இறைவடிவமான ஹோருஸ் வலது புறமிருக்க நடுவிலே கடவுள் ஓஸிரிஸ் நிற்கும் வகையில் அமைந்த சிற்பம் இது. ஏறக்குறைய கிமு 1279-1203 வாக்கில் உருவாக்கப்பட்ட ஒரு சிற்பம் இது. 1.34 மீட்டர் உயரமும் 0.78 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு வடிவம். 1818ம் ஆண்டில் இது லூவ்ரே அருங்காட்சியகத்திற்காக வாங்கப்பட்டது.

 2

மன்னர் 3ம் ராம்ஸஸின் உடலை வைத்திருந்த கல்லறை கற்பெட்டி. இந்தக் கற்பெட்டியைச் சுற்றிலும் ஹிரோக்லிப்ஸ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அருங்காட்சியகத்தின் குறிப்பின்படி இது Book of Amduat நூலின் 7ம், 8ம் அத்தியாயங்களைக் கொண்டிருக்கின்றது என்பது தெரிய வருகின்றது. இக்கற்பெட்டியின் உள்ளே Book of Gates நூலின் முதல் அத்தியாயம் ஹிரோக்லிப்ஸ் எழுத்துருவில் கீறப்பட்டிருக்கின்றது. இதன் காலம் கிமு 1184-1153. இது கண்டெடுக்கப்பட்ட இடம் அரச பள்ளத்தாக்கு (Valley of King, Tomb of Ramses III). 1826ம் ஆண்டில் இது லூவ்ரே அருங்காட்சியகத்திற்காக வாங்கப்பட்டது.


அக்தெதொப் மஸ்தாபா – சக்காரா சேகரிப்பு.

இதில் ஒரு ஊழியன் ஆட்டினைப் பிடித்து இழுத்துச் செல்வது போல வடிக்கப்படுள்ளது. இது ஒரு பெரிய பாறையின் மேல் தீட்டப்பட்ட தொடர் சித்திரத்தின் ஒரு பகுதி மட்டுமே. இச்சித்திரங்களோடு ஹிரோக்லிப்ஸ் எழுத்துக்களும் ஆங்காங்கே இருப்பதைக் காணலாம். இச்சித்திரத்தின் கதையினை விளக்கும் முகமாக அவை கீறப்பட்டிருக்க வேண்டும்.

இவை மட்டுமின்றி, 3ம் ராம்ஸஸ் கட்டிய கோயில்களின் சில சுவர் பகுதிகள், மன்னன் எக்னத்தோன் கட்டிய கோயில்களின் சில சுவர் பகுதிகள், அரசர்கள் பள்ளத்தாக்கில் நிகழ்த்திய தொல்லியல் ஆய்வுகளின் போது கிடைத்த மம்மிகள், அவற்றோடு சேர்த்து வைக்கப்பட்டிருந்த பொன்னும் மணிகளும், வைர வைடூரியங்களினாலான ஆபரணங்கள், வாகனங்கள், வீட்டு அலங்காரப் பொருட்களாகிய நாற்காலி, ஜாடிகள், மேசை என பல பொருட்கள் இங்கே அடுத்தடுத்து என நமது கண்களுக்கு விருந்தாகிப் போகும்.

மன்னர்கள் அல்லது ராஜ குடும்பத்தைச் சேர்ந்தோர் இறந்து போனால் அவர்களின் உடலை பதப்படுத்தி மம்மியாக்கி அதனை ஒரு பேழைக்குள் வைத்து அப்பேழைக்குள் அந்த மனிதரின் பொருட்களையும் சேர்த்து வைத்து புதைப்பது அக்கால எகிப்திய வழக்கம். இப்படி மம்மியாக செய்யப்படுபவர்களின் அந்தஸ்திற்கேற்ப பேழைகளின் தன்மைகள் அமையும். உதாரணமாக துரதிஷ்டவசமாக மிக இளம் வயதிலேயே இறந்து போன தூத்தான்சாமூனின் மம்மியும் அம்மம்மியோடு கூடவே கண்டுபிடிக்கப்பட்ட ஏனைய பொருட்களும் இப்பகுதி அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட போது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தங்கத்தினாலான பேழைக்குள் மன்னனின் மம்மி உடல் இருந்தது. மூன்று பேழைகள், தேர்கள், படுக்கைகள், என வரிசை வரிசையாக பல பொருட்களை அம்மன்னன் இறந்தும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சேர்த்தே வைத்துப் புதைத்து விட்டார்கள்.

இது நடந்தது சில ஆண்டுகளுக்கு முன். இது போல பல மன்னர்களின் இறந்த உடலின் மம்மியோடு கண்டெடுக்கபப்ட்ட விலைமதிக்க முடியாத ஆபரணங்களும், அரும்பொருட்களும் மண்ணுக்குள் புதையுண்டு போகாமல் ஐரோப்பா மட்டுமின்றி அமெரிக்காவின் பல அருங்காட்சியகங்களிலும் வீற்றிருந்து பெருமை சேர்த்துக் கொண்டிருக்கின்றன.

தொடரும்..​

Tuesday, December 10, 2013

17. லூவ்ரெ அருங்காட்சியகம் Louvre Museum (2), பாரிஸ், ப்ரான்ஸ்

முனைவர்.சுபாஷிணி 


நாம் இப்பொழுது லூவ்ரெ அருங்காட்சியகத்தில் 6ம் எண் அறைக்கு வந்திருக்கின்றோம்.  நேராக அங்கு சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் மோனா லிஸா படத்தைத் தான் இப்போது பார்க்கின்றோம். டாவின்சியின் மோனா லிஸா !

இரண்டு பக்கங்களும் கைப்பிடியுள்ள ஒரு மர நாற்காலியில் அமர்ந்து இடது பக்க கைப்பிடியில் தன் இரு கைகளையும் வைத்துக் கொண்டு இடது புறமாக தன் தலையைத் திருப்பி அதே சமயம் நேராகப் பார்க்கும் வகையில் இந்த உருவம் வரையப்பட்டிருக்கின்றது. மோனா லிஸாவிற்குப் பின்புறம் தெரிவதாக அமைந்துள்ள இயற்கை காட்சியில் இரண்டு வகையான காட்சிகளின் தன்மையைக் காண முடியும். முதலில் இயற்கை காட்சியாக சிறு குன்றுகள் பாதைகள் போன்றவை இயற்கையின் வர்ணங்களாகவும் அதன் பின்னே அடுத்து தெரியும் காட்சி கற்பனை உலகம் போல வெளிர் நீல நிறத்தில் விரிந்த பரந்த ஒரு பகுதியைக் காட்டுவது போலவும் அமைந்திருக்கின்றது.




மோனா லிஸாவின் உருவ அமைப்பையும் உடைகளையும் காணும் போது மிக எளிமையான தோற்றத்தை இப்படம் அளிப்பதை உணர முடியும். அரச குடும்பத்து பெண்மணியாகவோ பொருள் வசதி படைத்த ஒரு பெண்ணின் உருவமாகவோ காட்டாமல் ஒரு சாதாரண பெண், ஆளுமை நிறைந்த திடமான மனத்துடனான ஒரு பெண்ணாகவே மோனா லிஸா காட்டப்படுகின்றார். அவரது தெளிவான பார்வை இப்படைப்பின் தன்மையையும் நமக்கு வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. நகைகள் ஏதும் கழுத்திலோ கைகளிலோ காதிலோ காணப்படவில்லை. அகன்ற கழுத்துப்பகுதி தெரியும் வகையில் அதே வேளை நுணுக்கமாகத் தைக்கப்பட்ட ஒரு பழுப்பு நிற ஆடையுடனும் தலையில் முடியின் மேல் மெலிதான ஒரு துணியை அணிந்திருப்பதையும் காணலாம்.

பல அரிய கண்டுபிடிப்புக்களையும் கலைச் சிற்பங்களையும் ஓவியங்களையும் உலகுக்கு அளித்த மாபெரும் சிற்பி லியோனார்டோ டாவின்சி. இவரைப் பற்றியும் இவரது அறிவியல் கண்டுபிடிப்புக்களையும், சிந்தனைகளையும் பற்றி யோசிப்பதே எனக்கு பல வேளைகளில் மனதை மகிழ்விக்கும் ஒரு விஷயமாக அமைந்து விடும். டாவின்சியின் அறிவியல் கலைப்படைப்புக்களைத் தனித்தனியாக எடுத்துப் பார்த்து அவற்றை அவரது பார்வையின் ஊடாக சிந்தனையின் பாதையில் சென்று விவரிக்க வேண்டும் என்ற ஆவலும் எனக்கு மனதில் இருக்கின்றது. அதனைப் பிரிதொரு முறை நேரமும் வேளையும் கூடி வரும் போது நிச்சயம் செய்ய நினைத்திருக்கின்றேன். இப்போது மோனா லிஸாவை மட்டும் பார்ப்போம்.

மோனா லிஸாவை யார் கேட்டு, எத்தகைய சூழலில், யாருக்காக டாவின்சி வரைந்தார் என்பது தெளிவாக அறியப்படாத ஒன்று. கிடைக்கின்ற  பழைய வஸாரியின் ஆட்டொ பையோக்ராபியிலிருந்து  இந்த  ஓவியத்தை Francesco del Giocondo என்ற வர்த்தகருக்காக அவரது மனைவியின் (Gherardini) உருவப்படத்தை 1502ல் அவர்களுக்குப் பிறந்த குழந்தையின் வரவை நினைத்து மகிழவும் புது மனைக்குச் சென்ற மகிழ்ச்சியைக் கொண்டாடவும் அவரது வேண்டுதல் படி டாவின்சி வரைந்த ஒரு ஓவியம் என்று தெரிகிறது.  ஜியோர்ஜியோ வஸாரி இந்தச் செய்தியை விவரிக்கும் வகையில் ஒரு பகுதியை தனது சிற்பக் குறிப்பு தொகுப்பு நூலில் பதிகின்றார். வஸாரி, டான் ப்ரவ்னின் புதிய நாவலான இன்பர்ஃனோவில் மிக முக்கிய பாத்திரம் என்பதையும் இவ்வேளையில் நாம் குறிப்பிட வேண்டும். வஸாரி இப்பதிவில் மோனா லிஸா உண்மையில் கெரார்டினியின் உருவம் எனக் குறிப்பிட்டிருந்தாலும் கூட இதுவே  மோனா லிஸா உருவான கதை என முழுதும் நம்பி விடவும் முடியாது என்றே தெரிகிறது.

மோனா லிஸா எனும் இப்படம் ஒரு சாதாரண ஓவியம் அன்று.  ஐரோப்பாவின் ரெனைஸான்ஸ் சிந்தனை மாற்றத்திற்கு அடிப்படையாக அமைந்த பல கலைப்படைப்புக்களில் பிரதான நிலையைப் பெறும் ஒரு ஓவியம் இது. இது மட்டுமன்றி தற்கால சூழலில் ஐரோப்பா மட்டுமன்றி உலக நாடுகள் அனைத்திலும் பிரபலமடைந்த ஒரு ஓவியம் இது என்பது யாரும் மறுக்கவும் முடியாது.

மோனா லிஸாவின் படங்களின் பிரதிகளை பலர் உருவாக்கினாலும் டாவின்சி இந்த  ஓவியத்தை வரைந்த வேளையில் அவருக்குப் பின்புறமாக அமர்ந்து டாவின்சியின் மாணவர் ஒருவர் அதே ஓவியத்தை வரைந்தார் என்பதுவும் அவ்வோவியம் பல ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்தபோது அதனைப் பெற பலர் முயன்றாலும் இறுதியில் அவ்வோவியம் ஸ்பெயின் மட்ரிட்டின் மாபெரும் அருங்காட்சியகமான ப்ராடோவின் விலைமதிக்க முடியாத அரும்பொருட்களின் வரிசையில் இணைந்து கொண்டது என்பதுவும் உண்மை. இந்த ஓவியத்தையும் நான் நேரில் ப்ராடோ அருங்காட்சியகத்திலேயே பார்த்து புகைப்படங்களும் எடுத்துள்ளேன். டாவின்சியின் மோனா லிஸாவின் முகத்தில் தெரியும் சிறு முதிர்ச்சி இல்லாத சற்று இளமை தெரியும் முகச் சாயலோடு இந்த மோனா லிஸாவின் உருவப்படம் இருக்கும்.



டாவின்சி ஒரு சாதாரண மனிதரோ வெறும் கலைஞரோ அல்ல. புதிய உலகம் படைக்க வந்த சிற்பிகளில் சிறப்பிடம் பெறும் ஒருவர். ஒரு வகையில் டாவின்சி தனது மனத்தின் செய்தியை மறைமுகமாக வெளிப்படுத்த பயன்படுத்திய ஒரு கருவியே  மோனா லிஸா என்பது தற்கால குறியீடு வல்லுனர்கள் (Symbologists)  கூறும் தகவல்.

உற்று நோக்கும் போது மோனா லிஸாவின் முகத்தில் புருவம் இல்லாமையும், கண்களில் மயிர் முடி இல்லாததையும் நாம் காண்போம். வலது கையை இடது கைமேல் வைத்திருக்கும் போதும் வெளியே தெரியும் கர்ப்பமான பெண்ணின் பெரிய வயிற்றுப் பகுதி மேரி மெக்டலின் ஏசு கிறிஸ்து இறந்த சமயத்தில் கர்ப்பமாக இருந்தார் என்ற வகையில் வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த நிகழும் வாதங்களுக்கும் காரணமாக அமைகின்றது. கத்தோலிக்க கிறிஸ்துவ அடிப்படை நம்பிக்கைகளின் ஆதாரங்களை அசைக்க முயலும் ஒரு மாஸ்டர் பீஸ் மோனா லிஸா என்பது கடந்த சில ஆண்டுகளில் பரவி வரும் ஒரு தகவலாகவும் உள்ளது. இதனைச் சுற்றி அமைந்ததாக வருவதே டான் ப்ரவ்னின் டாவின்சி கோட் நாவலும் அதனை மையமாக வைத்து சோனி ப்ரொடக்‌ஷன்ஸ் எடுத்த அதே தலைப்பிலான திரைப்படமும். இந்த நூல்கள் மட்டுமன்றி குறிப்பிடத்தக்க பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன.  தொடர்ந்தும் வெளிவருகின்றன. உதாரணமாக, Fear Not, Buried by the Church, The truth and fiction in the DaVinci Code, Gospel Code, the DaVinci Hoax  போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

மோனா லிஸாவின் மந்திரப் புன்னகை சொல்லும் உண்மையான ரகஸியத்தை அறிவது நமக்கு எளிதல்ல. தொடரும் ஆய்வுகளுக்கு மேலும் பல ஆவணங்கள் கிடத்தால் ஆய்வுலகம் மகிழ்ச்சியடையும்.

லூவ்ரெ அருங்காட்சியகத்தின் உள்ளே சுவற்றின் நடுவே வைக்கப்பட்டிருக்கும் மோனா லிஸா உருவப்படத்தை நேரில் காணும் அனுபவம் பெற இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள். பல கோணங்களில் இப்பக்கத்தில் மோனா லிசா பற்றிய தகவல்களைப் பெறலாம்.  http://musee.louvre.fr/oal/joconde/indexEN.html

தொடர்ந்து அடுத்த அறைகளுக்குச் செல்வோம். லூவ்ரே நமக்கு பல அதிசயங்களை வைத்திருக்கின்றது.

தொடரும்..!

Monday, December 2, 2013

16. லூவ்ரெ அருங்காட்சியகம் (Louvre Museum), பாரிஸ், ப்ரான்ஸ்


முனைவர்.சுபாஷிணி 

டான் ப்ரவுனின் ‘டாவின்சி கோட்’ படம் பார்த்த பலருக்கு ரோபர்ட் லேங்க்டன் பாரிஸுக்கு வந்து முதலில் செல்லும் அந்த மாபெரும் அருங்காட்சியகக் கட்டிடம் ஞாபகம் இருக்கலாம்.   இப்படத்தில் ஏறக்குறை இறுதிக் காட்சிகளில் வருகின்ற  ஒரு கட்டிடத்தின் முன்புறத்தில் கண்ணாடியால் ஆன ஒரு பிரமிட் முன்புறத்தில் அமைந்திருப்பது போல இருக்க, அதனை வியப்புடன் பார்த்து தான் தேடிக் கொண்டிருக்கும் பொருள் அங்குதான் இருக்கின்றது என நினைத்துக் கொண்டு லேங்டன் மலைத்துப் போய் நிற்கும் காட்சியையும் பலர் இன்னமும் ஞாபகத்தில் வைத்திருக்கலாம். உங்கள் அனைவரையும் இந்த மாபெரும் அருங்காட்சியகத்துக்குத்தான் அழைத்துச் செல்லவிருக்கின்றேன்.


லூவ்ரெ அருங்காட்சியக வளாகம் (2010)

652,300 அடிப்பரப்பில் ஒரு கட்டிடம். அப்படியென்றால் எவ்வளவு விரிவான ஒரு கட்டிடம் இது என்பதை கற்பனை செய்து பாருங்கள். உலகின் மிகப் பிரசித்தி பெற்ற, அதிகம் வருகையாளர்களைச் சந்திக்கும் ஒரு அருங்காட்சியகம் லூவ்ர என்பதும் ஒரு சிறப்புச் செய்தி.  http://en.wikipedia.org/wiki/List_of_the_most_visited_museums_in_the_world விக்கிபீடியாவின் இப்பக்கத்தின் நிலவரப்படி, உலகின் மிக அதிகமாக வருகையாளர்கள் வந்து செல்லும் அருங்காட்சியகத்தில் முதலிடம் பெறும் அருங்காட்சியகமாக இது திகழ்கின்றது. வருகையாளர் பட்டியல் குறிப்புப்படி வருடத்திற்கு 8 மில்லியன் வருகையாளர்களைச் சந்திக்கும் ஒரு கட்டிடம் இது என்றால் இதன் பெருமையை ஓரளவு ஊகித்து அறிந்து கொள்ளலாம் அல்லவா?.

லூவ்ரெ அருங்காட்சியகத்துக்கு 2010ம் ஆண்டில் முதன் முதல் செல்லும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. ஆனால் சென்ற போது மதியமாகியிருந்ததால் முழுமையாக இந்த அருங்காட்சியகத்தை நான்  பார்க்க முடியவில்லை. இரண்டறை மணி நேரங்கள் மட்டுமே இந்த மாபெரும் வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடத்தில் செலவிட முடிந்தது. முழுமையாக  மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும். அதற்கு ஒரு முழு நாள் நிச்சயமாக ஒதுக்கத்தான் வேண்டும். காலையிலிருந்து மாலை வரை இங்கு இருந்தால் தான் அனைத்தையும் பார்க்க முடியும். அது கூட போதாதோ என்றே நினைக்கத் தோன்றுகின்றது.



நுழைவாயிற்பகுதி (2010)

லூவ்ரெ கட்டிடத்தைப் பற்றிய ஒரு அறிமுகம்.

இவ்வருங்காட்சியகம் செவ்வாய்க்கிழமை தவிர்த்து ஏனைய நாட்கள் காலை 9:30 லிருந்து பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கும். இந்த அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கமாகிய http://www.louvre.fr/en சென்று எந்த நாட்களில் எத்தனை மணி வரை திறந்திருக்கும் என்ற விபரங்களை அறிந்து கொண்டு உங்கள் பயணத்தை முடிவு செய்துகொள்ளலாம். இதே வலைப்பக்கத்தில் அவ்வப்போது நடைபெறும் கண்காட்சிகள் பற்றிய விபரங்களும் இந்த அருங்காட்சியகம் பற்றிய தகவல்களும் நிறைந்திருக்கின்றன.

லூவ்ர அருங்காட்சியகத்தின் உள்ளே உள்ள கலைப்பொருட்களை காண்பதற்கு முன்னர் இந்தக் கட்டிடத்தைப் பற்றி ஓரளவு அறிமுகம் தருவதும் தேவை என்று நினைக்கின்றேன். இன்று அருங்காட்சியகமாக இருக்கும் இக்கட்டிடம் அடிப்படையில் 2ம் பிலிப்ஸ் 12ம் நூற்றாண்டில் கட்டிய ஒரு அரண்மனையாகும். தற்போது இருக்கும் முழு கட்டிடமாக அது ஆரம்பத்தில் இல்லை. 17ம் நூற்றாண்டில் பல புதிய பகுதிகளை மன்னர் 14ம் லூய்ஸ் இணைத்து விரிவாக்கினார்.  இவரது காலத்தில் தான் இந்தக் கட்டிடம் அரச குடும்பத்தின் அரும்பொருட்களைக் காட்சிக்கு வைக்கும் ஒரு அருங்காட்சியகமாக உருவெடுத்தது. பின்னர் ப்ரெஞ்ச் புரட்சியின் போது இக்கட்டிடம் பொதுமக்களுக்கான அருங்காட்சியகமாக உருவாக வேண்டும் என்று முடிவாகியது.

அருங்காட்சியகமாக 1793ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் திகதி 537 ஓவியங்களுடன் இக்கட்டிடம் பொதுமக்களுக்குத் திறந்து வைக்கப்பட்டது.  நெப்போலியனின் காலத்தில் மேலும் பல அரிய பொருட்கள் இங்கே சேர்க்கப்பட்டன.  ஆகையினால் அக்காலகட்டத்தில் இந்த அருங்காட்சியகம் நெப்போலியன் அருங்காட்சியகம் என்ற பெயருடனேயே விளங்கியது. நெப்போலியன் பிற நாடுகளிலிருந்து கொண்டு வந்த பொருட்களை இந்தக் கூடத்தில் வைத்து தனது நாட்டிற்குப் பெறுமை தேடிக்கொண்டார்.  மட்ரிட்டில் உள்ள அரச மாளிகையின் அருங்காட்சியகத்தில் ஒரு பகுதியில் வெள்ளிப் பாத்திரங்களின் தனிக்காட்சிப்பகுதி உள்ளது. அங்கு சென்று வந்த போது நான் வாசித்து அறிந்து கொண்ட ஒரு வாசகம் தான் இப்போது எனக்கு ஞாபகம் வருகின்றது. போர்காலத்தில் ஸ்பெயினில் நெப்போலியனும் அவன் படைகளும் ஸ்பெயின் அரச மாளிகையிலிருந்து பல வெள்ளிப் பொருட்களை சூரையாடிச் சென்றனராம். அந்த வெள்ளிப் பாத்திரங்களை உருக்கி போருக்குத் தேவையான பொருளாதாரத்தை பலப்படுத்தினராம். இப்படி போரினால் இழந்த பல அரும் பொருட்கள் பற்றிய கதைகள் அவ்வப்போது நாம் அறிவது தானே!



அருங்காட்சியகத்தின் உட்பகுதி வளாகம்  (2010)

பேரரசர்கள் 18ம் லூய்ஸ், 10ம் சார்ல்ஸ் காலத்திலும் தொடர்ந்து பல விலைமதிப்பற்ற பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் இணைந்தன.

 தற்போதைய நிலவரப்படி ஏறக்குறைய 35,000 காட்சிப் பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் நிறைந்திருக்கின்றன. இக்காட்சிப் பொருட்கள் பலதரப் பட்டவை. எகிப்திய நாகரிகத்தின் சான்றுகளின் காட்சிப் பொருட்களுக்காக ஒரு தனிப்பகுதி உள்ளது. கிரேக்க நாகரிகத்தின் காட்சிப் பொருட்களுக்காக  ஒரு தனிப்பகுதி; இஸ்லாமிய காட்சிப் பொருட்களுக்காக ஒரு தனிப் பகுதி; சிற்பங்களுக்காக ஒரு பகுதி; ஓவியங்களுக்காக ஒரு பகுதி இப்படி பலப் பல பகுதிகள். அனைத்து பகுதிகளுக்கும் நான் செல்லவில்லை. சென்று வந்த பகுதிகளில் என் மனதில் ஆழப்பதிந்த பகுதிகளில் உள்ள அருங்காட்சிப் பொருட்களைப் பற்றி சொல்லாமல் இருக்கமுடியாது. அத்தகவல்களில் சில பற்றிய பதிவாக அடுத்த பதிவு அமையும்.

முதலில்  நாம் அறை எண் 6க்குச் செல்வோமா? அங்கு தான்  டாவின்சியின் மோனா லிஸா இருக்கின்றாள்.

தொடரும்…!