Friday, August 30, 2013

2. பெர்லின், ஜெர்மனி


ஜெர்மனியில் எனது கடந்த 14 ஆண்டு கால வாசத்தில் 50க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களுக்குச் சென்று வந்திருக்கின்றேன். நான் வாழ்கின்ற பாடன் உட்டென்பெர்க் மானிலத்தின் தலைநகரான ஸ்டுட்கார்ட் நகரிலேயே குறிப்பிடத்தக்க உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகங்களும் உள்ளன.

ஜெர்மனியில் முக்கிய நகரங்கள் பலவற்றில் வருடத்திற்கு இருமுறை, அதிலும் குறிப்பாக கோடை காலத்தின் இறுதியிலும், இலையுதிர் காலத்தின் தொடக்கத்திலும் Lange Nacht der Museen அதாவது "நீண்ட இரவில் அருங்காட்சியகங்கள்" என்ற வகையில் ஒரு குறிப்பிட்ட கட்டணத்திற்கு அந்த நகரில் உள்ள எல்லா அருங்காட்சியகங்களையும் சென்று பார்த்து வரக் கூடிய வாய்ப்பினை நகராண்மைக் கழகம் பொது மக்களுக்காக வழங்குகின்றது. இந்த அருங்காட்சியக பார்வைக்காக பேருந்துகளைத் தயார் செய்து பொது மக்கள் ஒரு அருங்காட்சியகத்திலிருந்து மற்றொன்றிற்குச் செல்லும் வகையில் சிறப்பு பேருந்து வசதிகள் அன்றைய தினத்தில் அமைந்திருக்கும். மாலை 5க்குத் தொடங்கி இரவு மூன்று மணி வரை பொதுவாக அருங்காட்சியகங்கள் இத்தினத்தில் திறக்கப்பட்டிருக்கும். இத்தகைய நிகழ்ச்சிகளில் ஆண்டுக்கு ஒருமுறையாவது நான் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றேன். இணையத்திலேயே முன்கூட்டியே டிக்கட் பதிவு செய்து பெற்றுக் கொண்டு அன்று இலவசமாக ட்ரெயினில் பயணித்து நகருக்குச் சென்று அங்குள்ள பேருந்துகளில் ஒவ்வொரு அருங்காட்சியகமாகச் சென்று அறிமுகம் பெற்று கண்காட்சிகளையும் கண்டு பயன்பெற முடியும்.

ஜெர்மனியைப் பொறுத்த வரை பெரிய நகரங்களில் மட்டுமே அருங்காட்சியகங்கள் உள்ளன என்று சொல்லி விட முடியாது. சிறு கிராமங்களிலும், மலைப்பிரதேசங்களிலும் கூட அருங்காட்சியகங்கள் அமைந்துள்ளன. உதாரணமாக தென் பகுதி கருங்காடு என அழைக்கப்படும் Black Forest  பகுதியிலும் ஆங்காங்கே மக்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் சில அருங்காட்சியகங்களைப் காணலாம்.இப்படி மூலைக்கு மூலை அருங்காட்சியகங்கள் நிறைந்திருப்பது, பெரிதொ சிறிதோ, அந்த நகரத்தை, அக்குறிப்பிட்ட பூகோளப்பகுதியைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களை வருகைத் தருவோருக்கு வழங்கவே செய்கின்றன.

ஜெர்மனியில் பல அருங்காட்சியகங்கள் உள்ள போதிலும் ஜெர்மனியின் தலைநகரமான பெர்லின் நகரின் அருங்காட்சியகங்களிலிருந்து இத்தொடரை தொடங்குவது ஆர்வமளிப்பதாக உள்ளமையால் பெர்லின் நகரின் அருங்காட்சியகங்கள் பற்றி முதலில் காண்போமே!


அருங்காட்சியகத்தீவு (Museum island, Berlin) தொடக்கப்பகுதி - போட அருங்காட்சியகத்துடன் தொடங்குகின்றது (ஆகஸ்ட் 2013).

344.3 sq miles அளவு கொண்ட பெர்லின் நகரத்தில் 50க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்கள் உள்ளன என்பது வியக்கவைக்கும் ஒரு விஷயம் தானே. இணையத்தில் கிடைக்கும் ஒரு வலைப்பக்கத்தில் உள்ள குறிப்பின் அடிப்படையில் இங்குள்ள அருங்காட்சியகங்களின் பட்டியலைத் தருகின்றேன். காண்க!.

  1. Alte Nationalgalerie
  2. Altes Museum
  3. Antikensammlung Berlin
  4. Bode Museum
  5. Neues Museum
  6. Egyptian Museum of Berlin
  7. Pergamon Museum
  8. Antikensammlung Berlin
  9. Anne Frank Zentrum
  10. Brecht House
  11. Bunker
  12. DDR Museum
  13. Deutsche Guggenheim
  14. Deutsches Historisches Museum
  15. Ephraim-Palais
  16. Knoblauchhaus
  17. Märkisches Museum
  18. Museum für Naturkunde
  19. Friedrichswerder Church
  20. galerie son, contemporary art gallery with a focus on German and Korean artists
  21. The Kennedys (museum)
  22. Hamburger Bahnhof: Museum of the Present, with exhibits of contemporary art
  23. Bauhaus Archive
  24. Kulturforum
  25. Berlin Musical Instrument Museum
  26. Gemäldegalerie, Berlin
  27. Kunstgewerbemuseum Berlin
  28. Kupferstichkabinett Berlin
  29. Neue Nationalgalerie
  30. Filmmuseum Berlin
  31. Memorial to the German Resistance
  32. Sugar Museum
  33. Computerspielemuseum Berlin (Computer Games Museum)
  34. East Side Gallery
  35. Berlinische Galerie
  36. Checkpoint Charlie Museum
  37. German Museum of Technology
  38. Jewish Museum Berlin
  39. Martin Gropius Bau
  40. Schwules Museum
  41. Topography of Terror
  42. Beate Uhse Erotic Museum
  43. Berggruen Museum ("Picasso and his Time")
  44. Bröhan Museum
  45. Charlottenburg Palace
  46. Käthe Kollwitz Museum
  47. Museum of Photography
  48. Museum of Pre- and Early History
  49. Scharf-Gerstenberg Collection
  50. Allied Museum
  51. Botanical Garden and Botanical Museum
  52. Brücke Museum
  53. Ethnological Museum of Berlin
  54. Museum of Asian Art
  55. Museum Europäischer Kulturen
  56. Köpenick Palace
  57. Kunstgewerbemuseum Berlin
  58. Berlin-Hohenschönhausen Memorial
  59. Stasi Museum
  60. Liebermann Villa
  61. Schloss Britz

நன்றி: http://en.wikipedia.org/wiki/List_of_museums_and_galleries_in_Berlin
குறிப்பு: மேல் குறிப்பிட்டுள்ள பட்டியலில் உள்ள பெயர்கள் டோய்ச் மொழியிலும் ஆங்கில மொழியிலும் என் வழங்கப்பட்டுள்ளன.

இதில் ஒவ்வொரு அருங்காட்சியகமாக சென்று வருவது என்பது சற்றே கடினம் என்பதோடு அதற்காக தேவைப்படும் நேரத்தையும் ஒதுக்க வேண்டி வரும். ஆனால் நமது தனிப்பட்ட விருப்பத்திற்கேற்ற வகையில் அருங்காட்சியகங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்குச் சென்று வருவது அருங்காட்சியக ஆர்வலர்களுக்குப் பயன்தரும்.


பெர்லின் சுவரின் மிஞ்சியிருக்கும் பகுதிகளில் சில சாலையோர அருங்காட்சிப் பொருளாக (ஆகஸ்ட் 2013).

பெர்லின் நகரைப் பொருத்தவரை இது நூற்றாண்டுகளின் சிறப்புக்களைக் கொண்ட ஒரு நகரம். கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த நாஸி அரசியல் படுகொலைகள், அரசியல் விஷயங்கள் இப்பட்டியலில் உள்ள சில அருங்காட்சியகங்களுக்கு மைய அம்சங்களாகத் திகழ்கின்றன. ஒரு சில குறிப்பிடத்தக்க அருங்காட்சியகங்கள் பெர்லின், ஜெர்மனி என்ற எல்லையைக் கடந்து உலகின் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட தகவல்களை நமக்கு காட்சிக்கு வழங்கும் கருவூலங்களாக இருக்கின்றன.

ஜெர்மானிய கடல் ஆய்வுத்துறையினர் அட்லாண்டிக் சமுத்திரத்திலும், பஸிபிக் சமுத்திரத்திரத்திலும் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் கண்டெடுக்கப்பட்ட அறிய பொருட்கள் சில அருங்காட்சியகங்களைப் பெருமை செய்கின்றன. தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை ஐக்கிய அரபு நாடுகளிலும் ஆப்பிரிக்க கண்டங்களிலும், வட ஆசிய கண்டத்திலும் செலவிட்ட பல தொல்லியல் ஆய்வுத்துறையினரின் அறிய கண்டுபிடிப்புக்கள் பெர்லினின் சில அருங்காட்சியகங்களில் இருந்து பெர்லின் மடுமல்லாது  உலக நாகரிக வளர்ச்சியை மக்களுக்கு விளக்கும் நற்றொண்டை ஆற்றுகின்றன. தொழில்நுட்பத்துறையினரின் ஆய்வுகள் கணினி, மருத்துவம் போன்ற துறைகளில் தங்கள் வாழ் நாளையே அர்ப்பணித்த மேதைகளின் ஆய்வுகள் பல பெர்லினின் சில அருங்காட்சியகங்களில் நிறைந்திருக்கின்றன.

ஜெர்மானிய தத்துவ மேதைகள் உலக தத்துவ சிந்தனை வளர்ச்சிக்கும் புரட்சிக்கும் ஆய்வுக்கும் வழங்கிய கொடைகள் ஏராளம். இத்தத்துவ மேதைகளின் நூல்களையும் ஆய்வுகளியும் கண்டுபிடிப்புக்களையும் விளக்குவனவாக பெர்லினில் உள்ள சில அருங்காட்சியகங்கள் இருக்கின்றன. வாகனங்கள், தாவரங்கள், காடுகள், கடல் உயிரினங்கள ஆய்வு பற்றிய தகவல் நிறைந்த அருங்காட்சியகங்கள் உள்ளன. அத்தோடு நின்றுவிடவில்லை. ஜெர்மனிக்கே பிரபலமான Curry Würst (கரி உர்ஸ்ட்) எனச் சொல்லப்படும் உணவு வகையை விளக்கும் அருங்காட்சியகம், கட்டிடங்களைப் பற்றி விளக்கும் கட்டுமான அருங்காட்சியகம், கணினி விளையாட்டு பற்றிய வரலாறு கூறும் அருங்காட்சியகம் என்று விரிவான பல் துறைகளை அடிப்படை அம்சங்களாகக் கொண்ட அருங்காட்சியகங்கள் பெர்லினில் உள்ளன.


பெர்லின் நாஸி ஹோலோகோஸ்ட் அருங்காட்சியகத்தில் (Holocaust museum) (ஆகஸ்ட் 2013).


இதில் முதலில் பெர்லின் நகரின் சிறப்புக்குச் சிறப்பு சேர்ப்பதாகவும், பெர்லினுக்கு வருகை தரும் சுற்றுப் பயணிகளுக்கு அளிக்கப்படும் கையேட்டில் அருங்காட்சியகங்களின் பட்டியலில் முதலிடம் பெறுவதுமான பெர்காமோன் அருங்காட்சியத்திற்கு (Pergamon Museum) உங்களை முதலில் அழைத்துச் செல்கின்றேன்.


தொடரும்...

சுபாஷிணி ட்ரெம்மல்

Monday, August 26, 2013

1. அறிமுகம்

கற்றல் என்பது இளம் பிராயத்தோடு நின்றுவிடக் கூடிய ஒன்றல்ல. எந்த ஒரு சமூகம் கற்றலுக்கும் புதிய விஷயங்களின் தேடுதல்களுக்கும் தன்னைத் தயார்படுத்திக் கொண்டுள்ளதோ அச்சமூகமே விரைந்த சமூக வளர்ச்சியை அடையக்கூடிய வலிமையைப் பெறும். ஒரு தனி மனித கற்றல் என்பது பள்ளிக் கூட, பல்கலைக்கழக கல்வி என்ற நிலையோடு நின்று விடாமல் தினம் தினம் புதிய விஷயங்களைக் கற்பதாக அமையும் போது அறிவும் அனுபவமும் விசாலமடைகின்றது. அதே சமயம் உலகம், அதன் தன்மை இவ்வுலகில் தனி மனிதராகிய நமது அங்கத்துவம் ஆகியவற்றிற்கும் மேலும் புதிய பொருள் கிடைத்துக் கொண்டேயிருக்கும்.

புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கு எவ்வாறு செய்தி ஊடகங்களும், கணினி தொழில்நுட்பங்களும் உதவுகின்றனவோ அதே போல அருங்காட்சியகங்களும் அமைந்திருக்கின்றன. எனது சொந்த அனுபவத்தில், எனது கற்றல், அதன் விசாலம் என்பதற்கு ஆதாரமாக அமைகின்ற விஷயங்களில் அருங்காட்சியகங்களும் இடம் பெறுகின்றன.

அருங்காட்சியகங்கள் என்றாலே பள்ளிச் சிறுவர்கள் சென்று வரும் இடம் எனவும், பள்ளி விடுமுறை காலங்களில் மாணவர் செல்லக்கூடியதோர் இடம் எனவும் பரவலாக நம் சமூகத்தில் சிந்தனை இருக்கின்றது. இது முற்றிலும் தவறான ஒன்றே. ஒரு குறிப்பிட்ட இனத்தின் வரலாறு, அதன் சான்றுகள், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வரலாறு, அதற்கானச் சான்றுகள், கருவிகள் பற்றிய குறிப்புகள், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், தொழில் நுட்ப வளர்ச்சி அதன் ஆதாரங்கள், மருத்துவம் – புதிய கண்டுபிடிப்புகள், மனித இனத்தோற்றம் பற்றிய செய்திகள், வணிகம், கடல் பயணங்கள், மனித நாகரிகத்தின் வளர்ச்சி, போர்கள், கலை படைப்புகள், சித்திரங்கள், சிற்பங்கள், அற்புதப் படைப்புகள், வாழ்வியல் ஆதாரங்கள், வானியல் ஆய்வு என, பல விஷயங்களைத் தக்க ஆதாரங்களோடு தேடிக் கண்டெடுத்து, சேகரித்து, அதனைப் பாதுகாத்து வரும் முக்கிய இடமே அருங்காட்சியகங்கள்.

எனது எல்லா பயணங்களிலும் நான் செல்லும் நகர்களில் உள்ள, என் ஆர்வத்தோடு இணைந்த அருங்காட்சியகங்களுக்குச் செல்வதை நான் பல ஆண்டுகளாகக் கடமையாகக் கொண்டிருக்கிறேன். பட்டியலிட்டால் ஏறக்குறைய 400க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களைப் பார்த்திருக்கிறேன் எனக் குறிப்பிடலாம். இவை அனைத்துமே எனக்கு ஏதாவது ஒரு புதிய செய்தியை வழங்கிக் கொண்டே இருப்பதால் அருங்காட்சியகங்கள் மேல் நான் கொண்டிருக்கும் ஆர்வம் மென்மேலும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது.

வரலாற்று விஷயங்களைச் சேகரித்து வைத்திருக்கும் அருங்காட்சியகங்கள் நம்மை காலத்தைக் கடந்து செல்ல வைக்கக் கூடியவை. இன்றைக்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட நிலையில் நம்மை வைத்துப் பார்த்து அக்காலச் சூழ்நிலையைப் பற்றிய அனுபவத்தைத் தரக்கூடியவை இவை. பல வேளைகளில் மூவாயிரம் ஆண்டுகால வளர்ச்சியில் கூட பல விஷயங்கள் இன்னமும் அதன் அடிப்படை மாறாமல் இருப்பதைப் பார்க்கும் போது மனித மனதின் வளர்ச்சியைப் பற்றிய பல விஷயங்கள் தெளிவாகின்றன. பல நாடுகளின் கலை, கலாச்சார பண்பாட்டு விஷயங்களை வெளிப்படுத்தும் அருங்காட்சியகங்களுக்குச் சென்று அங்குள்ள விஷயங்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் போது மனித சமூகம் அது எந்த நாடாக இருந்தாலும், எந்த இனமாக இருந்தாலும் எந்த மொழி பேசுவதாக இருந்தாலும் அடிப்படையில் பல விஷயங்களில் ஒற்றுமை கொண்டிருப்பதை கண்டு நான் மலைத்து நின்றதுண்டு. மனிதர்களுக்குள் வெவ்வேறு விஷயங்களுக்காகப் பிரிவினைகளும் வித்தியாசங்களும் இருந்தாலும் பல விஷயங்களில் இருக்கின்ற ஒற்றுமை மனிதர்கள், மனித இனம் என்பது அடிப்படையில் ஒன்றுதான் என்ற எளிமையான ஒரு சிந்தனைக்கு மீண்டும் நம்மை கொண்டு வந்து விடுகின்றது.

ஒரு வட்டத்திற்குள்ளேயே வாழும் போது அந்த வட்டத்திற்குள் நாம் அமைத்துக்கொண்டுள்ள விஷயங்கள் மட்டுமே முக்கியத்துவம் பெறுவதும் அவை கூறுகின்ற முடிவுகளே முடிந்த முடிவுகளாகக் கொள்ளப்படுவதும் நிகழக் கூடியதே. அறிவில் விசாலமும் தெளிவும் பெற விரும்பும் மனம் ஒரு வட்டத்திற்குள் சிறைபட்டுக் கிடக்க எண்ணாது. மாறாக புதிய விஷயங்களைத்தேடித் திரிந்து அதனால் கிடைக்கின்ற புதுத்தெளிவுகள் தருகின்ற விளக்கங்கள் பரந்த சிந்தனைப் போக்கை மட்டும் தருவதோடு நின்றுவிடுவதில்லை. புதிய வாய்ப்புகள் தினம் தினம், நொடிக்கு நொடி ஜனித்து வரும் இந்த புதிய உலகத்தில் ஒரு தகுதி வாய்ந்த அங்கத்துவம் வகிக்கும் மனநிலையை ஒரு தனி மனிதருக்கு இது வழங்குகிறது என நான் நம்புகிறேன்.

உலகின் பல நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களுக்குச் சென்றிருக்கும் அனுபவத்தால் இந்த அருங்காட்சியகங்கள் பார்வையாளர்களுக்கு வழங்குகின்ற வாய்ப்புகள் பற்றிய அனுபவங்கள் எனக்கு ஓரளவு அமைந்திருக்கிறது. பல அருங்காட்சியகங்கள் வெறும் பொருட்காட்சி மையமாக அருங்காட்சியகங்களை நிர்மாணிப்பதில்லை. உலகின் பல அருங்காட்சியகங்கள் ஆய்வுக்கூடங்களாகவே அமைந்திருக்கின்றன .

இவ்வகை அருங்காட்சியகங்கள் பல மொழிகளிலான ஒலிப்பதிவுக் கருவிகளைப் பார்வையாளர்களுக்கு வழங்குகின்றன. ஒவ்வொரு காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ள பொருளின், விரிவான விளக்கங்களைப் பார்வையாளர்கள் அவ்வொலிப்பதிவுக் கருவியின் மூலம் கேட்டு விரிவான விளக்கம் பெற உதவுகிறது. எழுத்தில் விளக்கம் என்பதோடு இந்த ஒலிப்பதிவாக அமைந்திருக்கும் விளக்கங்கள் அக்காட்சிப்பொருள் பற்றிய ஆழமான, அடிப்படையான விஷயங்களை வழங்குவதாக அமைகிறது. பல அருங்காட்சியகங்கள் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் விழியப் பதிவுகளாக சில குறிப்பிட்ட துறையிலான குறும்படங்களைத் திரையிடுகின்றன. இவ்விதமான விழியப் பதிவுகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களைப் பற்றிய விளக்கங்களை விரிவான பார்வையில் விளக்கும் வண்ணம் அமைந்து பார்வையாளர்களுக்குக் கூடுதல் தகவல்களை வழங்குவதாக அமைகின்றன.

அருங்காட்சியகங்களுக்குச் சென்று வரும் போது அங்கே அமைந்துள்ள நூலகத்திலும் பார்வையாளர்கள் அக்குறிப்பிட்ட அருங்காட்சியகம் பற்றியும் அதன் சேகரிப்புக்கள் பற்றியும் அங்கு தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் பற்றியும் குறிப்பிடும் நூல்களையும் பெற்றுக் கொள்ள பல அருங்காட்சியகங்கள் ஏற்பாடுகள் செய்திருக்கின்றன. ஒரு முறை சென்று பார்த்து வந்தோம் என்பதல்லாமல் வீட்டிற்கு வந்த பின்னரும் நாம் கற்று வந்த அவ்விஷயங்களைப் பற்றி மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள இவ்வகை நூல்கள் நமக்கு உதவுவதில் பெறும் பங்களிக்கின்றன. அருங்காட்சியகங்களின் அளவையும் அவை சேகரித்து வைத்திருக்கும் காட்சிப் பொருட்கள், ஆய்வுத்தகவல்கள் ஆகியனவற்றிற்கு ஏற்ற வகையிலும் ஒரு அருங்காட்சியகத்திற்காக நேரத்தை ஒதுக்க வேண்டியது அவசியமாகிறது. ஆய்வுத்துறையில் உள்ளோர் பலர் சில குறிப்பிட்ட அருங்காட்சியகங்களில் பல மணி நேரங்களையும் பல நாட்களையும் செலவிடுகின்றனர் என்பதும் உண்மை.

அருங்காட்சியகங்களுக்குத் தொடர்ந்து சென்று வரும் நான் எனது அனுபவங்களை, நான் பார்த்து பதிந்து வந்த விஷயங்களை வாசகர்களாகிய தங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது எல்லா அருங்காட்சியக அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள எத்தனை பதிவுகள் தேவைப்படுமோ என நினைக்கும் போது மனதில் ஐயம் வருகிறது. எத்தனை பதிவுகளாக இது அமையக் கூடும் என்றும் தெரியவில்லை. எனினும் முடிந்த வரையில் கிடைக்கின்ற நேரத்தில் அவ்வப்போது என் தகவல் அனுபவச் சேகரிப்புகளை இத்தொடரில் பகிர்ந்து வர முயற்சிக்கிறேன் இத்தொடர் இதுவரை அருங்காட்சியகங்கள் மேல் ஆர்வம் இல்லாதிருப்போருக்கு புதிய பார்வையையும் ஆர்வத்தையும் வழங்கினால் அதுவே இத்தொடரின் நோக்கத்தை அடைந்த திருப்தியை எனக்கு அளிக்கும்.

சரி, அறிமுகம் போதும் என நினைக்கிறேன். இனி அருங்காட்சியகங்களுக்குச் செல்வோம். இத்தொடரின் அடுத்த பகுதியில் உங்களை ஒரு அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் செல்கிறேன்.

தொடரும்..

சுபாஷிணி ட்ரெம்மல்