Monday, December 30, 2013

20. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் - தாய்லாந்து

முனைவர்.சுபாஷிணி 


இந்த அருங்காட்சியகம் பற்றிய தொடரில் உங்களை நான் இன்று அழைத்துச் செல்லவிருப்பது தாய்லாந்திற்குத்தான்!

பொருளாதாரப் பிரச்சனைகள்; அரசியலில் நேர்மையற்ற நிலை; சிறுபாண்மையினர் சமூகத்தின் தேவைகள் வாக்களித்தபடி நிறைவேற்றப்படாத ஏமாற்றம்; ஐரோப்பிய ஆஸ்திரேலிய சுற்றுப் பயணிகளின் வரவை மையமாக வைத்து இயங்கும் விபச்சார விடுதிகள் – இவை தற்போதைய தாய்லாந்தைப் பற்றி அடிக்கடி ஊடகங்களின் வழி நாம் கேள்விப்படும் செய்திகள்.  ’இது மட்டுமா தாய்லாந்து?’ என நினைப்பதே கூட தவறு என நம்மை திகைக்க வைக்கின்றது நேரடியாக இங்கு பார்க்கும் போது.

இந்தப் பதிவு ஒரு வகையில் வித்தியாசமானதொரு பதிவு என்றே சொல்வேன். ஏனெனில், இப்பதிவை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்வதும் தாய்லாந்தின் தெற்குப் பகுதி  நகர் ஒன்றிலிருந்து தான் என்பதால்.

இந்தியா, சீனா என்ற இரண்டு பெரிய பண்பாட்டு, நாகரிக செழுமை நிறைந்த நாடுகளுக்கு இடையே அமைந்திருக்கின்றது தாய்லாந்து. இவ்விரண்டு பெரிய நாடுகளின் சமய, பண்பாட்டு, வாழ்வியல் தாக்கங்களின் விளைவாகவும், அதனால் விளைந்த ஒரு கலவையாகவும், ஆனால், அதே வேளை ஒரு தெளிவான தனித்துவம் ஒன்றினையும் பேணும் ஒரு கலாச்சாரத்தைக் கொண்டதாகவும் தாய்லாந்து திகழ்கின்றது.

இன்னொரு சிறப்பும் இந்த நாட்டிற்கு இருப்பதை குறிப்பாகக் காண்கின்றேன். காலனித்துவ ஆட்சியில் சிக்கி சில நூற்றாண்டுகள் தவித்த ஏனைய அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனிசியா போலல்லாது ஐரோப்பியர் வசம் தம் நாட்டை  இழக்காத ராஜ்ஜியத்தைக் கொண்டிருந்த நாடு இது.  அதிலும் குறிப்பாக இங்கிலாந்து, ஹாலந்து ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க கைப்பற்றும் முயற்சிகள் அனைத்தையும் முறியடித்து ஐரோப்பிய காலனித்துவ ஆட்சி என்பதே இல்லாமல் சுய ஆட்சியிலேயே தொடரும் ஒரு பெரும் நாடு இது என்பதே ஒரு தனிப் பெருமை.

இன்றைய இந்தோனிசியாவின் ஒரு தீவான சுமத்ராவிலிருந்து தாய்லாந்தின் தென் பகுதி வரை ஸ்ரீவிஜயா அரசு 10ம் நூற்றாண்டு வரை பரந்து விரிந்திருந்தது. அப்பேரரசும் கொஞ்சம் கொஞ்சமாக பலமிழக்க அதனைப் பயன்படுத்திக் கொண்டு,  போரிட்டு வெற்றி பெற்ற தாய் அரசு இப்போதைய அயோத்யாவில் தனது நாட்டின் முதல் தலைநகரை அமைத்து ஆட்சியைத் தொடங்கியது.  அதன் பின்னரும் கூட பற்பல போர்கள்,  குறிப்பாக பர்மா மற்றும் சீன மலைப்பகுதி அரசுகள் தொடர் தாக்குதல்களை நிகழ்த்தினாலும் கூட, தாய் அரசாட்சி என்பது மட்டும் மறையாமல்,  இன்றும் மன்னராட்சியுடன் கூடிய மக்களாட்சி தொடர்கின்றது.

இந்த ஆண்டு இறுதியையும் 2014ம் ஆண்டின் தொடக்க நாட்கள் சிலவற்றையும் தாய்லாந்தின் சில நகரங்களுக்குப் பயணித்து இந்நாட்டின் வரலாற்று கலாச்சார பின்னனியை அறிந்து கொள்ள வேண்டும் என்றும், தாய்லாந்தின் இயற்கை சூழலில் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு நானும் என் கணவரும் தாய்லாந்து வந்தோம்.  மிக அன்பான ஒரு சுற்றுலா பயண வழிகாட்டி தாய் பெண்மணி ஒருவருடன் 22 பேர் கொண்ட ஜெர்மானிய சுற்றுலா குழுவில் இணைந்து பாங்கோக் தொடங்கி அயோத்யா, சுக்கோத்தை, லம்பாங், சாங் ராய், சாங் மை, லோக் புரி, காஞ்சனாபுரி, சா ஆம் ஆகிய இடங்களுக்கு இப்பயணக்குழுவினருடன் 15 நாட்கள், 2800 கிலோமீட்டர் தூரம் வடக்கு மேற்கு தெற்குப் பகுதிகளில் பயணித்து விட்டு தற்சமயம் கோ சாமூய் தீவிலிருந்து இப்பதிவினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தாய்லாந்தின் அருங்காட்சியகங்களைப் பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு முன்னர் இந்த நாட்டின் வரலாற்றுப் பின்னணியைப் பற்றியும், நாட்டினைப் பற்றியும் சிறிது அறிந்து கொள்வது உதவலாம் என்பதால் ஒரு சிறு குறிப்பு.

பௌத்தம் தாய்லாந்தின் அதிகாரப்பூர்வ மதம்.  அதிலும் நாட்டின் மக்கள் தொகையில் 80% பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவர்கள். ஏனையோர் தாவோயிசம், ஹிந்து சமயம், கத்தோலிக்க கிறிஸ்துவ சமயம் என்ற வகையில் அமைந்துள்ள நாடு இது. இந்த 80% பௌத்தர்களில் ஏறக்குறைய 96 விழுக்காட்டினர் தேரவாத புத்த சமயத்தைப் பின்பற்றுபவர்கள். ஏனையோர் மஹாயானா பௌத்தத்தைப் பின்பற்றுவோர்.

தாய்லாந்து ஒரு அதிசயமான நாடு.

தேரவாத பௌத்தம் என்றாலும் மிகக் கட்டுப்பாடான வகையில் இந்த வகை பௌத்தத்தை கடைப்பிடிப்பது என்பது இங்கு நடைமுறையில் இல்லை.  பல வழக்குகளை இணைத்துக் கொண்டு புதுமையான ஒரு பௌத்த நெறியாக இங்கே பௌத்தம் நடைமுறையில் திகழ்கின்றது.



இரண்டு பௌத்த பிக்குகள் – சந்தையில்

இங்கு பிறக்கும் பௌத்த குடும்பத்து ஒவ்வொரு ஆணும் தம் திருமணத்திற்கு முன்னர் குறைந்தது மூன்று மாதங்களாவது ஒரு பௌத்த ஆலயத்தில் இணைந்து புத்த பிக்குவாக நியமங்களை அனுஷ்டிக்க வேண்டும் என்பது வழக்காக உள்ளது. சமூகத்தளத்தில் அதி உயரத்தில் இருக்கும் மன்னர் முதல் சாதாரண மக்கள் வரை அனைவருக்கும் உள்ள ஒரு விதி இது. இன்றைய மன்னர் பூமிபோல் அவர்களும் புத்த பிக்குவாக சில காலம் இருந்தார் என்பது குறிப்பிடப்பட  வேண்டிய ஒன்று. பெண்களும் வெள்ளை ஆடை உடுத்தி பெண் பிக்குணிகளாக தாம் விரும்பும் எக்காலத்திலும் ஒரு பௌத்த சங்கத்தில் தம்மை இணைத்துக் கொள்ளலாம். ஆணோ பெண்ணோ, தாங்கள் விரும்பும் வரை புத்த பிக்கு, பிக்குணிகளாக இருந்து விட்டு மீண்டும் சங்கத்திலிருந்து வெளியேறி சம்சார வாழ்க்கையில் தம்மை இணைத்துக் கொண்டு தம் வாழ்க்கையைத் தொடரலாம். இதற்கு சங்கத்திலும் சரி குடும்பத்திலும் சரி எத்தடையும் இல்லை. புத்த பிக்குகளுக்கும், பிக்குணிகளுக்கும் உணவு வழங்குவதையும் ஆலயங்களுக்கு நன்கொடை கொடுப்பதையும் மனதார அன்போடு செய்கின்றனர் தாய் மக்கள்.  அனாதையாகத் திரியும் பிராணிகளை எங்கேனும் கண்டால் அவற்றை அருகில் உள்ள புத்த விகாரைகளுக்குக் கொண்டு சென்று சேர்க்கின்றனர். அங்கே அப்பிராணிகள் பாதுகாக்கப்படுகின்றன.

இங்கு என்னை அதிசயத்தில் ஆழ்த்திய ஒன்று…

பௌத்த ஆலயங்களாகட்டும் கட்டிடங்களின் முன்புற வாசலாகட்டும், தனியார் வீடுகளாகட்டும், தங்கும் விடுதிகளாகட்டும், சாலையின் சந்திகளாகட்டும் – எங்கு நோக்கினும் விநாயகரின் மாபெரும் சிலைகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. புன்னகை பூத்த முகத்துடன் நர்த்தனமாடிக் கொண்டும் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டும் அழகாகக் காட்சியளிக்கும் விநாயகர் சிலைகள் ஒரு அதிசயம் என்றால் இன்னும் வியப்பில் ஆழ்த்துவது தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் போன்ற இடங்களில் வாசலில் இருக்கும் சிவபெருமான் சிலைகள் தாம். தாய் மக்கள் சிவபெருமானையும் விநாயகரையும் அதிர்ஷ்டத்தை தரும் தெய்வங்களாக இங்கே கருதுகின்றார்கள்.  அதே போல எல்லா இடங்களிலும் பிரம்மாவின் சிலைகள்.  விஷ்ணுவின் ஒரு அவதாரமாக புத்தரை தாய் மக்கள் கருதுவதால் இங்கு தனியாக விஷ்ணுவுக்கு சிலைகள் இல்லை. ஹிந்து சமயத்தின் மும்மூர்த்திகளே இங்கே தாய்லாந்தின் பௌத்த வழிபாட்டு நடைமுறையில் வித்தியாசமான முறையில் கலந்து விட்டனர் என்பதே ஆச்சரியமளிக்கின்றது அல்லவா?


விநாயகர் ஒய்யாரமாய் ஒரு உணவு விடுதியின் முன்னே

தாய்லாந்தில் நான் பார்த்த பெரிய சிறிய நகரங்கள் அனைத்திலும் புத்த விகாரைகள் எண்ணற்றவை உள்ளன.  ஒவ்வொரு கோயில்களிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட புத்தர் சிலை வடிவங்கள் நிறைந்திருக்கின்றன.  கோயிலைச் சுற்றி பல புத்தர் சிலை வடிவங்கள் தியான நிலையில் இருப்பது போல அமைந்திருந்தாலும்,  கோயில் மூலஸ்தானத்தில் ஏதாகினும் ஒரு வடிவில் சிறப்பான புத்தர் சிலை என்பது அமைந்திருக்கின்றது. சில ஆலயங்களில் இருபது கோண தங்க நிற ஸ்தூபம் தனிக் கோயில் போன்று வடிக்கப்பட்டு மைய வழிபாட்டு அம்சமாக கோயிலில் அமைந்திருக்கின்றது.

புத்தரின் உருவச் சிலைகள் எனும் போது பொதுவாக ஐந்து வகைகள் இருக்கின்றன. தியான வடிவில் புத்தர்; அனந்த சயனத்தில் புத்தர்; நின்ற வடிவில் புத்தர்; நடக்கும் வடிவில் புத்தர்; ஞானம் வழங்கும் வடிவில் புத்தர் இப்படி.

கி.பி. 3ம் நூற்றாண்டு தொடக்கம் பௌத்தம் இங்கு பரவி காலூன்றி செழித்தது என்று அறிந்து கொண்டேன். அதிலும் குறிப்பாக ஸ்ரீ லங்கா, பர்மா, தீபெத் ஆகிய நாடுகளிலிருந்து சியாம் (அப்போதைய தாய்லாந்து)  வந்த பிக்குகளின் முயற்சியால் இங்கு பௌத்தம் அறிமுகமாகியது. இப்படி பல நாடுகளின் தாக்கம் என்பது இருந்தாலும் இங்கு புழக்கத்தில் உள்ள பௌத்தம் பல வழிபாட்டு முறைகளை உள்வாங்கிக் கொண்ட ஒரு பரிமாணத்தில் தாய்லாந்து பௌத்தம் என்ற தனித்துவத்துடன் விளங்குகின்றது. இதில் விநாயகர், பிரம்மா, சிவன் ஆகிய ஹிந்துக் கடவுள்களும் இணைந்து விடுகின்றனர்.  பௌத்த மார்க்க சிந்தனைகளை உபதேசம் கேட்பதும் தியானிப்பதும் பிக்கு, பிக்குணிகளின் தலையாய நெறியாக அமைந்திருக்கின்றது. சாதாரண மக்கள் வழிபாடு, சடங்குகள் என்பனவற்றோடு தியான நெறி​யையும் அனுஷ்டிப்பது வழக்கமாக இருக்கின்றது.

ஆக,  ஒரு வகையில் இங்கு நாம் காணும் ஏறக்குறைய 80 விழுக்காட்டு அருங்காட்சியகங்கள் பௌத்த விகாரைகளுடனோ (Wat) பௌத்த சமயத்துடனோ சம்பத்தப்படுத்தப்பட்டவைகளாகவே இருப்பதைக் காண முடிகின்றது.

தாய்லாந்து தொடர்ச்சியாக பல போர்களை சந்தித்த நாடு என்பதும் உலகின் பல நாடுகளிலிருந்தும் இந்நாட்டிற்கு வணிகப் போக்கு வரத்து என்பது தொடர்ந்து நடைபெற்றுள்ளது என்பதாலும் அத்தகைய வரலாற்று விஷயங்களும் இங்குள்ள அருங்காட்சியகங்களில் கிடைக்கின்றன. ஆனாலும் ஒரு குறை இருப்பதை மறுக்க முடியாது. பெரும்பாலும் அனைத்து அருங்காட்சியகங்களிலும் தாய் எழுத்தில் மட்டுமே விளக்கங்கள் அமைந்திருக்கின்றன. இது அரும்பொருட்களின் தனிச்சிறப்புக்களை தாய் மொழி அறியாதோர் அறிந்து கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுத்துகின்றது.


சுக்கோத்தை – பர்மிய படையினரால் 13ம் நூற்றாண்டில் அழிக்கப்பட்ட அரச மாளிகை வாசலில் (டிசம்பர் 2013)

சரி.  அடுத்த வாரம் வித்தியாசமான ஒர் அருங்காட்சியகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். வரத் தயார் தானே?

Monday, December 23, 2013

19. லூவ்ரெ அருங்காட்சியகம் Louvre Museum (4), பாரிஸ், ப்ரான்ஸ்

முனைவர்.சுபாஷிணி 


சொல்ல வரும் ஒரு விஷயத்தை மறைபொருளாக உருவகப்படுத்தி வைப்பதில் சித்திரக்கலை படைப்பாளர்களுக்கு உதவத் தவறுவதில்லை. நேரடியாகக் காணும் ஒரு காட்சி தானே, அல்லது ஒருவரின் உருவகப் படம் தானே, அல்லது ஒரு நிகழ்வின் காட்சி தானே, அல்லது ஏதோ புரியாத கோடுகளின் சங்கமிப்பில் ஒரு படைப்பு என்பது தானே என ஒரு சித்திரத்தை எடைபோட முடியாது. பல நுணுக்கமான விஷயங்களை, ஒரு சரித்திர நிகழ்வை, சமூக நிகழ்வை அல்லது சமகால சிந்தனையை, ஒரு படைப்பாளியின் சிந்தனையை, கற்பனையை பிரதிபலிக்கும் கருவியாக சித்திரம் அமைந்து விடுகின்றது.

ஐரோப்பாவில் சித்திரங்களின் அமைப்பில் புதிய பாணியும் அணுகு முறையும் 14ம் நூற்றாணடு தொடங்கி பின்னர் 15ம் நூற்றாண்டில் மிக வலுவடைந்தது. அரசர்களின், பிரபுக்களின் ஆதரவைப் பெற்று குறிப்பிடத்தக்க சித்திர வல்லுனர்கள் பல சித்திரங்களை இக்காலகட்டங்களில் படைத்தனர். குறிப்பிடத்தக்க வகையில் இக்கலை இத்தாலியில் சிறப்புடன் வளர்ந்தது. பல  சித்திரக்கூடங்களும் சித்திரங்கள் வரையும் பயிற்சி வழங்கும் பள்ளிகளும் இக்கால கட்டத்தில் உருவாகின. இப்படி எழுந்த முயற்சிகளின் விளைவாக குறிப்பிடத்தக்க கலைஞர்கள் தங்கள் ஓவியத்திறனைக் கொண்டு கருத்துகளுக்கு உருவம் வழங்கும் பணியை செய்து வந்தனர்.

பொதுவாக ஐரோப்பா முழுமைக்கும், 13ம் நூற்றாண்டு தொடங்கி உருவாக்கப்பட்ட சித்திரங்களின் தன்மை கிறிஸ்துவ மறையான கத்தோலிக்க சமயத்தைப் பிரதிபலிக்கும் ஏதாகிலும் ஒரு அம்சத்தைக் கொண்டதாக அமைந்திருக்கும். அதில் ஏசு சிறிஸ்துவின் இறுதித் தீர்ப்பு நாள்,  இரவு உணவு, ஏசுவின் சிலுவையில் ஏற்றப்பட்ட வடிவம், தேவதைகள் ஏசுவின் நிலை கண்டு கண்ணீர் வடிக்கும் நிலை, இறந்த ஏசு பிரானின் உடலை அன்னை மேரியும் ஏனையோரும் சுற்றி நின்று கண்ணீர் உகுத்து மடியில் கிடத்தி வருந்தும் காட்சி என்பதாக ஒரு வகை; அடுத்ததாக, பைபிளில் உள்ள கதைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட சித்திரங்கள். உதாரணமாக ஆதாம் ஏவாள் இவர்களுடன் பாம்பு மரத்தில் தொங்க ஆப்பிளைப் பறிக்கும் சூழல், நரகத்தின் நிலை, தேவதைகள் சுவர்க்கத்தில் மகிழ்ந்திருக்கும் காட்சி என அமைந்திருக்கும். இவையல்லாது ஏனையன, போர்களை விவரிப்பதாக, மன்னனின் அல்லது மன்னனின் குடும்பத்தோர் உருவங்களை மையமாக வைத்து வரையப்பட்டதாக இருக்கும். இவற்றில் பைபிளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட சித்திரங்கள் பல நேரடி விளக்கத்தைத் தருவன அல்ல. மறைமுக கருத்துக்களை உட்புகுத்தி உருவாக்கப்பட்டவை பல.

லூவ்ரே அருங்காட்சியகத்தில் இப்பதிவில் நாம் காணவிருப்பது இங்குள்ள சித்திரக்கூடத்தைத் தான்.   எண்ணற்ற விலைமதிக்க முடியாத பல சித்திரச் சேகரிப்புக்களின் கூடம் லூவ்ரே.  டெனோன் (Denon) பகுதியில் முதல் மாடியிலும் இரண்டாம் மாடியிலுமாக இச்சித்திரங்களின் சேகரிப்புக்கள் இடம்பெறுகின்றன. முதலாம் மாடியில் இத்தாலி, ஸ்பெயின் கலைஞர்கள் உருவாக்கிய சித்திரங்கள் இடம்பெறுகின்றன. இரண்டாம் மாடியில்  ப்ரான்ஸ் பெல்ஜியம், ஜெர்மனி, ஹாலந்து, வடக்கு ஐரோப்பாவின் ஏனைய நாட்டு கலைஞர்களின் படைப்புக்கள் என இடம் பெறுகின்றன.

மன்னன் முதலாம் ப்ரான்ஸிஸ் முதலில் இத்தாலியின் அரச மாளிகையில் இருக்கும் சித்திரங்களைப் போல தனது மாளிகை ஒன்றில் சித்திரக்கூடம் ஒன்று அமைக்க திட்டமிட்டார். அதன் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட முயற்சியின் பலனாகச் சேர்ந்தவைதான் இன்று லூவ்ரேவில் இருக்கும் இப்பகுதி சேகரிப்புகள். இந்த மன்னன் இத்தாலியில் புகழ்பெற்ற கலைஞர்களான மைக்கல் ஏஞ்சலோ,  ரஃபேல் ஆகியோரது கலைப் படைப்புக்களை வாங்கி தனது மாளிகையில் அவற்றை இணைத்துக் கொண்டார். அது மட்டுமில்லாது சித்திரக் கலைஞர்களையும் தனது மாளிகைக்கு சிறப்பு அழைப்பில் அழைத்தார். லியோனார்டோ டா வின்சி இந்த வகையில் மன்னன் முதலாம் ப்ரான்ஸிஸின் அழைப்பின் பேரில் இங்கு  அழைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வகை முயற்சிகளின் வழி சித்திரச் சேகரிப்புகள் பெருகின.

மன்னன் 14ம் லூய்ஸ் மேலும் தொடர்ந்து தனது சேகரிப்பிற்காக இத்தாலிய சித்திரங்களை வாங்கி இணைத்தார். அதுமட்டுமில்லாது ஸ்பேனிஷ் கலைஞர்களின் ஓவியங்களையும் தனது சேகரிப்பில் இடம்பெறச் செய்யும் முயற்சியில் இறங்கி முரியோ (Murillo)  வின் கலைப்படைப்புகளை வாங்கி இணைத்தார்.  அதன் பின்னர் பல ப்ரென்ஞ்ச் சித்திரக் கலைஞர்களின் ஓவியங்கள் இச்சேகரிப்பில் இணைந்தன.

இனி இங்குள்ள சில ஓவியங்களை மட்டும் அதன் விளக்கத்துடன் காண்போம்.

Alexander in Babylon (1665)

இது ப்ரெஞ்ச்  ஓவியக் கலைஞர் சார்ல்ஸ் லெ ப்ரூன் (Charles Le Brun ) வரைந்த சித்திரம்.

கி.மு 333ல், பெர்ஸிய மன்னன் மூன்றாம் டார்ஸியுஸை போரில் தேற்கடித்து வெற்றிக் கொடி ஏந்திக் கொண்டு பாபிலோன் நகரத்திற்கு வருகின்றான் மாவீரன் அலெக்ஸாண்டர். அங்கே அவனுக்கு நகரின் கதவுகள் திறக்கப்படுகின்றன; நல்வரவு நல்கப்படுகின்றது.  இது அவனை திகைக்க வைக்கின்றது. 3ம் டாரியுஸின் படையிலிருந்து பிடிக்கப்பட்ட 2 யானைகள் ஓட்டி வரும் வாகனத்தில் வலம் வருகின்றான் அலெக்ஸாண்டர். இக்காட்சியில் பாபிலோனின் தொங்கும் தோட்டம் பின்புறக்காட்சியாக அமைந்திருக்கின்றது.  1665ம் ஆண்டில் இந்த ஓவியம் வாங்கப்பட்டு சித்திரக் கூடத்தில் இணைக்கப்பட்டது.

மன்னன் 14ம் லூய்ஸ் ஐரோப்பாவில் நிகழ்ந்த சில குறிப்பிடத்தக்க போர்களில் சிறந்த வெற்றி பெற்றவன். தன் பெருமைகளை வீரன் அலெக்ஸாண்டருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் வகையில் இந்த ஓவியம் அமைந்திருப்பதால் இதனை தன் சேகரிப்பில் இணைத்திருக்கின்றார்.  அது இப்போது லூவ்ரேவின் அருங்காட்சியகத்திற்குச் சிறப்பு சேர்க்கிறது.


A Table of Desserts (1640)

இது ஒரு டச்சு கலைஞனின் படைப்பு. மாட்டிசே Matisse இதன் 1635 அசலான டி ஹீம் வரைந்த ஓவொயத்தின் அடிப்படையில் இதனை உருவாக்கி  அதில் அதிகப்படியான பிரமாண்டத்தைச் சேர்க்க பாரோக் கலைவடிவத்தை இணைத்து உருவாக்கிய ஒன்று இது.

இது உணவு உண்ணல் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்ட படைப்பு.  விசித்திரமான இச்சித்திரத்தில் வெவ்வேறு சீதோஷ்ணத்தில் கிடைக்கும் பழங்களையும் க்ளாஸில் உள்ள வைன்,  அதோடு ஆங்காங்கே இசைக் கருவிகள் என பல அமசங்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இதில் ஒரு ஒழுங்கற்ற முறை தென்படுவதையும் காணமுடியும். ஒவ்வொரு பழத்திற்கும் ஒரு பொருள் இருப்பதாக குறியியல் அறிஞர்கள் (symbologist)  கருதுவதாகவும் குறிப்பு உள்ளது.  பைபிளில் குறிப்பிடப்படும் fruit if paradise  ஆகிய செர்ரி,  மறுக்கப்பட்ட பழங்களான ஆப்பிள், பீச் ஆகியவை தென்படுவதால் மறைமுக கருத்துக்கள் கொண்ட ஒரு கலைப்படைப்பு இது என்பது அவர்களின் விளக்கம்.


Allegory of Fortune (1729)

இது ஒரு ப்ளெமிஷ் (பெல்ஜியம்)  படைப்பு

ரோமன் கடவுள் ஃபோர்ச்சுனா இதில் ஒரு உலக உருண்டையின் மேல் இருப்பதாகக் காணலாம். நிலையற்ற தன்மை கொண்டது அதிர்ஷ்டம். இந்த உலக உருண்டை ஒரு கப்பலில் இருப்பது போலவும் அமைக்கப்பட்டுள்ளது.  கடலில் பயணிக்கும் பயணம் போன்றது வாழ்க்கை; நிறைய எதிர்பாராத விஷயங்கள் நேரலாம், என்ற வகையில் பொருள் கொள்ளலாம்.

மண்னன் 14ம் லூயிஸின் சேகரிப்பிலிருந்து பெறப்பட்ட ஓவியம் இது. இதன் அசலை உருவாக்கியவர் 2ம் ப்ரான்ஸ் எனப் பெயர்கொண்ட பெல்ஜிய ஓவியக் கலைஞர்.


Charles VII (1403-1461), King of France (1445)

1445ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சித்திரம் இது. பேரரசன் 7ம் சார்ல்ஸின் உருவப்படம் கொண்ட ஓவியம். இந்த மன்னன் அச்சமயத்தில் இங்கிலாந்துக்கும் ப்ரான்ஸுக்கும் இடையே நிகழ்ந்த நூறாண்டுப் போரில் மாபெரும் வெற்றியை ப்ராஸிற்கு பெற்று வந்ததன் பின்னர் உருவாக்கப்பட்ட படைப்பு.  ப்ரெஞ்சுப் படைப்பான இதனை வரைந்தவர் Jean Fouquet. ஆரம்பத்தில் யாரால் உருவாக்கப்பட்ட ஓவியம் இது என்பதில் சரியான தகவல் கிடைக்காவிடினும் பல ஒப்பீடுகளுக்குப் பிறகு இவை ப்ரெஞ்சு ஓவியர் Jean Fouquet உருவாக்கிய சித்திரம் என்பது அறியப்பட்டது.

இப்படி இங்கு இன்னும் பல ஓவியங்கள்.. அவற்றையும் அடுத்தடுத்து என பார்த்துக் கொண்டே செல்லலாம்.  அதோடு உலகின் பல நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட ஆவணங்களும் கலைப்பொருட்கலும் அரும்பொருட்களும் அடங்கியிருக்கும் மாபெரும் பொக்கிஷம் இம்மண்டபம். ஆனால் நாம் ஏனைய அருங்காட்சியகங்களுக்கும் செல்ல வேண்டுமல்லவா?

அடுத்ததாக உங்களை மற்றுமொரு அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்கிறேன். ஐரோப்பாவை விட்டு சற்றே நெடுந்தூரம் செல்வோம்.

வேறொரு நாட்டிற்கு வேறொரு அருங்காட்சியகத்திற்கு!​

குறிப்பு: படங்களில் சில http://www.louvre.fr/en

Monday, December 16, 2013

18. லூவ்ரெ அருங்காட்சியகம் Louvre Museum (3), பாரிஸ், ப்ரான்ஸ்

முனைவர்.சுபாஷிணி 

இப்போது நாம் லூவ்ரே அருங்காட்சியகத்தில் எகிப்திய பண்டைய நாகரீகச் சின்னங்கள் அரும்பொருட்கள் இருக்கும் பகுதிக்குச் செல்கின்றோம்.

1798-1801 ஆண்டு காலவாக்கில் நெப்போலியன் போனபார்ட்டின் எகிப்திய வருகை அவனுக்கு அந்த தேசத்தின் பண்டைய கலைப் பொக்கிஷங்களின் மேல் அளவற்ற ஆர்வத்தையும் மயக்கத்தையும் உண்டாக்கியிருக்கும் என்றே நினைக்கின்றேன். ஆனாலும் அவன் பயணம் முடிந்து திரும்புகையில் கொண்டு வந்தவையாக இங்கு கணிசமான எகிப்திய தொல்லியல் சான்றுகளோ ஏனைய ஆவணங்களோ இல்லை. மாறாக இங்கிருப்பவை பெரும்பாலும் அதற்கும் முன்பே மன்னன் 18ம் லூயிஸ் காலத்தில் சேர்த்தவையும் மேலும் தனியார் சேகரிப்பாக இருந்து பின்னர் இந்த அருங்காட்சியகத்துக்கு வந்து சேர்ந்தவையும் என்றே குறிப்பிடலாம்.

மன்னன் லூயிஸின் காலத்தில் சேகரிக்கப்பட்ட எகிப்திய அரும்பொருட்கள் ஏராளம். இன்றிருக்கும் நக்தோர்ஹெப் சிலையும் சேக்மட் சிலையும் அப்போது கொண்டு வரப்பட்டவையே. 1824லிருந்து 1827 வரை பற்பல சேகரிப்புக்களிலிருந்து என ஏறக்குறைய 9000 அரும்பொருட்கள் இங்கே கொண்டு வரப்பட்டதாம். இவை அனைத்தையும் பாதுகாக்கவும் ஆராய்ச்சி செய்யவும் ஒரு தனித்துறையை லூவ்ரே அருங்காட்சியகத்தில் அப்போதைய மன்னன் அமைத்திருக்கின்றார்.

இக்காலகட்டத்தில் லூவ்ரே அருங்காட்சியகத்தின் ஆதரவில் தொல்லியல் ஆய்வறிஞர் மரியேட் எகிப்துக்குப் பயணமானார் அங்கே அவர் கண்டெடுத்தவையே செராப்பியம் சக்காரா இவையிரண்டு கலைசிற்பத் தொகுதிகளும். இங்கே அவர் தொடர்ந்து களப்பணிகளை நடத்திக் கொண்டிருந்தார். 1852 முதல் 1853 வரை நடத்திய களப்பணிகளில் 5964 அரும்பொருட்கள் எகிப்தில் கண்டெடுக்கப்பட்டன. அவையனைத்தையுமே ஒன்று விடாமல் பாரிஸுக்கு அனுப்பி வைத்தார் மரியெட். களப்பணி முடிந்து பாரிஸ் திரும்பியதும் இவரே லூவ்ரே அருங்காட்சியகத்தில் எகிப்திய பண்டைய அரும்பொருட்கள் பகுதியின் அமைப்பாளராக பணியிலிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அகழ்வாய்வின் போது உயிரைப் பணையம் வைத்து களப்பணிகளில் ஈடுபட்டவர் மரியட். அப்படித் தேடி கண்டெடுத்த விலைமதிப்பற்ற அப்பொருட்களின் அருமை பெருமை அறிந்து அவை சரியாகப் பாதுகாக்கப்பட வேண்டும், இதனால் ப்ரான்ஸ் நாட்டிற்கும் பெருமை ஏற்படும் என்ற எண்ணம் அவருக்கு மனம் நிறைய இருந்திருக்க வேண்டும்.

இக்காலகட்டத்தில் ஆங்கிலேய, ஜெர்மானிய, ப்ரென்ச் தொல்லியல் அறிஞர் குழுக்கள் சில எகிப்தில் வரிசையாக பல அகழ்வாய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தன. உதாரணமாக அபு ரோசா அகழ்வாய்வு, ஆசூய்ட் அகழ்வாய்வு, பாவிட் அகழ்வாய்வு, மெடாமுட் அகழ்வாய்வு என சிலவற்றை குறிப்பிடலாம். இதன் அடிப்படையில் தொடர்ந்து சில அரும்பொருட்கள் லூவ்ரெவிலும் வந்து சேர்ந்தன.

லூவ்ரெவின் எகிப்திய அரும்பொருட்கள் பகுதியில் இருக்கும் சில அற்புதப் படைப்புகளைக் காண்போம்.

1

மூன்று கடவுள்கள் இருக்கும் வகையில் ஒரே க்ரனைட் கல்லில் செதுக்கப்பட்ட ஒரு சிற்பம் இது. தரையில் வைக்கப்பட்டிருக்கின்றது. ஒரு அரசன் (ராம்ஸஸ் II அல்லது மெர்னெபத் ஆக இருக்கலாம்) இடது புறத்திலிருக்க, கழுகுத் தலை கொண்ட இறைவடிவமான ஹோருஸ் வலது புறமிருக்க நடுவிலே கடவுள் ஓஸிரிஸ் நிற்கும் வகையில் அமைந்த சிற்பம் இது. ஏறக்குறைய கிமு 1279-1203 வாக்கில் உருவாக்கப்பட்ட ஒரு சிற்பம் இது. 1.34 மீட்டர் உயரமும் 0.78 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு வடிவம். 1818ம் ஆண்டில் இது லூவ்ரே அருங்காட்சியகத்திற்காக வாங்கப்பட்டது.

 2

மன்னர் 3ம் ராம்ஸஸின் உடலை வைத்திருந்த கல்லறை கற்பெட்டி. இந்தக் கற்பெட்டியைச் சுற்றிலும் ஹிரோக்லிப்ஸ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அருங்காட்சியகத்தின் குறிப்பின்படி இது Book of Amduat நூலின் 7ம், 8ம் அத்தியாயங்களைக் கொண்டிருக்கின்றது என்பது தெரிய வருகின்றது. இக்கற்பெட்டியின் உள்ளே Book of Gates நூலின் முதல் அத்தியாயம் ஹிரோக்லிப்ஸ் எழுத்துருவில் கீறப்பட்டிருக்கின்றது. இதன் காலம் கிமு 1184-1153. இது கண்டெடுக்கப்பட்ட இடம் அரச பள்ளத்தாக்கு (Valley of King, Tomb of Ramses III). 1826ம் ஆண்டில் இது லூவ்ரே அருங்காட்சியகத்திற்காக வாங்கப்பட்டது.


அக்தெதொப் மஸ்தாபா – சக்காரா சேகரிப்பு.

இதில் ஒரு ஊழியன் ஆட்டினைப் பிடித்து இழுத்துச் செல்வது போல வடிக்கப்படுள்ளது. இது ஒரு பெரிய பாறையின் மேல் தீட்டப்பட்ட தொடர் சித்திரத்தின் ஒரு பகுதி மட்டுமே. இச்சித்திரங்களோடு ஹிரோக்லிப்ஸ் எழுத்துக்களும் ஆங்காங்கே இருப்பதைக் காணலாம். இச்சித்திரத்தின் கதையினை விளக்கும் முகமாக அவை கீறப்பட்டிருக்க வேண்டும்.

இவை மட்டுமின்றி, 3ம் ராம்ஸஸ் கட்டிய கோயில்களின் சில சுவர் பகுதிகள், மன்னன் எக்னத்தோன் கட்டிய கோயில்களின் சில சுவர் பகுதிகள், அரசர்கள் பள்ளத்தாக்கில் நிகழ்த்திய தொல்லியல் ஆய்வுகளின் போது கிடைத்த மம்மிகள், அவற்றோடு சேர்த்து வைக்கப்பட்டிருந்த பொன்னும் மணிகளும், வைர வைடூரியங்களினாலான ஆபரணங்கள், வாகனங்கள், வீட்டு அலங்காரப் பொருட்களாகிய நாற்காலி, ஜாடிகள், மேசை என பல பொருட்கள் இங்கே அடுத்தடுத்து என நமது கண்களுக்கு விருந்தாகிப் போகும்.

மன்னர்கள் அல்லது ராஜ குடும்பத்தைச் சேர்ந்தோர் இறந்து போனால் அவர்களின் உடலை பதப்படுத்தி மம்மியாக்கி அதனை ஒரு பேழைக்குள் வைத்து அப்பேழைக்குள் அந்த மனிதரின் பொருட்களையும் சேர்த்து வைத்து புதைப்பது அக்கால எகிப்திய வழக்கம். இப்படி மம்மியாக செய்யப்படுபவர்களின் அந்தஸ்திற்கேற்ப பேழைகளின் தன்மைகள் அமையும். உதாரணமாக துரதிஷ்டவசமாக மிக இளம் வயதிலேயே இறந்து போன தூத்தான்சாமூனின் மம்மியும் அம்மம்மியோடு கூடவே கண்டுபிடிக்கப்பட்ட ஏனைய பொருட்களும் இப்பகுதி அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட போது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தங்கத்தினாலான பேழைக்குள் மன்னனின் மம்மி உடல் இருந்தது. மூன்று பேழைகள், தேர்கள், படுக்கைகள், என வரிசை வரிசையாக பல பொருட்களை அம்மன்னன் இறந்தும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சேர்த்தே வைத்துப் புதைத்து விட்டார்கள்.

இது நடந்தது சில ஆண்டுகளுக்கு முன். இது போல பல மன்னர்களின் இறந்த உடலின் மம்மியோடு கண்டெடுக்கபப்ட்ட விலைமதிக்க முடியாத ஆபரணங்களும், அரும்பொருட்களும் மண்ணுக்குள் புதையுண்டு போகாமல் ஐரோப்பா மட்டுமின்றி அமெரிக்காவின் பல அருங்காட்சியகங்களிலும் வீற்றிருந்து பெருமை சேர்த்துக் கொண்டிருக்கின்றன.

தொடரும்..​

Tuesday, December 10, 2013

17. லூவ்ரெ அருங்காட்சியகம் Louvre Museum (2), பாரிஸ், ப்ரான்ஸ்

முனைவர்.சுபாஷிணி 


நாம் இப்பொழுது லூவ்ரெ அருங்காட்சியகத்தில் 6ம் எண் அறைக்கு வந்திருக்கின்றோம்.  நேராக அங்கு சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் மோனா லிஸா படத்தைத் தான் இப்போது பார்க்கின்றோம். டாவின்சியின் மோனா லிஸா !

இரண்டு பக்கங்களும் கைப்பிடியுள்ள ஒரு மர நாற்காலியில் அமர்ந்து இடது பக்க கைப்பிடியில் தன் இரு கைகளையும் வைத்துக் கொண்டு இடது புறமாக தன் தலையைத் திருப்பி அதே சமயம் நேராகப் பார்க்கும் வகையில் இந்த உருவம் வரையப்பட்டிருக்கின்றது. மோனா லிஸாவிற்குப் பின்புறம் தெரிவதாக அமைந்துள்ள இயற்கை காட்சியில் இரண்டு வகையான காட்சிகளின் தன்மையைக் காண முடியும். முதலில் இயற்கை காட்சியாக சிறு குன்றுகள் பாதைகள் போன்றவை இயற்கையின் வர்ணங்களாகவும் அதன் பின்னே அடுத்து தெரியும் காட்சி கற்பனை உலகம் போல வெளிர் நீல நிறத்தில் விரிந்த பரந்த ஒரு பகுதியைக் காட்டுவது போலவும் அமைந்திருக்கின்றது.




மோனா லிஸாவின் உருவ அமைப்பையும் உடைகளையும் காணும் போது மிக எளிமையான தோற்றத்தை இப்படம் அளிப்பதை உணர முடியும். அரச குடும்பத்து பெண்மணியாகவோ பொருள் வசதி படைத்த ஒரு பெண்ணின் உருவமாகவோ காட்டாமல் ஒரு சாதாரண பெண், ஆளுமை நிறைந்த திடமான மனத்துடனான ஒரு பெண்ணாகவே மோனா லிஸா காட்டப்படுகின்றார். அவரது தெளிவான பார்வை இப்படைப்பின் தன்மையையும் நமக்கு வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. நகைகள் ஏதும் கழுத்திலோ கைகளிலோ காதிலோ காணப்படவில்லை. அகன்ற கழுத்துப்பகுதி தெரியும் வகையில் அதே வேளை நுணுக்கமாகத் தைக்கப்பட்ட ஒரு பழுப்பு நிற ஆடையுடனும் தலையில் முடியின் மேல் மெலிதான ஒரு துணியை அணிந்திருப்பதையும் காணலாம்.

பல அரிய கண்டுபிடிப்புக்களையும் கலைச் சிற்பங்களையும் ஓவியங்களையும் உலகுக்கு அளித்த மாபெரும் சிற்பி லியோனார்டோ டாவின்சி. இவரைப் பற்றியும் இவரது அறிவியல் கண்டுபிடிப்புக்களையும், சிந்தனைகளையும் பற்றி யோசிப்பதே எனக்கு பல வேளைகளில் மனதை மகிழ்விக்கும் ஒரு விஷயமாக அமைந்து விடும். டாவின்சியின் அறிவியல் கலைப்படைப்புக்களைத் தனித்தனியாக எடுத்துப் பார்த்து அவற்றை அவரது பார்வையின் ஊடாக சிந்தனையின் பாதையில் சென்று விவரிக்க வேண்டும் என்ற ஆவலும் எனக்கு மனதில் இருக்கின்றது. அதனைப் பிரிதொரு முறை நேரமும் வேளையும் கூடி வரும் போது நிச்சயம் செய்ய நினைத்திருக்கின்றேன். இப்போது மோனா லிஸாவை மட்டும் பார்ப்போம்.

மோனா லிஸாவை யார் கேட்டு, எத்தகைய சூழலில், யாருக்காக டாவின்சி வரைந்தார் என்பது தெளிவாக அறியப்படாத ஒன்று. கிடைக்கின்ற  பழைய வஸாரியின் ஆட்டொ பையோக்ராபியிலிருந்து  இந்த  ஓவியத்தை Francesco del Giocondo என்ற வர்த்தகருக்காக அவரது மனைவியின் (Gherardini) உருவப்படத்தை 1502ல் அவர்களுக்குப் பிறந்த குழந்தையின் வரவை நினைத்து மகிழவும் புது மனைக்குச் சென்ற மகிழ்ச்சியைக் கொண்டாடவும் அவரது வேண்டுதல் படி டாவின்சி வரைந்த ஒரு ஓவியம் என்று தெரிகிறது.  ஜியோர்ஜியோ வஸாரி இந்தச் செய்தியை விவரிக்கும் வகையில் ஒரு பகுதியை தனது சிற்பக் குறிப்பு தொகுப்பு நூலில் பதிகின்றார். வஸாரி, டான் ப்ரவ்னின் புதிய நாவலான இன்பர்ஃனோவில் மிக முக்கிய பாத்திரம் என்பதையும் இவ்வேளையில் நாம் குறிப்பிட வேண்டும். வஸாரி இப்பதிவில் மோனா லிஸா உண்மையில் கெரார்டினியின் உருவம் எனக் குறிப்பிட்டிருந்தாலும் கூட இதுவே  மோனா லிஸா உருவான கதை என முழுதும் நம்பி விடவும் முடியாது என்றே தெரிகிறது.

மோனா லிஸா எனும் இப்படம் ஒரு சாதாரண ஓவியம் அன்று.  ஐரோப்பாவின் ரெனைஸான்ஸ் சிந்தனை மாற்றத்திற்கு அடிப்படையாக அமைந்த பல கலைப்படைப்புக்களில் பிரதான நிலையைப் பெறும் ஒரு ஓவியம் இது. இது மட்டுமன்றி தற்கால சூழலில் ஐரோப்பா மட்டுமன்றி உலக நாடுகள் அனைத்திலும் பிரபலமடைந்த ஒரு ஓவியம் இது என்பது யாரும் மறுக்கவும் முடியாது.

மோனா லிஸாவின் படங்களின் பிரதிகளை பலர் உருவாக்கினாலும் டாவின்சி இந்த  ஓவியத்தை வரைந்த வேளையில் அவருக்குப் பின்புறமாக அமர்ந்து டாவின்சியின் மாணவர் ஒருவர் அதே ஓவியத்தை வரைந்தார் என்பதுவும் அவ்வோவியம் பல ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்தபோது அதனைப் பெற பலர் முயன்றாலும் இறுதியில் அவ்வோவியம் ஸ்பெயின் மட்ரிட்டின் மாபெரும் அருங்காட்சியகமான ப்ராடோவின் விலைமதிக்க முடியாத அரும்பொருட்களின் வரிசையில் இணைந்து கொண்டது என்பதுவும் உண்மை. இந்த ஓவியத்தையும் நான் நேரில் ப்ராடோ அருங்காட்சியகத்திலேயே பார்த்து புகைப்படங்களும் எடுத்துள்ளேன். டாவின்சியின் மோனா லிஸாவின் முகத்தில் தெரியும் சிறு முதிர்ச்சி இல்லாத சற்று இளமை தெரியும் முகச் சாயலோடு இந்த மோனா லிஸாவின் உருவப்படம் இருக்கும்.



டாவின்சி ஒரு சாதாரண மனிதரோ வெறும் கலைஞரோ அல்ல. புதிய உலகம் படைக்க வந்த சிற்பிகளில் சிறப்பிடம் பெறும் ஒருவர். ஒரு வகையில் டாவின்சி தனது மனத்தின் செய்தியை மறைமுகமாக வெளிப்படுத்த பயன்படுத்திய ஒரு கருவியே  மோனா லிஸா என்பது தற்கால குறியீடு வல்லுனர்கள் (Symbologists)  கூறும் தகவல்.

உற்று நோக்கும் போது மோனா லிஸாவின் முகத்தில் புருவம் இல்லாமையும், கண்களில் மயிர் முடி இல்லாததையும் நாம் காண்போம். வலது கையை இடது கைமேல் வைத்திருக்கும் போதும் வெளியே தெரியும் கர்ப்பமான பெண்ணின் பெரிய வயிற்றுப் பகுதி மேரி மெக்டலின் ஏசு கிறிஸ்து இறந்த சமயத்தில் கர்ப்பமாக இருந்தார் என்ற வகையில் வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த நிகழும் வாதங்களுக்கும் காரணமாக அமைகின்றது. கத்தோலிக்க கிறிஸ்துவ அடிப்படை நம்பிக்கைகளின் ஆதாரங்களை அசைக்க முயலும் ஒரு மாஸ்டர் பீஸ் மோனா லிஸா என்பது கடந்த சில ஆண்டுகளில் பரவி வரும் ஒரு தகவலாகவும் உள்ளது. இதனைச் சுற்றி அமைந்ததாக வருவதே டான் ப்ரவ்னின் டாவின்சி கோட் நாவலும் அதனை மையமாக வைத்து சோனி ப்ரொடக்‌ஷன்ஸ் எடுத்த அதே தலைப்பிலான திரைப்படமும். இந்த நூல்கள் மட்டுமன்றி குறிப்பிடத்தக்க பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன.  தொடர்ந்தும் வெளிவருகின்றன. உதாரணமாக, Fear Not, Buried by the Church, The truth and fiction in the DaVinci Code, Gospel Code, the DaVinci Hoax  போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

மோனா லிஸாவின் மந்திரப் புன்னகை சொல்லும் உண்மையான ரகஸியத்தை அறிவது நமக்கு எளிதல்ல. தொடரும் ஆய்வுகளுக்கு மேலும் பல ஆவணங்கள் கிடத்தால் ஆய்வுலகம் மகிழ்ச்சியடையும்.

லூவ்ரெ அருங்காட்சியகத்தின் உள்ளே சுவற்றின் நடுவே வைக்கப்பட்டிருக்கும் மோனா லிஸா உருவப்படத்தை நேரில் காணும் அனுபவம் பெற இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள். பல கோணங்களில் இப்பக்கத்தில் மோனா லிசா பற்றிய தகவல்களைப் பெறலாம்.  http://musee.louvre.fr/oal/joconde/indexEN.html

தொடர்ந்து அடுத்த அறைகளுக்குச் செல்வோம். லூவ்ரே நமக்கு பல அதிசயங்களை வைத்திருக்கின்றது.

தொடரும்..!

Monday, December 2, 2013

16. லூவ்ரெ அருங்காட்சியகம் (Louvre Museum), பாரிஸ், ப்ரான்ஸ்


முனைவர்.சுபாஷிணி 

டான் ப்ரவுனின் ‘டாவின்சி கோட்’ படம் பார்த்த பலருக்கு ரோபர்ட் லேங்க்டன் பாரிஸுக்கு வந்து முதலில் செல்லும் அந்த மாபெரும் அருங்காட்சியகக் கட்டிடம் ஞாபகம் இருக்கலாம்.   இப்படத்தில் ஏறக்குறை இறுதிக் காட்சிகளில் வருகின்ற  ஒரு கட்டிடத்தின் முன்புறத்தில் கண்ணாடியால் ஆன ஒரு பிரமிட் முன்புறத்தில் அமைந்திருப்பது போல இருக்க, அதனை வியப்புடன் பார்த்து தான் தேடிக் கொண்டிருக்கும் பொருள் அங்குதான் இருக்கின்றது என நினைத்துக் கொண்டு லேங்டன் மலைத்துப் போய் நிற்கும் காட்சியையும் பலர் இன்னமும் ஞாபகத்தில் வைத்திருக்கலாம். உங்கள் அனைவரையும் இந்த மாபெரும் அருங்காட்சியகத்துக்குத்தான் அழைத்துச் செல்லவிருக்கின்றேன்.


லூவ்ரெ அருங்காட்சியக வளாகம் (2010)

652,300 அடிப்பரப்பில் ஒரு கட்டிடம். அப்படியென்றால் எவ்வளவு விரிவான ஒரு கட்டிடம் இது என்பதை கற்பனை செய்து பாருங்கள். உலகின் மிகப் பிரசித்தி பெற்ற, அதிகம் வருகையாளர்களைச் சந்திக்கும் ஒரு அருங்காட்சியகம் லூவ்ர என்பதும் ஒரு சிறப்புச் செய்தி.  http://en.wikipedia.org/wiki/List_of_the_most_visited_museums_in_the_world விக்கிபீடியாவின் இப்பக்கத்தின் நிலவரப்படி, உலகின் மிக அதிகமாக வருகையாளர்கள் வந்து செல்லும் அருங்காட்சியகத்தில் முதலிடம் பெறும் அருங்காட்சியகமாக இது திகழ்கின்றது. வருகையாளர் பட்டியல் குறிப்புப்படி வருடத்திற்கு 8 மில்லியன் வருகையாளர்களைச் சந்திக்கும் ஒரு கட்டிடம் இது என்றால் இதன் பெருமையை ஓரளவு ஊகித்து அறிந்து கொள்ளலாம் அல்லவா?.

லூவ்ரெ அருங்காட்சியகத்துக்கு 2010ம் ஆண்டில் முதன் முதல் செல்லும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. ஆனால் சென்ற போது மதியமாகியிருந்ததால் முழுமையாக இந்த அருங்காட்சியகத்தை நான்  பார்க்க முடியவில்லை. இரண்டறை மணி நேரங்கள் மட்டுமே இந்த மாபெரும் வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடத்தில் செலவிட முடிந்தது. முழுமையாக  மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும். அதற்கு ஒரு முழு நாள் நிச்சயமாக ஒதுக்கத்தான் வேண்டும். காலையிலிருந்து மாலை வரை இங்கு இருந்தால் தான் அனைத்தையும் பார்க்க முடியும். அது கூட போதாதோ என்றே நினைக்கத் தோன்றுகின்றது.



நுழைவாயிற்பகுதி (2010)

லூவ்ரெ கட்டிடத்தைப் பற்றிய ஒரு அறிமுகம்.

இவ்வருங்காட்சியகம் செவ்வாய்க்கிழமை தவிர்த்து ஏனைய நாட்கள் காலை 9:30 லிருந்து பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கும். இந்த அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கமாகிய http://www.louvre.fr/en சென்று எந்த நாட்களில் எத்தனை மணி வரை திறந்திருக்கும் என்ற விபரங்களை அறிந்து கொண்டு உங்கள் பயணத்தை முடிவு செய்துகொள்ளலாம். இதே வலைப்பக்கத்தில் அவ்வப்போது நடைபெறும் கண்காட்சிகள் பற்றிய விபரங்களும் இந்த அருங்காட்சியகம் பற்றிய தகவல்களும் நிறைந்திருக்கின்றன.

லூவ்ர அருங்காட்சியகத்தின் உள்ளே உள்ள கலைப்பொருட்களை காண்பதற்கு முன்னர் இந்தக் கட்டிடத்தைப் பற்றி ஓரளவு அறிமுகம் தருவதும் தேவை என்று நினைக்கின்றேன். இன்று அருங்காட்சியகமாக இருக்கும் இக்கட்டிடம் அடிப்படையில் 2ம் பிலிப்ஸ் 12ம் நூற்றாண்டில் கட்டிய ஒரு அரண்மனையாகும். தற்போது இருக்கும் முழு கட்டிடமாக அது ஆரம்பத்தில் இல்லை. 17ம் நூற்றாண்டில் பல புதிய பகுதிகளை மன்னர் 14ம் லூய்ஸ் இணைத்து விரிவாக்கினார்.  இவரது காலத்தில் தான் இந்தக் கட்டிடம் அரச குடும்பத்தின் அரும்பொருட்களைக் காட்சிக்கு வைக்கும் ஒரு அருங்காட்சியகமாக உருவெடுத்தது. பின்னர் ப்ரெஞ்ச் புரட்சியின் போது இக்கட்டிடம் பொதுமக்களுக்கான அருங்காட்சியகமாக உருவாக வேண்டும் என்று முடிவாகியது.

அருங்காட்சியகமாக 1793ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் திகதி 537 ஓவியங்களுடன் இக்கட்டிடம் பொதுமக்களுக்குத் திறந்து வைக்கப்பட்டது.  நெப்போலியனின் காலத்தில் மேலும் பல அரிய பொருட்கள் இங்கே சேர்க்கப்பட்டன.  ஆகையினால் அக்காலகட்டத்தில் இந்த அருங்காட்சியகம் நெப்போலியன் அருங்காட்சியகம் என்ற பெயருடனேயே விளங்கியது. நெப்போலியன் பிற நாடுகளிலிருந்து கொண்டு வந்த பொருட்களை இந்தக் கூடத்தில் வைத்து தனது நாட்டிற்குப் பெறுமை தேடிக்கொண்டார்.  மட்ரிட்டில் உள்ள அரச மாளிகையின் அருங்காட்சியகத்தில் ஒரு பகுதியில் வெள்ளிப் பாத்திரங்களின் தனிக்காட்சிப்பகுதி உள்ளது. அங்கு சென்று வந்த போது நான் வாசித்து அறிந்து கொண்ட ஒரு வாசகம் தான் இப்போது எனக்கு ஞாபகம் வருகின்றது. போர்காலத்தில் ஸ்பெயினில் நெப்போலியனும் அவன் படைகளும் ஸ்பெயின் அரச மாளிகையிலிருந்து பல வெள்ளிப் பொருட்களை சூரையாடிச் சென்றனராம். அந்த வெள்ளிப் பாத்திரங்களை உருக்கி போருக்குத் தேவையான பொருளாதாரத்தை பலப்படுத்தினராம். இப்படி போரினால் இழந்த பல அரும் பொருட்கள் பற்றிய கதைகள் அவ்வப்போது நாம் அறிவது தானே!



அருங்காட்சியகத்தின் உட்பகுதி வளாகம்  (2010)

பேரரசர்கள் 18ம் லூய்ஸ், 10ம் சார்ல்ஸ் காலத்திலும் தொடர்ந்து பல விலைமதிப்பற்ற பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் இணைந்தன.

 தற்போதைய நிலவரப்படி ஏறக்குறைய 35,000 காட்சிப் பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் நிறைந்திருக்கின்றன. இக்காட்சிப் பொருட்கள் பலதரப் பட்டவை. எகிப்திய நாகரிகத்தின் சான்றுகளின் காட்சிப் பொருட்களுக்காக ஒரு தனிப்பகுதி உள்ளது. கிரேக்க நாகரிகத்தின் காட்சிப் பொருட்களுக்காக  ஒரு தனிப்பகுதி; இஸ்லாமிய காட்சிப் பொருட்களுக்காக ஒரு தனிப் பகுதி; சிற்பங்களுக்காக ஒரு பகுதி; ஓவியங்களுக்காக ஒரு பகுதி இப்படி பலப் பல பகுதிகள். அனைத்து பகுதிகளுக்கும் நான் செல்லவில்லை. சென்று வந்த பகுதிகளில் என் மனதில் ஆழப்பதிந்த பகுதிகளில் உள்ள அருங்காட்சிப் பொருட்களைப் பற்றி சொல்லாமல் இருக்கமுடியாது. அத்தகவல்களில் சில பற்றிய பதிவாக அடுத்த பதிவு அமையும்.

முதலில்  நாம் அறை எண் 6க்குச் செல்வோமா? அங்கு தான்  டாவின்சியின் மோனா லிஸா இருக்கின்றாள்.

தொடரும்…!

Monday, November 25, 2013

15 - ப்ரான்ஸ் அருங்காட்சியகம்: ஓர் அறிமுகம்


முனைவர்.சுபாஷிணி 

மட்ரிட் நகரிலிருந்து புறப்பட்டு வெகு தூரமான ஒரு நாட்டிற்கு நாம் இப்போது செல்லப்போவதில்லை. ஸ்பெயினின் எல்லை நாடான ப்ரான்ஸுக்குத் தான் உங்களை அழைத்துச் செல்லப் போகின்றேன். :-)

ப்ரான்ஸில் இருக்கும் அருங்காட்சியகங்கள் அனைத்தையும் பார்ப்பதென்றால் அதற்கு நமக்கு ஒரு வருடம் கூட ஆகலாம். அவ்வளவு அருங்காட்சியகங்கள் நிறைந்த ஒரு நாடு ப்ரான்ஸ். ப்ரான்ஸின் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்திருக்கும் நகரங்களான ஆவியோன், லியோன், நீட்ஸா, தூலூஸ், காண்ட், க்ராஸ், தலநகரமான பாரிஸ் என இந்த நகரங்களெல்லாம் வரலாற்று பழமை வாய்ந்த  நகரங்கள். ஐரோப்பாவின் முழுமைக்கும் ப்ரெஞ்சு  தாக்கம் என்பது மிக விரிவானது. ஐரோப்பாவுடன் நின்று விடாமல் ஆப்பிரிக்க, அமெரிக்க கண்டம் வரை தனது ஆளுமையை விரிவாக்கியது ப்ரான்ஸ்.



ப்ரான்ஸ் என்றதுமே பலருக்கும் அறிமுகமாக மனதில் தோன்றுவது பாரிஸ் நகரம் தான். பாரிஸின் பெயரைக் கேட்டதுமே ப்ரமாண்ட கட்டிடங்களும், புதுமை உலகமும், கேளிக்கைகள் நிரம்பிய சொர்க்கபுரி என்பதுமாக நமது மனம் கற்பனையில் சிறகடிக்கும். இந்த தோற்றத்தின் இடையே பாரிஸின் உண்மையான வரலாற்று முகம் மறைந்தும் கூட போகலாம். ஆனால் ஒரு வகையில் பாரிஸை விட்டு தூரம் சென்று ப்ரான்ஸின் ஏனைய பகுதிகளுக்குச் சென்றோமேயானால் ப்ரான்ஸின் விரிவான அறிமுகத்தை நாம் நன்கு பெற முடியும். பாரிஸின் தற்போதைய சூழலில் அதன் பண்டைய வரலாற்று சிறப்புக்களையும் விட இன்றைய பொருளாதார சூழல், அதனால் மக்கள் நிறைந்து வழியும் இந்த நகரத்தின் சீர்குலையும் நிலை தான் பெரும்பாலும் கண்களுக்குத் தென்படுவதாக இருக்கின்றது. பாரிஸை பார்த்து விட்டு இது தான் ப்ரான்ஸ் என நம்பிக் கொண்டிருந்தோமேயானால் உண்மையான ப்ரான்ஸின் முழு வடிவத்தை நாம் அறிந்து கொள்ளவே முடியாது என்பதை ப்ரான்ஸின் ஏனைய இடங்களுக்குச் சென்று பார்த்து வரும் வாய்ப்பு அமைந்தமையினால் நான் நேரடியாக அதனை உணரும் வாய்ப்பு பெற்று அறிந்து கொண்டேன். இதனால் ஓரளவிற்கு ப்ரான்ஸ் அதன் பண்டைய சிறப்புக்களும், பொருளாதார வளமும், மக்களின் வாழ்வியலும் என்ற ரீதியில் எனக்கு ஓரளவு அறிமுகமாக அமைந்தது எனச் சொல்லலாம்.

ஐரோப்பாவிற்கு நான் வந்த ஆரம்ப காலகட்டத்தில், அதாவது 1999ம் ஆண்டு வாக்கில் ஜெர்மனியில் தமிழ் இலக்கிய சந்திப்புக்களின் போது எனக்கு அறிமுகமான, பாரிஸில் இருந்த சில நண்பர்களின் அறிமுகம் ஏற்பட்டது. அந்த வகையில் திரு.அரவிந்தன்,  மறைந்த திரு.புஷ்பராஜா, மறைந்த திரு.கலைச்செல்வன் ஆகியோரையும் ஏனைய சில நண்பர்களையும் சந்திக்க என் நான் சில முறை பாரிஸ் சென்று வந்துள்ளேன். இலக்கிய சந்திப்புக்களில் கலந்து கொள்ளவும் ஒரு முறை தமிழ் பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றவும் சென்று வந்திருக்கின்றேன். பாரிஸின் சரவணபவனில் இந்திய உணவை சுவைத்ததும் மறு நாள் வரை எனது குளிர் ஜாக்கெட் எல்லாம் இந்திய உணவின் வாசனை நிறைந்து இருந்ததும் கூட இன்னமும் மனதில் பசுமையாக இருக்கின்றது.


பாரிஸ் – லா செப்பல் வீதியில் (2010)

மற்றொரு முறை, 2002ம் ஆண்டு வாக்கில், எனது கார் விபத்துக்குள்ளாகிவிட ஜெர்மனியில் அதனை ஓப்பல் விற்பனையாளரிடம் கொடுத்து சரி செய்வதை விட பாரிஸில் பாதி குறைந்த விலையில் சீராக்கலாம் என நண்பர் புஷ்பராஜா சொல்ல 500கிமீ தூரம் பாரிஸுக்கு காரை ஓட்டிச் சென்று காரை சரி செய்து விட்டு தமிழ் நண்பர்களையும் சந்தித்து விட்டு வந்தேன். அப்படி செல்லும் போது அந்த நண்பர்களின் துணையுடன் எனக்கு பாரிஸ் கொஞ்சம் அறிமுகமானது. அப்போது பாரிஸில் தமிழர்கள் நிறைந்திருக்கும் வணிகப்பகுதியான லா செப்பல் பகுதியில் தமிழ்க்கடைகளையெல்லாம் பார்த்து வியந்து போயிருக்கின்றேன். தமிழ்க்கடைகளில் கிடைக்கும் கொத்து ரொட்டி, தோசை என சாப்பிட்டு மகிழ்ந்திருக்கின்றேன். அதன் பின்னர் பல முறை எனது தொழில் சார்ந்த பயணங்களாக பாரிஸுக்கும், க்ரனோபலுக்கும் செல்வது ஏற்பட்டது. அத்தகைய பயணங்களில் நான் பாரிஸில் சில அருங்காட்சியகங்களைக் காணும் வாய்ப்பு பெற்றேன்.



பாரிஸ் க்ரனோபல் என்ற இரண்டு நகரங்களைப் பார்த்த எனக்கு ப்ரான்ஸை ஓரளவு அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்பட,  2009ம் ஆண்டில் 18 நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு வாகனத்திலே பயணம் செய்தேன். இந்த பயணத்தின் போது ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட்டிலிருந்து புறப்பட்டு ஃப்ரைபுர்க் வந்து அங்கிருந்து பெசன்சோன் வந்து அங்கு இரண்டு நாட்கள் தங்கிச் சுற்றிப் பார்த்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டு லியோன் வந்து அங்கு சில நாட்கள் இருந்து பின்னர் மார்செல் வந்து அங்கே செய்ண்ட் ராஃபெல்லில் தங்கியிருந்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நைஸ் நகரம் வந்து  பின்னர் மோனாக்கோ சென்று பின்னர் மீண்டும் திரும்பி கான்ஸ் வந்து அங்கு சில நாட்கள் இருந்து பின்னர் ஆவியோனில் சில நாட்கள் என இருந்து திரும்பினேன். ஏறக்குறைய 2300கிமீ தூரம்  வாகனத்தை ஓட்டிக் கொண்டு இந்தப் பயணத்தை மேற்கொண்டேன். ப்ரான்ஸின் ஒரு சில நகரங்களை மட்டுமே இந்த பயணத்தின் போது பார்க்க முடிந்தது. ஒரு சில முக்கிய இடங்களுக்கு மட்டுமே சென்று அருங்காட்சியகங்கள் சென்று புதிய விஷயங்களை அறிந்து வர முடிந்தது.  மீண்டும் ஒரு முறை இதே போல ஆனால் இதுவரை செல்லாத ஏனைய நகரங்களையும் சென்று பார்த்து வர வேண்டும் என்ற என்ணமும் மனதில் ஓடிக் கொண்டுதானிருக்கின்றது. இந்த பயணத்தின் போது நான் அறிந்து கொண்ட புதிய விஷயங்கள் ஏராளம் ஏராளம். அவையெல்லாம் வாய்ப்பு கிட்டும் போது தகுந்த பதிவுகளின் வழி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற என்ணம் மனதில் இருக்கவே செய்கின்றது. ப்ரான்ஸின் ஒவ்வொரு நகரமும் தனிச்சிறப்புடனும் பிரமாண்டத்துடனும் தனித்துவத்துடன் விளங்குவது உண்மை.



ஸ்பெயினில் உள்ள அருங்காட்சியகங்களின் என்ணிக்கையை விட ப்ரான்ஸில் மிக அதிகம் என்று நிச்சயம் கூறுவேன். பாரிஸ் நகரில் மட்டுமே உள்ள அருங்காட்சியகங்களின் பட்டியல் ஒன்று இங்கே 150 அருங்காட்சியகங்கள் இருப்பதாக பட்டிபலிட்டிருக்கின்றது (http://en.wikipedia.org/wiki/List_of_museums_in_Paris ).  இவை ஒவ்வொன்றையும் சென்று காண என் வாழ்க்கை நிலை இடம் அளிக்காது என்றாலும் சில பாரிஸிலுள்ள குறிப்பிடத்தக்க அருங்காட்சியகங்கள் சிலவற்றிற்குச் சென்று வந்திருக்கின்றேன். அவற்றில் சிலவற்றை இத்தொடரில் அறிமுகப்படுத்துவதும் வாசகர்களாகிய உங்களுக்கு சுவாரஸியமாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் பாரிஸில் உள்ள ஒரு அருங்காட்சியகத்திற்கு அடுத்து உங்களை அழைத்துச் செல்லலாம் என நினைக்கின்றேன்.


எந்த அருங்காட்சியகம் செல்லப்போகின்றோம் என்பது அடுத்த வாரம் வரை சஸ்பென்ஸ் :-)​ - 

Monday, November 18, 2013

14. கடல்வழிப்பயண அருங்காட்சியகம் (2) , மட்ரிட், ஸ்பெயின்

முனைவர்.சுபாஷிணி 

மாப்பா முண்டியின் சிறப்புக்களை இத்தொடரின் சென்ற பதிவில் விளக்கினேன். இந்த அருங்காட்சியகத்தின் ஏனைய சிறப்புக்களையும் அறிவது அவசியம் என்பதால் உள்ளே சென்று ஏனைய காட்சிப் பொருட்களையும் காண்போமே.

அருங்காட்சியகத்தின் உள்ளே காட்சிப்பொருட்கள் 24 வெவ்வேறு அறைகளில், ஆண்டுகளின் அடிப்படையில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. 15ம் நூற்றாண்டு தொடக்கமாக இந்தக் காட்சிப்பொருட்களின் கண்காட்சி தொடங்குவதாக அமைந்திருக்கின்றது. முதல் அறையிலேயே அமெரிக்கா வந்த ஐரோப்பிய மாலுமிகள், உள்ளூரில் வாழும் குடிகளைப் பார்க்கும் வகையில் அமைந்த ஒரு காட்சியின் சித்திரம் உள்ளது. இது 18ம் நூற்றாண்டு சித்திரம். அக்காலகட்டத்தில் கடற்போரில் பயன்படுத்தப்பட்ட கருவிகளும், வாட்களும் இதே பகுதியில் உள்ளன. அதனை அடுத்து வருகின்ற அறைகளில் இதே போல ஸ்பெயின் அரசின் முயற்சியில் 15ம் நூற்றாண்டு தொடங்கி வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு இடங்களில் நிகழ்த்தப்பட்ட பற்பல போர்கள் பற்றிய விளக்கங்கள் போர்கருவிகள் ஆகியவற்றை காட்சிப்படுத்தும் தொகுப்புகள் இடம்பெறுகின்றன.



ஸ்பெயின் கடந்த 600 ஆண்டுகளில் தொடர்ந்து மேற்கொண்ட பல்வேறு கடற்போர்களில் தான் கைப்பற்றிய தீவுகள் பல. ஆப்பிரிக்காவிற்கு வடக்குப் பகுதியில் இருக்கும் கெனரி தீவுகளான லா பல்மா, க்ரான் கனாரியா, லான்ஸ்ரோட்டெ, லா கொமேரா, தெனெரிஃபா, மயோர்க்கா, மெனோர்க்கா, இபீஸா போன்றவற்றின் குறிப்புக்களை உள்ளடக்கிய தகவல்கள் தனித்தனியாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. போரை விவரிக்கும் ஓவியங்கள் ஒவ்வொரு பகுதியிலும் அப்போரின் தன்மையை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. போர் என்றாலே உயிர்பலி, கொடூரமான தாக்குதல் என்பது ஒரு புறமிருக்க வெற்றி பெற்ற படைகள் தங்கள் கொடிகளை உயர்த்திப் பிடித்துக் கொண்டு பெருமையுடன் நிற்பதும் படைத்தலைவர் தன் வீரம் பொருந்திய முகத்துடன் கம்பீரமாக காட்சியளிப்பதும் போன்ற காட்சிகள் இந்த சித்திரங்களில் இடம் பெற்றிருக்கின்றன. அதே வேளை கடல் பயணம் எளிதானதல்ல என்பதை விளக்கும் சித்திரங்களும், கடலில் கப்பல்கள் தத்தளிக்கும் காட்சிகளும் கூட சித்திரங்களாக வைக்கப்பட்டுள்ளன.


அருங்காட்சியகத்தின் ஒரு அறை (2013)

ஸ்பெயின் கைப்பற்றிய நாடுகளில் பிலிப்பைன்ஸும் அடங்கும். பெர்டினண்ட் மெக்கேலன் 1521ம் ஆண்டில் பிலிப்பைன்ஸின் Homonhon Islandக்குள் பிரவேசித்து அங்கு ஸ்பெயின் நாட்டின் கொடியை நட்டு வைத்து இப்பகுதி பிலிப்பன்ஸுக்குச் சொந்தமானது என முதன் முதலில் பிரகடனப்படுத்தினார். படிப்படியாக உள்ளூர் குழுக்களின் ஆதரவை பெற்று பின்னர் முழு பிலிப்பினோ தீவுகளையும் ஸ்பெயின் நாட்டின் ஆளுமைக்கு உட்பட்ட நாடாக மாற்றி வெற்றி கண்டார். போர் உருவாகி பின்னர் படிப்படியாக பல உயிர் சேதங்களைச் சந்தித்து பின்னர் முழு தீவுகளும் ஸ்பெயின் ஆளுமைக்கு உள்ளானது. 2 நூற்றாண்டுகளுக்கு மேல் ஸ்பெயினின் ஆதிக்கத்தில் இருந்து பின்னர் இங்கிலாந்து அரசின் காலணித்துவ ஆட்சிக்கு மாறியது பிலிப்பைன்ஸ். இந்த காலத்தில் பிலிப்பைன்ஸில் நிகழ்ந்த ஸ்பேனிஷ் தாக்கத்தை இன்றும் நாம் காண்கின்றோம். அப்போது பரவிய கத்தோலிக்க மதம் இன்றளவும் பிலிப்பன்ஸின் 90% மக்கள் கத்தோலிக்க மதத்தை தழுவியோராக இருப்பதற்குக் காரணமாக உள்ளது. பலருக்குப் பெயர்கள் ஸ்பேனிஷ் மொழியிலேயே அமைந்திருக்கின்றன. உதாரணமாக, மைக்கல், ஹூவான், கார்லோஸ், ஹேஸூஸ், ராஃபாஏல், ஹோஸே என்பவை மிகப் பரவலாகக் காணப்படும் ஆண்களின் பெயர்கள். இவை ஸ்பேனிஷ் மொழி பெயர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அருங்காட்சியகத்தின் மேலும் ஒரு மாபெரும் சிறப்பு என்னவென்றால் கடந்த 700 ஆண்டுகளில் கடலில் பயனித்த ஏறக்குறைய எல்லா ஸ்பேனிஷ் போர்த்துக்கீஸிய கப்பல்களின் மாடல்களும், ஐரோப்பாவின் வேறு சில நாடுகளுக்குச் சொந்தமான வரலாற்றில் இடம் பெறும் கப்பல்களின் மாடல்களும் இந்த அருங்காட்சியகத்தில் நிறைந்திருக்கின்றன. ஒரு கப்பல் உருவாக்கப்படுவதற்கு முன்னர் பொதுவாக மாடல் கப்பலை உருவாக்குவது வழக்கமாம். இங்கே குவித்து வைக்கப்பட்டிருக்கும் இந்த மாடல்களில் பெரும்பாலானவை அக்கப்பல்கள் உருவாக்கப்படுவதற்கு முன்னர் மாடலாக தயாரிக்கப்பட்டவை. ஏறக்குறை 700லிருந்து 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கப்பல்களின் மாடல்கள் இங்கு நிறைந்திருப்பது அதிசயத்தைத் தருவதாகத் தான் அமைகின்றது.


ஒரு கப்பலின் மாடல் (2013)

கப்பல்களின் மாடல்கள் மட்டுமன்று நீர்மூழ்கிக் கப்பல்களின் மாடல்களும் இங்கே நிறைந்திருக்கின்றன. உதாரணமாக ஸ்பேனிஷ் விஞ்ஞானி Isaac Peral உருவாக்கிய நீர்மூழ்கிக் கப்பலின் மாடல் இந்த அருங்காட்சியகத்தில் தான் வீற்றிருக்கின்றது. 1884ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மாடல் இது. இதுவே முதன் முதல் அதி நவீன கட்டமைப்புடன் உருவாக்கப்பட்ட ஒரு நீர்மூழ்கிக் கப்பல் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றே.


கடற்போர்களில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் (2013)

கடல் பயணங்க்ளின் போது பயன்படுத்தப்பட்ட போர் கருவிகள் அலமாரிகளில் ஆட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மிகப் பழமையான வேல் போன்ற கூர் ஆயுதங்கள் ஒரு பக்கம். துப்பாக்கி, கேனன், என நவீன போர்க்கருவிகள் ஒரு பக்கம் என போரில் பயன்படுத்தப்பட்ட பல நூறு ஆயுதங்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பிடித்துள்ளன. மிகச் சுவாரசியமாக 500 ஆண்டுகளின் இடைவெளியில் மாலுமிகள் உடுத்திய ஆடைகளும் சேகரிக்கப்பட்டு இங்கு காட்சிக்கான அலமாரிகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. இது மட்டுமன்றி தனியாக ஒரு அறை, கப்பலுக்குள் வாசிப்பு அறை எப்படி இருக்குமோ அதையே பிரதிபலிப்பதுபோல உருவாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள், சான்றிதழ்கள், கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு கருவிகள், ஆவணங்கள் என அருங்காட்சியகம் முழுதும் நூற்றுக்கணக்கான விலைமதிப்பு கூற முடியாத பல பொருட்களைத் தாங்கி இந்த அருங்காட்சியகம் இருக்கின்றது.


கடற்பயணத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு கருவிகள் (2013)

இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே நுழைந்த உடன் நமக்கு ஏற்படும் வியப்பு ஏனைய அடுத்தடுத்த அறைகளுக்குச் செல்லும் போதும் குறைவதில்லை. ஸ்பெயின் வருபவர்கள், அதிலும் குறிப்பாக மட்ரிட் நகருக்கு வருபவர்கள் கட்டாயம் வந்து பார்த்துச் செல்ல வேண்டிய முக்கிய அருங்காட்சியகம் இது என்பதில் சந்தேகமில்லை.

கடல்வழிப் பயணங்கள் பற்றி இந்த அருங்காட்சியகத்தில் பார்த்தோம். அடுத்த பதிவில் வேறொரு நாட்டில் மேலும் ஒரு அருங்காட்சியகம் செல்வோமா?

தொடரும்…!​

Tuesday, November 12, 2013

13. கடல்வழிப்பயண அருங்காட்சியகம், மட்ரிட், ஸ்பெயின்


முனைவர்.சுபாஷிணி 

கடல்பயணங்களின் வரலாற்றினை அறிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வாழ்கின்ற நாடுகளில் எங்கேனும் அமைந்திருக்கக்கூடிய கடல்பயணத்திற்கென்றே பிரத்தியேகமாக உருவக்கப்பட்டுள்ள அருங்காட்சியகங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். விக்கி பக்கத்தின் இப்பகுதி http://en.wikipedia.org/wiki/Maritime_museum உலகின் அனைத்து கண்டங்களிலும் உள்ள பிரசித்தி பெற்ற கடல்வழிப்பயண, கப்பல் கட்டுமானம் தொடர்பான அருங்காட்சியகங்களின் பட்டியலை வழங்குகின்றது. இப்பக்கத்தின் பட்டியலில் இருப்பதை விடவும் மேலும் பல அருங்காட்சியகங்கள் நிச்சயம் இருக்கக்கூடும்.

எனது அனுபவத்தில் என் வெவ்வேறு பயணங்களின் போது இத்தகைய வகையிலான ஒரு சில அருங்காட்சியகங்களுக்குச் சென்று வந்திருக்கின்றேன். பொதுவாக கடல்வழிப்பயணம், கப்பல்கள், அதன் தொழிற்நுட்பம், கடல் பயணங்களை விவரிக்கும் ஆவணங்கள், சித்திரங்கள், கருவிகள்  என்பனவற்றின் தொகுப்பாக இத்தகைய அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டிருக்கும். நீர்மூழ்கிக் கப்பலை விளக்கும் ஒரு அருங்காட்சியகத்தை நெதர்லாந்தில் பார்த்த ஞாபகமும் ஒரு அரச கடற்படை கப்பலின் அருங்காட்சியகத்தை மலேசியாவின் பங்கோர் தீவில் பார்த்த ஞாபகமும் இப்போது மனதில் நிழலாடுகின்றன.  இந்த என் அனுபவங்களை விரிவாக்கும் தன்மையுடன் அமைந்தது ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் அமைந்திருக்கும் கடல்வழிப்பயண அருங்காட்சியகம் (Naval Museum)


அருங்காட்சியகத்தின் நுழைவாயில் (ஏப்ரல் 2013)

உலகின் மிக முக்கியமான கடல்வழிப்பயணங்களுக்கான அருங்கட்சியகங்களில் இடம்பிடிக்கும் ஒன்றாக இது திகழ்கின்றது. இந்த அருங்காட்சியகத்தில் சேகரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சேகரங்கள் ஐபீரிய தீபகற்பத்தின் (ஸ்பெயின்) கடல் பயணங்கள், கடற்படையினர் பயன்படுத்திய கருவிகள், ஆகியவற்றை விளக்குவதாக அமைவதோடு உலக வரலாற்றில் ஸ்பெயின் நாட்டினரின் கடல்பயணங்களை விளக்கும் ஆவணங்களின்  தொகுப்பாகவும் விளங்குகின்றது என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது.

இந்த அருங்காட்சியகம் மட்ரிட் நகரின் ஏனைய சிறப்பு வாய்ந்த அருங்காட்சியகங்களான, ப்ராடோ, ரைனெ சோஃபியா அருங்காட்சிகங்களின் அருகிலேயே அமைந்திருக்கின்றன. 1792ம் ஆண்டு முதன் முதல் இந்த அருங்காட்சியகம் மட்ரிட் நகரில் ஆரம்பிக்கப்பட்டாலும், 1843ம் ஆண்டில் தான் மட்ரிட் நகரில் இது ஒரு முழுமையான அருங்காட்சியகமாக உருபெற்றது. அதன் பின்னர் இந்த அருங்காட்சியகம் தற்போது அமைந்திருக்கும் இடத்திற்கு 1932ம் ஆண்டில் மாற்றம் செய்யப்பட்டது.  1977ம் ஆண்டு தொடக்கம் இந்த அருங்காட்சியகம் ஸ்பெயின் Ministry of Defense  கட்டிடத்தின் ஒரு பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.


போரில் பயன்படுத்தப்பட்ட ஒரு கருவி, அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது (ஏப்ரல் 2013)


இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே செல்லும் முன் காவல் அதிகாரிகளின் சோதனைகளை முடித்துக் கொண்டு தான் செல்ல வேண்டும். நான் இங்கு சென்றிருந்த சமயத்தில் இப்படி ஒரு அதிகாரி என் பைகளை சோதிக்க நான் அவரிடம் நான் ஒரு சாதாரண சுற்றுப்பயணி மட்டுமே. ஒரு தீவிரவாதியல்ல என்று கூற அவரும் உடன் இருந்தவர்களும் சிரித்து விட்டனர். இத்தகைய சோதனைக்குப் பிறகு படிகளில் ஏறி முதல் மாடிக்குச் செல்லவேண்டும். இங்குதான் நுழைவாயில் பகுதி உள்ளது. இங்குள்ள அலுவலகப் பகுதியில் கட்டணம் செலுத்தி டிக்கட்டை பெற்றுக் கொண்டு அருங்காட்சியகத்தின் உள்ளே நுழையலாம்.

இந்த அருங்காட்சியகத்தின் மிகச் சிறப்பு வாய்ந்ததொரு சேகரிப்பாகக் கருதப்படுவது Mappa Mundi எனப்படும் ஒரு வரைபடம்.  1500 ஆண்டு வரையப்பட்டதாகக் கருதப்படும் இதனை வரைந்தவர் ஹுவான் டி லா கோஸா (Juan de la Cosa). இந்த வரைப்படம் கொலம்பஸ் அமெரிக்காவிற்கு மேற்கொண்ட பயணத்தை   படிப்படியாக விளக்குவதாக அமைக்கப்பட்டுள்ளது. இதுவே அமெரிக்காவின் முதல் வரைபடம் என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.


1500 வரையப்பட்ட மேப்பா முண்டி (அசல்) - அருங்காட்சியகத்தின் உள்ளே (ஏப்ரல் 2013)

1450லிருந்து  1460க்குள் பிறந்தவராக இருக்கலாம் எனக் கருதப்படும் ஹுவான் ஒரு வரைபட நிபுண்ர். இவர் அமெரிக்காவிற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடற்பயணங்கள் சிலவற்றை மேற்கொண்டிருக்கின்றார். அதில் கொலம்பஸ்ஸுடன் மூன்று முறை அமெரிக்க பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அத்தகைய பயணங்களின் போது இவரது பணி அமெரிக்க வரைபடத்தை முழுமையாக உருவாக்குவது என்பதாகவே அமைந்தது. பின்னர் கொமாண்டராக பதவி உயர்வு பெற்று அப்படி ஒருமுறை கப்பலில் அமெரிக்காவில் புதிய குடியேற்றத்திற்காக ஸ்பேனிஷ் மக்களை ஏற்றிக் கொண்டு சென்றிருந்தர்.  அப்பணியில் இருக்கும் வேளையில் அமெரிக்க இந்தியர்களால் தாக்கப்பட்டு அமெரிக்காவிலேயே இறந்தார்.


மேப்பா முண்டியின் ரெப்ளிக்கா - வாசல் பகுதி சுவற்றில் இருப்பது.  (ஏப்ரல் 2013)

இவர் தயாரித்த அமெரிக்க வரைபடமான மாப்பா முண்டி ஒரு ஜெர்மானிய அறிஞரான அலெக்ஸாண்டர் ஹும்போல்ட் அவர்களுக்கு தற்செயலாக ஒரு பெர்ஷிய கடையில் 1832ம் ஆண்டு காணக் கிடைத்தது. இதனை Baron Walckenaer  வைத்திருந்தார். அது சமயம் அவர் தொகுத்துக் கொண்டிருந்த அட்லஸ் தொகுப்பில் இது இடம்பெறுவது அவசியம் எனக் கருதி இதனையும் இணைத்துக் கொண்டார் திரு.ஹும்போல்ட்.  முழு உருவாக்கம் பெற்ற Atlas Géographique et Physique இந்த மாப்பா முண்டியையும் இணைத்துக் கொண்டு வெளிவந்தது. இது உலகின் ஆய்வாளர்கள் மத்தியில் திடீர் கவன ஈர்ப்பை பெற்றது.  Baron Walckenaer  இறந்த சமயத்தில் ஸ்பெயின் அரசியார் இந்த வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த வரைபடத்தை வால்க்கனீயர் குடும்பத்தினரிடமிருந்து விலை கொடுத்து வாங்கினார். அது தொடக்கம் இந்த வரைபடம் அருங்காட்சியகத்தின் சேகரத்தில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. தனி மனித சொத்தாக இருப்பதை விட இப்படி அருங்காட்சியகத்தில் இடம்பெறும் போது இங்கு வருகை தருவோர் அனைவரும் இந்த வரைபடத்தைக் காணும் வாய்ப்பு அமைகின்றது.


சற்றே பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட மேலும் ஒரு வரைபடம் - கடல் வழி பயணங்களைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

அமெரிக்காவின் முதல் வரைபடம்.. கி.பி.1500 ஆண்டு ஆவணம்.. இது மட்டும் இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பன்று. ஏனைய காட்சிப்பொருட்களையும் காணச் செல்வோமா?

Monday, October 28, 2013

12. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் அருவூலம் – ஸ்பெயின்


முனைவர்.சுபாஷிணி 

ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றை கவனிக்கும் போது ஒவ்வொரு நாடும் அதன் இப்போதைய நாட்டு எல்லையை அடைய குறிப்பிடத்தக்க போர்களை சந்தித்து வெற்றிகளையும் தோல்விகளையும் மாறி மாறி அனுபவித்து அவை கடந்து வந்திருக்கும் பாதையை ஒதுக்கி வைத்துப் பார்த்து விட முடியாது. சரித்திரத்தில் மிகப் பல மாற்றங்களைத் தொடர்ச்சியாக சந்தித்த ஐரோப்பிய நாடுகளில் ஸ்பெயியினும் அடங்குகின்றது.

ஸ்பெயினின் எல்லை நாடுகளாக இன்று இருப்பவை போர்த்துக்கலும் ப்ரான்ஸும். ஏறக்குறைய 35,000 ஆண்டுகளாக மனித வாழ்க்கை இங்கு இருந்திருப்பதற்கான தடயங்கள்  இங்கு நன்கு தென்படுகின்றன. ரோமானிய பேரரசு தனது ஆளுமையை விரிவாக்கிய போது இன்றைய ஸ்பெயினின் எல்லைக்குள்ளும் வந்தது இந்தப் பேரரசு. சில நூறு ஆண்டுகள் ரோமானிய ஆட்சி, பின்னர் 8ம் நூற்றாண்டு தொடக்கம் மூரிய இஸ்லாமியர்களின் கைக்குள் ஸ்பெயின் வந்துவிட இஸ்லாமிய கலைகள் பெருகி வளர்ந்த ஒரு மேற்கு ஐரோப்பிய நாடாக அக்கால கட்டத்தில் ஸ்பெயின் விளங்கியது. அக்காலகட்டத்தில் நாடெங்கிலும் பதிந்து போன இஸ்லாமியக் கலைகளும் கலாச்சாரமும் கட்டிடக் கலையும் இன்றும் மறையாமல் ஸ்பெயினி சில நகரங்களில் இருக்கின்றன.

12ம் நூற்றாண்டு தொடங்கி, 13, 14ம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற பல போர்களில் ஆயிரக்கணக்கான போர் வீரர்களின் மரணத்தைத் தாண்டி இஸ்லாமிய ஆட்சி முற்றிலுமாக ஸ்பெயினிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டது. மீண்டும் கத்தோலிக்க கிறிஸ்துவ ஆட்சி ஸ்பெயினைக் கைப்பற்றி மிகுந்த ஆளுமையுடனும் தீவிரத்துடனும் நாடு முழுமைக்கும் கத்தோலிக்க மதம் சார்ந்த அரசாக உருவாகியது. மூரிய இஸ்லாமியர்களால் அழிக்கப்பட்ட மறைக்கப்பட்ட தனது முந்தைய பாரம்பரியத்தை மீட்டுடெடுத்தது இந்தப் புதிய அரசு. இந்த முயற்சிகளோடு இப்புதிய அரசின் செயல்பாடுகள் நின்று விடவில்லை.


கடல் போரினை விளக்கும் ஒரு 17ம் நூற்றாண்டு ஓவியம் (2013) 

ஸ்பெயின் இப்போதைய போர்த்துக்கலையும் தனது ஆளுமைக்குள் கொண்டு வந்ததோடு உலகம் முழுதும் தனது பராக்கிரமத்தை நிலை நாட்ட கடல் வழி பயணத்தில் கவனம் செலுத்தி மிகத்தீவிரமாக பல மாலுமிகளையும் ஆய்வாளர்களையும் இப்பணியில் அமர்த்தியது.   வணிகம், புதிய நிலப்பரப்பை கண்டு பிடித்தல் அங்கு தனது ஆளுமை விரிவாக்கம் செய்தல் என்பவை இதன் முக்கிய நோக்கமாக இருந்த போதிலும் கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதையும் அதன் தலையாய நோக்கமாகக் கொண்டு இயங்கியது இந்தப் புதிய அரசு. ஸ்பெயின் அரச பரம்பரையினர் போர்த்துக்கல் மாலுமிகளுக்கு மிகுந்த பொருளுதவியும் தேவையான அனைத்து ஏற்பாட்டு வசதிகளையும் செய்து கடல் வழி பயணத்தை ஊக்குவித்தது. அந்த முயற்சிகளின் பின்னனியில் அமைந்த பயணத்தின் காரணத்தினால் தான் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்த வரலாற்று முக்கியத்துவம் பொருந்திய நிகழ்வு நடபெற்றது; வாஸ்கோ ட காமா இந்தியா வந்ததும் நிகழ்ந்தது. கடல் வழி பயணத்தில் ஏனைய ஐரோப்பிய முயற்சிகள் மீண்டும் ஆப்பிரிக்காவைச் சுற்றி இந்தியா வந்து பின்னர் மலாயா தீபகற்ப இந்தோனீசிய தீவுகளை அடைந்ததும் பின்னர் மேலும் பயணத்தை விரிவாக்கி கொரியா, சீன வழிப் பயணங்களை மேற்கொண்டதும் என புதிய பாதைக்கு ஆதாரமாக அமைந்தது இந்த முயற்சிகளின் தொடர்ச்சிகள். இந்த மாலுமிகள் ஈடுபட்ட கடல் வழி பயண ஆய்வுகளின் வழியாக ஆய்வு உலகில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்தன. மிக முக்கியமாக இன்றைய உலகின் பல நாடுகளின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு தாக்கமும் அடிப்படையும் கொடுத்த பெருமை இந்த வகை முயற்சிகளையே சாரும்.

கடல் வழி பயணம் மேற்கொண்டு இந்த மாலுமிகளும் ஆய்வாளர்களும் மேற்கொண்ட பயணங்களினால் ஸ்பானிஷ் மொழி உலகின் சில குறிப்பிடத்தக்க நாடுகளில் அதிகாரப்பூர்வ மொழியாக ஆகியிருக்கின்றது. உருளைக்கிழங்கு, மிளகாய்,  முந்திரி, தக்காளி போன்ற தாவர உணவுகள் ஐரோப்பா, ஆசியா ஆகிய நாடுகளுக்கு அறிமுகமாகின. கத்தோலிக்க கிறிஸ்துவ மதம் அமெரிக்கா முழுமைக்கும்,  ஆசிய நாடுகளில் அதிலும் குறிப்பாக இந்தியாவிலும் காலூன்றியது.

ஸ்பேனிஷ் மாலுமிகள் இவ்வகைப் பயணங்களில் செல்லும் போது தமது கப்பலில் கத்தோலிக்க மத குருமார்களையும், போர் வீரர்களையும், அரச பிரதி நிதிகளையும், வணிகர்களையும் சேர்த்தே அழைத்துச் செல்வார்களாம். ஓரிடத்திற்கு வணிக நோக்கமாகச் சென்று, உள்ளூர் அரசியல் பிரமுகர்களிடம் ஸ்பேனிஷ், போர்த்துக்கீஸிய அரச தூதுவர் வழியாக நட்புறவை உருவாக்கிக் கொண்டு பின்னர் அங்கே உள்ளூர் மக்களை ஏதாவது ஒரு காரணத்தினால் கத்தோலிக்க மதத்திற்கு மதம் மாற்றுவதும் பின்னர் தக்க வாய்ப்பு அமைந்தால் அரசியல் ரீதியாக தமது முயற்சிகளைத் துவக்கி நாட்டை கைப்பற்றுவதும் என்பது குறிப்பிடத்தக்க வகையில் நிகழ்ந்துள்ளன. இவர்களின் இந்த திட்டமிட்ட பயணத்தினால் வெற்றி மேல் வெற்றியாகக் குவித்தது ஸ்பேனிஷ் அரசு. தாம் போரிட்டு வென்றோ அல்லது தந்திரமாகவோ  கைப்பற்றும் நாடுகளிலும் நகரங்களிலிருந்தும் கொண்டு வரப்பட்ட பொன்னும் மணியும் வைரங்களும் வைடூரியங்களும் ஸ்பேனிஷ் அரச மாளிகையில் அலங்கரித்துக் கொண்டிருந்தன.  ஸ்பெயின் நாட்டின் வளத்தை இவை பெருக்கிக் கொண்டிருந்தன.

15ம் நூற்றாண்டு தொடங்கி ஸ்பேனிஷ்  அரசின் பொருளாதார உதவியுடன் போர்த்துக்கீஸிய மாலுமிகள் மேற்கொண்ட கடல் பயணங்களின் போது உலகின்  வெவ்வேறு  பூகோளப்பகுதிகளிலிருந்து தேடிக் கொண்டு வந்து சேர்த்த விலை மதிக்க முடியாத  பொருட்கள் அனைத்தும் இப்போது ஸ்பெயினின் பல நகரங்களில் உள்ள அருங்காட்சியகங்களை நிரப்பியிருக்கின்றன.  இந்த வரலாற்று  தொன்மை மிக்க பொருட்களையெல்லாம் அதன் அருமை பெருமை உணர்ந்து உலகத்தரம் நிறைந்த ஆய்வுத்தரம் பொருந்திய பிரமாண்டமான அருங்காட்சியகங்களை ஸ்பெயின் நிருவியுள்ளது.  தனது ஆளுமை எந்தெந்த நாடுகளிலெல்லாம் நிருவப்பட்டதோ அங்கிருந்தெல்லாம் கொண்டு வரப்பட்டு தனியார் சேகரிப்பாகவும் அரச சேகரிப்பாகவும் அமைந்த அனைத்து பொருட்களும் அதனதன் நோக்கத்திற்கேற்ற வகையில் இனம் பிரிக்கப்பட்டு வெவ்வேறு பிரத்தியேக அருங்காட்சியகங்கள் நிருவப்பட்டு இப்பொருட்கள் எல்லாம் இப்பிரமாண்டமான எழில் நிறைந்த கட்டிடங்களில் காட்சிக்கு வைக்கப்ப்பட்டுள்ளன.

ஸ்பெயினில் இதுவரை நான் ரோண்டா, மலாகா, கோர்டோபா, டொலேடோ, ஸ்பெயினின் தலைநகர்  மட்ரிட் ஆகிய பெரும் நகரங்களுக்குச் சென்று வந்திருக்கின்றேன். ஸ்பெயினுக்குச் சொந்தமான கனேரித் தீவுகளை இங்கு தற்சமயம் குறிப்பிட அவசியவில்லை என்பதாலும் அதன் சிறப்புக்கள் ஸ்பெயின் தீபகற்பத்திலிருந்து வேறுபடுவதாலும் கனேரித் தீவுகளில் உள்ள அருங்காட்சியகங்கள் பற்றி வேறொரு முறை குறிப்பிட நினைத்திருப்பதாலும் இத்தீவுகளின் அருங்காட்சியகங்களை இப்பதிவில் ஒதுக்கிவிடுவது சிறப்பு என்றே கருதுகின்றேன். அந்த வகையில் இந்த நான்கு மிகப் பெரிய நகரங்களிலும் நான் சென்று பார்த்து தகவல் பதிந்து கொண்டு வந்த அருங்காட்சியகங்கள் 30க்கும் மேற்பட்டவை.

இந்த 30க்கும் மேற்பட்ட அருங்காட்சிகங்களில் எதிலிருந்து தொடங்குவது எதில் முடிப்பது என்பது எனக்கு ஒரு சோதனைதான். ஆனாலும் ஸ்பெயின் நாட்டினை என் மனதில் நினைத்தால் கடல் பயணமும் அதன் தொடர்பான நிகழ்வுகளும் தான் மனதில் வந்து அலை மோதுகின்றன. ஆக மட்ரிட்டில் அமைந்திருக்கும் Museo Naval  அதாவது (Naval Museum)  கடல்வழிப்பயண அருங்காட்சியகம் முதலாகத் தொடங்கி இந்த நாட்டின் அருங்காட்சியகங்களை அறிமுகப்படுத்துவதே தகும் என்று கருதுகின்றேன்.


அருங்காட்சியகத்தின் வாசல் பகுதி (2013)


பயணம் செல்ல ஆயத்தமாகி விட்டீர்களா..? நம் பயணத்திற்கான கப்பலும் அதன் மாலுமியும் காத்திருக்கின்றார்கள். வாருங்கள் செல்வோம்..!

Monday, October 21, 2013

11. ஊட்ஸி அருங்காட்சியகம், போல்ஸானோ - 3, இத்தாலி.

முனைவர்.சுபாஷிணி 

அண்மையில் வெளிவந்த பி.பி.சி செய்தி ஒன்று குறைந்தது 19 பேர் ஊட்ஸியின் பரம்பரையில் வந்தவர்கள் என்று இத்தாலியின் திரோல் பகுதியில் உள்ளவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. http://www.bbc.co.uk/news/world-europe-24477038 தற்கால DNA சோதனைகளின் ஏற்பட்டுள்ள வளர்ச்சியில் இவ்வகையில் ஆய்வு செய்து ஒரு நபரின் பரம்பரையை இனங்காணும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது. இந்த ஆய்வுகளினால் 5300 ஆண்டு பழமையான ஊட்ஸிக்கும் தற்சமயம் உறவினர்கள் இருப்பது நமக்குத் தெரிய வருவதும் ஒரு சுவாரசியமான விஷயம் தானே. இண்டஹ் ஆய்வுகள் மேலும் தொடர்வதால் இன்னும் பலர் கூட அடையாளம் காணப்படலாம்.


ஊட்ஸியை ஆராயும் ஒரு ஆய்வாளர்.
நன்றி:http://www.voanews.com



ஊட்ஸி எப்படி இறந்திருப்பார்?

ஆய்வாளர்களின் கணக்குப்படி இவர் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த சமயத்தில் இவரை யாரோ தாக்கியிருக்கின்றனர். தாக்குதலால் உண்டான காயம் உடலில் தோல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் எய்திய அம்பினால் தான் இவர் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது. அந்த அம்பு முதுகுப் பகுதியின் வழியாகச் சென்று இருதயத்தைத் தாக்கி அம்பில் இருந்த விஷமும் உடலின் ரத்தத்தில் கலந்து இந்த இறப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதே மருத்துவக் கண்டுபிடிப்பு.

ஊட்ஸியின் உடலில் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகள் அவர் உடலுடன் கண்டெடுக்கப்பட்ட சாதனங்கள், எச்சங்கள் அனைத்தும் அவரது வாழ்க்கை நிலையை விளக்குவதற்கு ஆய்வாளர்களுக்கு பெரிதும் உதவுவனவாக அமைந்திருக்கின்றன. ஊட்ஸி தனது கையில் வைத்திருந்த கோடாறியும் அம்புகளும் ஏனைய சாதனங்களும் அவர் ஒரு வீரராக இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு இட்டுச் செல்கின்றன. அவர் கொண்டிருந்த ஆடை அமைப்பு, ஆயுதங்கள், உடலில் இருந்த தானிய வகைகள் இவையனைத்தும் இவர் ஒரு ஷமான் – shaman (குறி சொல்பவர் ) ஆக இருந்திருக்கவும் வாய்ப்புள்ளதாகக் காட்டுகின்றன. இக்கருத்துக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைவது இவர் உடலில் இருக்கும் சில குறிகள்.

ஊட்ஸியின் உடலில் பச்சை குத்தப்பட்டதற்கான அறிகுறிகளை இவரது உடலை ஆராய்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். கால் பகுதியில் புள்ளிகள் பல குத்தப்பட்டிருப்பதையும் இவை ஏதும் நோயினால் ஏற்பட்டதல்ல என்பது பச்சைக் குத்தப்பட்ட குறிகள் என்றும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. இத்தாலியின் இப்பகுதியில் வாழ்ந்த பண்டைய மக்களின் நாகரிகத்தில் பச்சைக் குத்திக் கொள்ளுதல் என்பது குறி சொல்பவர்கள் பழக்கத்தில் இருந்து வரும் ஒரு ஐதீகமாக கருதப்படுகிறது. பச்சை குத்துதல் என்பது இந்த ஐரோப்பிய மனிதர் சார்ந்திருந்த சமூகத்திலும் இன்றைக்கு 5300 ஆண்டுகளுக்கு முற்பட்டே இருந்து வந்தது என்பதை அறியும் போது இதே போன்ற பச்சைக் குத்திக் கொள்ளுதல் நம் இந்திய பண்பாட்டிலும் வழக்கில் இருந்து வருவதும் இவ்விதமான பண்பாட்டு ஒற்றுமைகளும் ஆச்சரியம் கொடுக்கின்றன.

ஊட்ஸியின் உடல் மிகப் பாதுகாப்பாக இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஊட்ஸி மம்மி இருக்கும் பகுதிக்கு பின் பகுதியில் பனிப்பகுதி போல அதிகமான குளிர் தரும் வகையில் குளிர்சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. ஊட்ஸி ஒரு கண்ணாடி அறைக்குள் வைக்கப்பட்டிருக்கிறார். ஆகவே நேராகப் பார்க்க முடியாது. ஒரு கண்ணாடி வழியாகத்தான் காண முடியும். மம்மியின் உடல் எந்த வகையான பாக்டீரியாவினாலும் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் இந்த பாதுகாப்பு அமைந்துள்ளது.


ஊட்ஸி வைக்கப்பட்டிருக்கும் இக்கட்டிடத்தின் முதல் மாடிப்பகுதியின் மாடல் இது. (மே 2013)


ஊட்ஸியின் உடலை புதைப்பதா எரிப்பதா அல்லது இப்படி காட்சிக்கு வைப்பதா என்ற கேள்விகளும் ஆரம்ப நிலையில் எழாமல் இல்லை. ஆனால் இவர் உடல் ஆய்வுலகத்திற்கு அளித்த பல்வேறு தகவல்கள் இவர் உடலின் அமைப்பு, பனியிலே உறைந்து மட்டுமே மம்மியாக்கப்பட்ட ஒரு உடல் என்ற வகையில் மிகத்தனித்துவம் வாய்ந்த மம்மியாக ஊட்ஸி ஆய்வுலகத்தின் கண்களுக்குத் தென்படுவதால் பொதுமக்களும் ஊட்ஸியை காண வேண்டும்; அதற்கு ஒரு அருங்காட்சியகம் வேண்டும் என்று முடிவாகி இப்போது நிரந்தரமாக இங்கே ஊட்ஸி காட்சிக்கு இருக்கின்றார்.


இப்போது இப்படி இருக்கும் ஊட்ஸி..


இப்படித்தான் இருந்திருப்பார் என அண்மைய கண்டுபிடிப்புக்களை வைத்து மாடல் செய்திருக்கின்றனர்.


ஊட்ஸி அருங்காட்சியகத்திற்கு நானும் என் கணவரும் சென்ற போது வசந்த கால தொடக்கம். ஆனால் குளிர் 15 டிகிரி, மழைத்தூரலும் வேறு சேர்ந்து கொண்டது. அருங்காட்சியகத்தினுள்ளே குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிப்பதால் நாங்கள் ஏறக்குறைய 1 மணி நேரம் வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெற்றுக் கொண்டு உள்ளே சென்று பார்த்தோம். அந்தக் குளிரில் குடை பிடித்துக் கொண்டு மழையில் நின்று கொண்டிருந்த அசௌகரியங்களெல்லாம் ஊட்ஸியை நேரில் பார்த்து அவர் பற்றிய ஆய்வு விஷயங்களை அறிந்து கொண்ட போது மறைந்து விட்டன.

ஊட்ஸியைப் பற்றி விரிவான விவரங்கள் தரும் நூல் Otzi: The Iceman. இந்த நூல் அருங்காட்சியகத்திலேயே விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த நூலை இத்தாலி, டோய்ச், ஆங்கிலம் ப்ரென்ச் ஆகிய மொழிகளில் மொழி பெயர்த்து அருங்காட்சியகத்தின் மேல் மாடியில் ஒரு வாசிக்கும் பகுதி அமைத்து அங்கு வைத்திருக்கின்றனர். படங்களுடன் கூடிய அனைத்து வயதினரும் வாசித்து மகிழக் கூடிய நூல் இது. ஊட்ஸியைப் பற்றி மேலும் அதிக விவரங்கள் அறிந்து கொள்ள விரும்புவோர் அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ பக்கமான http://www.iceman.it/ சென்று மேலும் பல படங்களும் விவரங்களும் வாசித்துப் பயனடையலாம்.

இத்தாலியின் திரோல் மாகாணத்திற்குப் பயணம் செல்பவர்கள் மறக்காமல் சென்று பார்த்து வர வேண்டிய ஒரு அருங்காட்சியகம் இது என்பதில் சந்தேகமில்லை!


Monday, October 14, 2013

10. ஊட்ஸி அருங்காட்சியகம், போல்ஸானோ - 2, இத்தாலி.

முனைவர்.சுபாஷிணி 

ஊட்ஸி அருங்காட்சியகக் கட்டிடம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டிடம். முதலாம் உலகப்போர் வரை இத்தாலியின் போல்ஸானோ நகர் ஆஸ்திரியாவிற்குச் சொந்தமாகத்தான் இருந்தது. போரில் ஆஸ்திரியா தோற்றபோது ஏற்பட்ட எல்லை மாற்றங்களில் இப்பகுதி இத்தாலிக்குச் சொந்தமாகியது. பின்னர் 1980ல் இப்போது அருங்காட்சியகம் இருக்கும் கட்டிடம்  போல்ஸானோ மாநகராட்சியினால் வாங்கப்பட்டது. இச்சாலையில் இருக்கும் பல கட்டிடங்கள் அது சமயம் தனியார் வசமாகவும்வங்கிகளாகவும் செயல்பட்டு வந்தன. 1996ல் ஊட்ஸிக்கு அருங்காட்சியகம் தேவை என முடிவாக இந்தக் கட்டிடத்தை ஒரு அருங்காட்சியகமாக உருவாக்கும் கட்டிடப் பணிகள் தொடங்கின. இக்கட்டிடம் புதுப் பொலிவுடன் அருங்காட்சியகமாக 28.3.1998ம் நாள் திறந்து வைக்கப்பட்டது.


ஊட்ஸி அருங்காட்சியகத்தின் உள்ளே (2013)


ஊட்ஸியின் உடல் அளவு, அவரது உடலில் அணிந்திருந்த ஆடைகள் கருவிகள், அவர் இறப்பதற்கு முன்னர் என்ன சாப்பிட்டிருப்பார், எதனால் அவர் இறந்திருக்கக் கூடும் என எல்லா வகை ஆய்வுகளையும் ஆய்வுக் குழு முடித்து இந்த 3 மாடிக் கட்டிடத்தில் பல சிறு பகுதிகளாகப் பிரித்து காட்சிக்கு விளக்கங்களுடன் வைத்திருக்கின்றனர். அக்குறிப்புக்களில் உள்ள தகவல்கள் ஒவ்வொன்றும் ஊட்ஸியை அவர் வாழ்ந்த காலத்தில் இப்பகுதியின் நிலை, மக்கள் நிலை ஆகியவற்றை ஊகித்தறிய உதவுகின்றன என்று நிச்சயம் சொல்லலாம்.

மம்மியாக கண்டெடுக்கப்பட்ட ஊட்ஸியின் உடல் அளவைப் பற்றி முதலில் பார்ப்போம். இவர் ஹோமோ செப்பியன் வகை இனத்து நாகரிக மனிதன். இறக்கும் நாளிலும் நாகரிக உலக மனிதன் போல உடையணிந்தே காட்சியளித்திருக்கின்றார்; இலை தளைகளையும் மரப்பட்டைகளையும் ஆடைகளாகக் கட்டிக் கொண்டல்ல. அவரது உயரம் 1.60மீ, எடை 50கிலோ. இன்றோ ஊட்ஸி 1.54மீ குறைந்து எடை அளவில் 13கிலோ மட்டுமே இருக்கின்றார். உடலின் ரத்தம் சதை நீர் என பிரிந்த பின்னர் எடையிலும் உயரத்திலும் இந்த மாற்றம் நிகழ்வது சகஜம்தான். ஊட்ஸியின் கண்னின் மணிகள் ஐரோப்பிய இனத்தின் பொதுவான வர்ணமாகிய நீல நிறத்தவை.

இறப்பதற்கு முன்னர் இவர் என்ன வகை உணவை சாப்பிட்டிருப்பார் என்ற வகையிலான ஆய்வுகளும் இந்த ஆய்வுகள் வழங்கியிருக்கும் தகவல்களும் எனக்கு தற்கால விஞ்ஞான வளர்ச்சியை நினைத்து வெகுவாக ஆச்சரியப்படுத்தியது.   தனது இறப்புக்கு 12 மணி நேரத்திற்கு முன்னர் ஊட்ஸி இறைச்சி உணவும் தானியவகை உணவுகளையும் உண்டிருக்கின்றார். சமைக்க உருவாக்கிய அனலின் கரியின் சில துகள்கள் இவரது உணவுப்பையில் இருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையால் அவர் இறைச்சியையும் தானியத்தையும் கரி அனலில் வாட்டி உண்டிருக்கின்றார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. வேட்டையாடி தனது உணவை பிடித்து அதனை அனலில் சமைத்து சாப்பிட்டு விட்டு வரும் வேளையிலேயே அவரது  மரண சம்பவம் நிகழ்ந்திருக்கின்றது.

ஊட்ஸி இறப்பதற்கு முன்னர் அவரது உடல் நிலையில் அவர் நோயுற்றிருந்தமைக்கான அறிகுறிகளைக் கண்டுபிடித்திருக்கின்றனர். அவரது எலும்புகள் வலுவிழந்தும், அவரது நோய் எதிர்ப்புச்சக்தி குன்றியும் காணப்பட்டிருக்கின்றது. அவரது உடலின் உள்ளே காணப்பட்ட சில பொருட்களை ஆராய்ந்த ஆய்வாளர்கள் இவர் அனேகமாக ஒரு கோடைகாலத்தில் ஆரம்ப காலத்தில்தான் இறந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர்.

ஊட்ஸியின் உடைகளும் அவர் அணிந்திருந்த அணிகலன்களும் இன்றைக்கு 5500 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதி மக்கள் எவ்வகையில் வாழ்ந்தனர் என்பதை நமக்கு அடையாளம் காட்டுவதாகவே அமைந்திருக்கின்றது. இவர் மலைப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது தான் தக்கப்பட்டு இறந்திருக்கின்றார். அப்படி சென்று கொண்டிருக்கும் வேளையில் அவர் இப்போது நாமெல்லாம் அணியும் Bag Pack, அதில் நிறைய சறுகுகள் என வைத்து முதுகில் தூக்கிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்திருக்கின்றார்.

தலையில் ஒரு தோலினாலான தொப்பி அணிந்திருந்திருக்கின்றார். தன் உடலை வெயிலிலோ அல்லது குளிரிலோ பாதுகாக்க ஆட்டுத் தோலினாலானா ஒரு மேல் ஆடை தரித்திருந்திருக்கின்றார். வெவ்வேறு வகையான கருவிகளைக் கொண்டு அந்தத் தோலை சுத்தப்படுத்தி உடை தயாரித்து அணிந்திருக்கின்றார் என்பதும் தோலின் மேல் உள்ள பல கீறல்களின் அடிப்படையில் கண்டுபிடித்திருக்கின்றனர். ஆடையின் கைப்பகுதி கிடைக்காமையினால் அவரது ஆடை கையுடன் தைக்கப்பட்டதா அல்லது கையின்றி அமைக்கப்பட்டதா என்ற தகவல் அறியப்படவில்லை.

இப்போதெல்லாம் பெண்கள் பேஷனாக நினைத்து அணியும் லெகிங் அப்போதே ஊட்ஸி அணிந்திருந்திருக்கின்றார். இது ஒரு வகையான காலிணை ஒட்டிய வகையில் அமைந்த ஒரு காலுறை எனலாம். குளிருக்குப் பாதுகாப்பாக இருக்க அணிந்திருக்கலாம். அவரது கால்பகுதியோடு ஒட்டிக் கிடைத்த லெகிங்கைப் பத்திரப்படுத்தி அது எவ்வாறு இருந்தது என்பதை இதனால் அறிந்து கொள்ள முடிகின்றது.  இந்த லெகிங் எப்படி அணிந்திருந்தார் என்பதைக் காட்டும் படத்தைக் கீழே காண்கின்றோம்.


ஊட்ஸி அணிந்திருந்த லெகிங் (மே 2013)


பனியிலேயே மூழ்கிக் கிடந்தமையால் இந்த லெகிங் தோல் ஆடை முழுமையாக சேதம் அடையாமல் 5500 ஆண்டுகளுக்குப் பின்னர் நம் பார்வைக்கு வருகின்றது என்பது எவ்வளவு ஆச்சரியம் தருகின்றது? இந்த லெகிங் ஆடைகளை ஆராய்ந்த போது பலமுறை பயன்படுத்தப்பட்ட ஆடைதான் இது என்பதனையும் கண்டுபிடித்திருக்கின்றார்கள். ஆக அக்காலகட்டத்து நிலமையில் ஆடைகளை மீண்டும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் நிலைதான் மனிதர்களுக்கு இருந்திருந்திருக்கின்றது.




ஊட்ஸி அணிந்திருந்த காலணி பாதுகாப்பாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றது (மே 2013)

ஊட்ஸி நாகரிகமான மனிதர் அல்லவா? அதனால் காலனி அணிந்து சென்றிருக்கின்றார். அவர் அணிந்திருந்த தோலினால் செய்யப்பட்ட 2 காலணிகளும் மிக நேர்த்தியாக காட்சியில் வைக்கப்பட்டிருக்கின்றன. தனது தோலாடைக்கு மேல் பெல்ட் ஒன்றும் கட்டியிருந்திருக்கின்றார். முழு உடை அணிந்திருந்த நிலையிலே  ஆல்ப்ஸ் மலையில் நடந்து சென்று கொண்டிருந்த வேளையிலே. ஏறக்குறைய தனது 50வது வயதில் ஊட்ஸி என்று நாம் இன்று பெயரிட்டு அழைக்கும் அம்மனிதரின் இறப்பு  நிகழ்ந்திருக்கின்றது. இவர் எப்படி இறந்தார்?

இதற்கான விடையை அடுத்த வாரம் சொல்கின்றேன்!

தொடரும்..

Monday, October 7, 2013

9. ஊட்ஸி அருங்காட்சியகம், போல்ஸானோ, இத்தாலி.



முனைவர்.சுபாஷிணி 

1991ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ம் நாள். மதியம் 1.30 நற்பகல்.  ஜெர்மனியின் தென்கிழக்கு நகரான நுர்ன்பெர்க்கை சேர்ந்த எரிக்கா சிமோன், அவர் கணவர் ஹெல்முட் சிமோன் இருவரும் இத்தாலி நகரின் ஊட்ஸ் பள்ளத்தாக்குப் பகுதியில் தங்கள் மலையேறும் கருவிகளுடன் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் நடந்து கொண்டிருந்தனர். இவர்களது இப்பயணம் வரலாற்றில் முக்கியத்துவம் பெறப்போகும் ஒரு பயணமாக அமையப் போகின்றது என அவர்கள் கணவிலும் நினைத்திருக்கமாட்டார்கள். இவர்கள் இருவரும் சுற்றுலா முன்னிட்டு தங்கள் ஓய்வு நேரத்தை மலைப்பகுதியில் நடந்து ஆல்ப்ஸ் மலையின் அழகை ரசித்துக் கொண்டே இயற்கையை மேலும் அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டு இங்கு பயணித்தவர்கள்.  ஆல்ப்ஸ் மலையின் திசெஞ்ஞோ (Tisenjoch)  மலையில், கடல் பரப்பிலிருந்து 3210 அடி உயரத்தில் அவர்கள் நடந்து கொண்டிருக்கும் போது அவர்கள் கண்களில் ஒரு பொருள் தென்பட்டது.  பனிப்பாறைப் பகுதியான அங்கே ஒரு பகுதியில் பனி கறைந்து நீர் நிலை தென்பட அந்த சிறு குளம் போன்று தெரிந்த குழியில் இருந்த ஒரு பொருள் அவர்கள் கவனத்தை ஈர்த்தது.  முதலில் குப்பை மூட்டையாக இருக்குமோ என நினைத்த அவர்கள் அருகில் சென்று பார்த்த போது அது ஒரு மனித சடலம் என்பதை அறிந்த போது அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

அச்சடலத்தின் பின்னுடல் பகுதி, தலைமுழுவதும் முதுகுப் பகுதி மட்டும் வெளியே தெரிய கீழ் பகுதி பனிப்பாறைக்குள் பாதி மூழ்கிய வண்ணம் இந்தச் சடலம்  இவர்கள் கண்களில் தென்பட்டது.


ஊட்ஸி - சிமோன் தம்பதியர் எடுத்த முதல் படம்

அங்கிருந்து செல்வதற்கு முன்னர் அவர்கள் அச்சடலத்தைப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மலையில் தங்களைப் போல நடக்க வந்த ஒரு இயற்கை விரும்பியோ சுற்றுப்பயணியோ இங்கு தவறி விழுந்து இறந்து போய் உறைந்து கிடக்கின்றாரோ என் அவர்கள் சிந்தனையில் எண்ணம் எழும்பியது.  அப்போது கூட அவர்கள் இச்சடலம் சில வாரங்களில் உலகப்புகழ் பெறப்போகும் ஒன்று என்றோ தங்கள் பெயரை இந்தச் சடலத்தின் பெயரோடு மக்கள் நினைத்துப் பார்ப்பார்கள் என்றோ சிறிதும் நினைக்கவில்லை.

இச்சடலத்தை தாங்கள் பார்த்த செய்தியை அவர்கள் காவல்துறையிடம் தெரிவிக்க முதலில் ஒரு ஆஸ்திரிய மலையேறிகள் பாதுகாப்புக் குழு மறுநாள் 20ம் தேதி இப்பகுதிக்கு விரைந்தது. இத்தாலியின் போல்ஸானோ ஆஸ்திரியாவின் எல்லை நகரம். ஆக மலைப்பகுதி இருந்த இடம் ஆஸ்திரிய எல்லை என்பதால் முதலில் இப்பணியை இக்குழு தொடங்கியது. அன்றைய நாள் பனி அதிகமாகிவிட, இக்குழுவினரால் சடலத்தை நீரை உருக்கி வெளியே எடுக்க முடியவில்லை. இந்த முயற்சியில் சடலத்தின் இடுப்புப் பகுதியில் சேதம் ஏற்பட்டு விடவே முயற்சியை இவர்கள் கைவிட்டனர்.

மறு நாள் 21ம் தேதி இப்பகுதிக்குச் செல்ல ஹெலிகாப்டர்கள் கிடைக்கவில்லை. ஆனால் உலகப் புகழ்பெற்ற மலையேறும் பிரபலங்களான ஹான்ஸ் காமர்லாண்டரும் ரைன்ஹோல்ட் மெஸ்னரும் இப்பகுதிக்கு விரைந்து வந்து இந்த மனித சடலத்தின் மேல் ஆங்காங்கே தென்பட்ட உடை கருவிகள் ஆகியவற்றை கண்ணுற்றனர்.


ஹான்ஸ் காமர்லாண்டரும் ரைன்ஹோல்ட் மெஸ்னரும் 

மறு நாள் 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, பாதுகாப்பு அதிகாரி அலோஸ் பிர்ப்பாமர் தனது குழுவினருடன் இங்கு சென்று இச்சடலத்தை மீட்க முயற்சித்தார். பனி மிக இறுகிப் போயிருந்தமையால் சடலத்தை பனிக்குளத்திலிருந்து வெளியே எடுக்க முடியவில்லை. ஆக, இச்சடலத்தின் அருகில் கிடைத்த அனைத்து பொருட்களை மட்டும் ஒரு குப்பை எடுக்கும் ப்ளாஸ்டிக பையில் நுழைத்து பத்திரப்படுத்தி தனது தோளில் தூக்கிக் கொண்டு தனது ஹோட்டலுக்குச் சென்றார்.  மறு நாள் மீண்டும் இச்சடலத்தை எடுக்கும் பணி தொடர்ந்தது.

23ம் தேதி திங்கட்கிழமை வானிலையும் ஓரளவு சீதோஷ்ணமும் ஒத்துழைக்க பனியிலிருந்து இச்சடலம் மீட்கப்பட்டது. அன்று இன்ஸ்பூர்க் பல்கலைக்கழக மருத்துவத் துறையைச் சார்ந்த திரு.ரைனார் ஹென் அவர்களின் மேற்பார்வையில் இந்தச் சடலத்தை மலைப்பகுதியிலிருந்து மீட்டெடுத்தனர். இந்த மீட்புப் பணி முழுமையாக கேமராவில் பதிந்து வைக்கப்பட்டது.  இந்த மீட்புப் பணியின் போது தொல்லியல் அறிஞர்கள் உடன்வரவில்லை. இதற்கு முக்கியக்காரணம் அதுவரை இம்மனிதன் யாரோ விழுந்து இறந்த சுற்றுப்பயணி என்ற சிந்தனையே அனைவர் என்ணத்திலும் ஓடிக் கொண்டிருந்தது. பனியிலிருந்து இந்த மனித சடலத்தை வெளியே எடுத்தபோது அம்மனித உடலில் ஒட்டியிருந்த ஆடைகள் அவரோடிருந்த தோலினால் செய்யப்பட்ட கருவிகளின் பகுதிகள் அனைத்தும் சிதைந்தும் பாதியுமாகக் கிடைத்தன. இந்த மனித சடலத்தை எடுத்துக் கொண்டு ஆஸ்திரிய ஊட்ஸ் பள்ளத்தாக்குக்கு இந்தக் குழு விரைந்தது. சட்ட ஆலோசகரின் ஆணைப்படி இந்த மனித சடலமும் ஏனைய பொருட்களும் இன்ஸ்ப்ருக் பல்கலைக்கழக மருத்துவத்துறையில் ஆயவகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

இம்மனிதச் சடலம் கண்டெடுக்கப்பட்ட ஆறு நாட்களுக்குள் இம்மனிதன் இந்த நூற்றாண்டைச் சேர்ந்தவரல்ல என்பது உறுதியாகிவிட இது பல்கலைக்கழக மருத்துவத்துறையினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.  பின்னர் இன்ஸ்ப்ரூக் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை ஆய்வு செய்வது தகும் என முடிவாக தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் கோன்ராட் ஸ்பிண்ட்லெர் இச்சடலத்தை ஆய்வு செய்யத் தொடங்கினார். அவரது ஆய்வு இச்சடலம் குறைந்தது 4000 ஆண்டுகள் பழமையானது என்று காட்டி ஆய்வுத்துறையினரை ஆச்சிரியத்தில் மூழ்கடித்தது. இந்த மனித சடலத்தைப் போல இதுவரை நன்கு உடையணிந்த, கருவிகளுடனான வேறெந்த சடலமும் இதுவரை உலகில் எங்கும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இச்சடலத்தை C-14  கார்பன் டேட்டிங் ஆய்வு முறைக்கு உட்படுத்தி இன்ஸ்ப்ருக் பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வகம் தவிர்த்து வெவ்வேறு நான்கு ஆய்வகங்கள் ஆய்வு செய்தன. இந்த ஆய்வுகளின் கணக்குப்படி இந்த மனிதன் கி.மு 3350 முதல் 3100 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்த மனிதன் என்பது, அதாவது இன்றைக்கு ஏறக்குறைய 5500 ஆண்டுகள் முன் வாழ்ந்த மனிதன் என்பது புலனாகியது. இச்செய்தி உலகம் முழுவதும் செய்தி ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது.

ஊட்ஸி என இம்மனித சடலத்திற்கு முதலில் பெயரிட்டவர் கார்ல் வெண்டி என்ற ஒரு செய்தியாளர். ஊட்ஸ் பள்ளத்தாக்குப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனிதனாகையால் அப்பகுதிப்பெயரை தொடர்புபடுத்தி தனது செய்திகளில் இச்சடலத்தை ஊட்ஸி என பெயரிட்டு இவ்வாய்வுகள் தொடர்பான விஷயங்களை எழுதி வந்தார்.   இப்பகுதி ஊராட்சி மன்றத்தின் சட்டக்குறிப்புப்படி இச்சடலத்திற்கு முதலில் வழங்கப்பட்டதும் அதிகாரப்பூர்வமான பெயரும் “Der Mann aus dem Eis” – “L’Uomo venuto dal ghiaccio” அதாவது பனியிலிருந்து தோன்றிய மனிதன்  என்பதாகும். அது வழக்கில் இன்று இல்லை. ஊட்ஸி என்ற பெயரே இவருக்கு நிலைத்து விட்டது.


ஊட்ஸி கண்டெடுக்கப்பட்ட இடம் - வரைபடத்தில்

ஆஸ்திரிய ஊட்ஸ் பள்ளத்தாக்குப் பகுதியில் தேடுதல் முயற்சிகள் தொடங்கி ஆஸ்திரிய இன்ஸ்ப்ரூக் பல்க்லைக்கழகத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் எப்படி ஊட்ஸி இத்தாலியின் போல்ஸானோ பகுதிக்கு வந்து இத்தாலிக்குச் சொந்தமானார் என்பது ஒரு முகிய விஷயம். இந்த ஊட்ஸி மம்மி கண்டெடுக்கப்பட்ட சில நாட்களில் இச்செய்தி பரவ, இது இத்தாலிக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒன்று என அறிந்த பின் எல்லைக்கோட்டினை மீள்பார்வைய் செய்யும் முயற்சியில் இரண்டு நாடுகளுமே இறங்கின. 1919ம் ஆண்டு செய்து கொண்ட செயிண்ட் ஜெர்மானான் எல்லை ஒப்பந்தத்தின் படி (St. Germain-en-Laye) எல்லைக்கோடு இன்-எட்ச் (Inn-Etsch) பள்ளத்தாக்கு நீரெல்லை ஓரத்தினதாக அமைந்திருக்கின்றது. திசெஞ்ஞோ (Tisenjoch)  மலைப்பகுதியிலோ எல்லைக்கோடு சரியாகத் குறிப்பிடும் வகையில் அமையவில்லை. ஆக, அக்டோபர் மாதம் 2ம் தேதி மீண்டும் ஒரு நில அளவைப் பணி இங்கு மேற்கொள்ளப்பட்டது. இதன்படி ஊட்ஸி கண்டெடுக்கப்பட்ட பகுதி ஆஸ்திரிய தெற்கு எல்லையிலிருந்து 92.56மீ தூரம் கீழே இத்தாலியில் இருப்பதால் ஊட்ஸி இத்தாலிக்குச் சொந்தம் என அதிகாரப்பூர்வமாக முடிவாகியது.

இத்தாலிக்கு ஊட்ஸி சொந்தமென்று ஆகிய பின்னரும் தொடர்ந்து ஆய்வுகள் அனைத்துமே இன்ஸ்ப்ரூக் பல்கலைக்கழகத்திலேயே தடைகளின்றி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. ஊட்ஸியின் உடல் முழுமையும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அவர் அணிந்திருந்த ஆடையின் பகுதிகளும் கருவிகளும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. ஆய்வு முடிவுகள் அனைத்தும் ஒவ்வொன்றாகக் கிடைக்க ஊட்ஸியையும் இவ்வாய்வினையும் பொதுமக்கள் காணும் பொருட்டு ஒரு அருங்காட்சியகம் தேவை என முடிவாக இத்தாலியின் போல்ஸானோ நகரில் ஊட்ஸிக்கு ஒரு அருங்காட்சியகம் அமைந்தது.


ஊட்ஸி தொல்லியல் அருங்காட்சியகம் (மே 2013)


இவ்வாண்டு (2013) மேமாதம் நான் இந்த அருங்காட்சியகம் சென்றிருந்த போது நேரில் பார்த்து எழுதிக் கொண்டு வந்த குறிப்புக்களைத் தொடர்ந்து அடுத்த பதிவில் வழங்குகின்றேன். ஆக, ஊட்ஸியைப் பார்க்க அருங்காட்சியகத்தின் உள்ளே செல்வோமா? 

Monday, September 30, 2013

8. வ.உ.சிதம்பரனார் பிறந்த இல்லம் அருங்காட்சியகம், ஒட்டப்பிடாரம், தமிழகம், இந்தியா.


உலகின் வெவ்வேறு சில நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களைப் பார்த்து அங்கு வைக்கப்பட்டிருக்கும் காட்சிப்பொருட்களின் தரங்களையும் பார்த்த அனுபவம் உள்ள எனக்கு இந்த அருங்காட்சியகத்தின் காட்சிப்பொருட்கள் ஒரு ஆரம்பப்பள்ளியில் இருக்கக்கூடிய தகவல் சுவரொட்டி போல இவை காட்சியளிப்பதைப் பார்த்த போது உண்மையில் மன வருத்தமே தோன்றியது. கண்காட்சி மேளாண்மை-பராமரிப்பு என்பது ஒரு தனிக் கலையாக உருவாகிவிட்ட காலம் இது.  புதிய தொழிற்நுட்பங்களின் துணை கொண்டு தரம் வாய்ந்த காசிப்பொருட்களை அமைக்கக்கூடிய வாய்ப்பு தற்கால நிலையில் ஒரு எட்டாக் கனியல்ல.  ஆனால் அதற்கான சிந்தனையும் முயற்சியும் இருக்கின்றதா என்பதே கேள்வி.  இங்கு பார்த்தபோது காட்சிப்பொருட்களின் தரம் என் எதிர்ப்பார்ப்பிற்கு ஏமாற்றத்தை அளித்தது என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும்.

ஒரு வகையில் இந்தச் சுதந்திரப் போராட்ட தியாகியின் பிறந்த இல்லத்தை நிர்வகித்து அவரது ஞாபகம் மக்கள் மத்தியில் மறையாமல் பாதுகாக்கும் முயற்சியை மேற்கொண்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றி கூற நினைக்கும் என் மனம் அதே வேளையில் இன்னமும் தகுந்த தரத்துடன் இக்காட்சிப் பொருட்களைத் தயார்படுத்தி வைத்தால் என்ன என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டுதான் இருக்கின்றது.

வ.உ.சி அவர்கள் தமிழக சரித்திரத்திலும் தமிழர் தம் வாழ்விலும் மறக்க முடியா அங்கம் வகிப்போரில் ஒருவர்.  அம்மனிதரின் நினைவாக இன்று காட்சியளிக்கும் இந்த நினைவு இல்லத்தில் உள்ள அறிக்கைகளைத் தரமான காகிதங்கள் கொண்டு தயாரித்து அதற்கு ப்ரேம் போட்டு பாதுகாத்து வைக்கலாம்.  அவரது நூல்களின் படிவங்களை ஒரு கண்ணாடி அலமாரியில் காட்சிக்கு வைக்கலாம். அவரது கையெழுத்தில் அமைந்த ஆவணங்களைப் பத்திரப்படுத்தி காட்சிக்கு வைக்கலாம்.  அவரது உருவப்படங்களைக் கொண்டு உருவாக்கிய ஒரு டாக்குமெண்டரி திரைப்படத்தை வருவோர் காணும் வகையில் ஒரு தொலைக்காட்சியைப் பொருத்தி அதில் ஒலிபரப்பலாம். அவரது சேவையைப் பாராட்டிப் பேசியோரின் பேச்சுக்களின் ஒலிப்பதிவுகளை அங்கே வருவோர் கேட்டு பயன்பெற ஏற்பாடு செய்யலாம்.  இவற்றை செய்வதற்கு மிக அதிகமான பொருளாதாரம் தேவை என்பதில்லை. மனித முயற்சி இருந்தால் தற்கால கணினி, அச்சு தொழிற்நுட்பம் வழங்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி இவற்றை எல்லாம் சாதிக்கலாம்.  வருங்காலத்தில் இவ்வகையில் இந்த அருங்காட்சியகம் புதுப் பொலிவு பெற்றால் நான் மிக அகம் மகிழ்வேன்.

உலகில் நிகழ்ந்த,  நிகழ்ந்து கொண்டிருக்கின்ற பல்வேறு மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைவதே தனி மனித முயற்சிகள் தாம்.  தனி மனிதரின் ஆன்ம பலமும்,  ஆய்வுத் திறமும் சிந்தனையும் முயற்சியுமே உலகில் நிகழ்ந்த பல்வேறு மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைந்திருக்கின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை.  அத்தகைய்ச் பண்புடன் கூடியவர்களில் ஒருவராகத்தான் நான் வ.உ.சி அவர்களை நான் காண்கின்றேன்.


வ.உ.சி  வள்ளியம்மாளுடன் (2010)

அருங்காட்சியகத்தில் நான் பார்த்து எடுத்துக் கொண்ட குறிப்புக்கள் வழி அவரது குடும்பத்தினர் பற்றிய சில தகவல்களை நான் அறிந்து கொண்டேன்.  வ.உ.சி அவர்களின் முதல் மனைவியார் வள்ளியம்மை.  வள்ளியம்மை பிறகு இறந்து விட இவருக்கு இரண்டாம் திருமணமும் நிகழ்ந்தது.


வ.உ.சி  இரண்டாம் துணைவியாருடன்(2010)

வள்ளியம்மையுடனும் பிறகு அவரது மறைவுக்குப் பிறகு திருமணம் முடித்த இரண்டாம் மனைவியுடன்  இருப்பது போன்ற மூன்று படங்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன.  இவை அக்கால சூழலில் செல்வந்தர்கள் வீட்டு ஆண் பெண்களின் ஆடை அலங்காரத் தன்மையை வெளிக்காட்டும் சிறந்த ஆவணங்கள்.  வணிக குடும்பத்தில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று வக்கீலாகத் தொழில் புரிந்த சிதம்பரனாரின் மேன்மை பண்புகளை வெளிக்காட்டும் மிடுக்கான தோற்றத்துடன் அவர் காட்சியளிப்பதை இப்படங்களில் காண முடிகின்றது.


இறுதி ஊர்வலம் (2010)

சிதம்பரனார் நினைவு மண்டப அருங்காட்சியகத்தில் அவரது மறைவுக்குப் பின் அவருக்கு நடத்தப்பட்ட இறுதி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் உள்ளது.  அவரது அனைத்து சேவைகளையும் தெரிந்து அவரது இல்லத்திலேயே இருந்து உணர்ந்து இப்புகைப்படத்தைப் பார்க்கும் போது மனம் கலக்கம் கொள்வதை தடுக்கமுடியவில்லை.  இந்த இறுதி யாத்திரை புகைப்படத்தில் இவரது மகன்கள் வ.உ.சி. ஆறுமுகம், வ.உ.சி. சுப்பிரமணியம், வ.உ.சி. வாலேஸ்வரன்  ஆகியோர் இருப்பதாக இப்படத்தோடு உள்ள குறிப்பில் உள்ளது. இவர்களோடு இவரது நண்பர்கள் பெ.கந்தசாமி பிள்ளை, மாசிலாமணிப்பிள்ளை, பாபா ஜான் ஆகியோரும் இருப்பதாகவும் இந்தக் குறிப்பில் உள்ளது.

வ.உ.சி.  ஆங்கில ஆட்சியில் அடிமைப் பட்டுக் கிடந்த மக்களின் சிந்தனையில் புத்துணர்ச்சியை ஊட்டியவர் என்பது மட்டும் அவரது பண்பு நலனுக்கு மதிப்பளிக்கும் ஒன்றாக அமைந்து விடவில்லை. அவரது தத்துவ ஞான விசாரணை,  தமிழ்க்கல்வி,  ஓலைச்சுவடிகளிலிருந்து அச்சுப்பதிப்பாக்கத்திற்கு தமிழ் நூற்களைப் புதிய வடிவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்பு ஆகியவை அவரைப் பற்றிய நம் சிந்தனையை மென்மேலும் உயரத்திற்குக் கொண்டு செல்வதாக அமைகின்றது.  வ.உ.சி அவர்கள் தமிழுக்கு நல்கிய தம் இலக்கியப் பங்களிப்பையும் இனி காண்போம்.

அவர் எழுதி வெளி வந்த நூல்கள்:


  • மெய்யறிவு
  • மெய்யறம்
  • எனது பாடல் திரட்டு
  • வ. உ.வி.கண்ட பாரதி
  • சுயசரிதை


இவர் மொழி பெயர்ப்பு செய்த நூல்களின் பட்டியல்:

  • மனம் போல வாழ்வு
  • அகமே புறம்
  • வலிமைக்கு மார்க்கம்
  • சாந்திக்கு மார்க்கம்


இவர் உரை எழுதியவையாக குறிப்பிடப்படும் நூல்களின் பட்டியல்:

  • சிவ ஞான போதம்
  • இன்னிலை
  • திருக்குறள்



வ. உ.சி எழுதிய நூல்களில் இதுவரை வெளிவராத நூல்கள் பற்றியும் சில தகவல்கள் இதோ.

1. சிவ மதம்
2. விஷ்ணு மதம்
3. புத்த மதம்
4. ஊழை வெல்ல உபாயம்
5. இஸ்லாம் மதம்
6. கிருஸ்து மதம்
7. மனித மதம்
8. முத்தி நெறி
9. The Universal Scripture
10. திருக்குறள்
11. திலக் மகரிஷி

உயர் குலச்சமூகத்தினருக்கும் வசதி வாய்ப்புக்கள் நிறைந்தோருக்கும் மட்டுமே  கிடைத்த கல்வி ஞானத்தை அச்சுப்பதிப்பாக்க முயற்சிகள் சமூகத்தில் புரட்சியை ஏற்படுத்தி கல்வியும் ஞான நூல்களும் இலக்கியங்களும் எல்லோருக்கும் கிடைக்கும் வகை செய்தன.  அந்த வகையில் 18, 19, 20ம் நூற்றாண்டுகளில் பல சேவையாளர்களின் முயற்சியில் அறிய பல தமிழ் நூல்கள் ஏட்டுச் சுவடிகளிலிருந்து அச்சுப்பதிப்பாக வெளிவந்தன.  வ.உ.சி அவர்களும் இந்த முயற்சியில் பங்கெடுத்துக் கொண்டவர் என்பது பலரும் அறியாத ஒன்று. அவரது முயற்சியில் பனை ஓலை சுவடிகளிலிருந்து பதிப்பிக்கப்பட்ட நூல்களின் பட்டியல்:

  • தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் (இளம்பூரனார் உரை)
  • தொல்காப்பியம் - சொல்லதிகாரம் (இளம்பூரனார் உரை)
  • சிவஞான போதம்


சைவ சித்தாந்த சாஸ்திரங்களின் தலையாயதும் குருபரம்பரையினர் போற்றிப் புகழ்ந்த மெய்கண்டாரின் சிவஞான போத நூலை முதன் முதலில் பனை ஓலைச் சுவடியிலிருந்து அச்சு வடிவத்திற்குக் கொண்டு வந்தவர் நம் சிதம்பரனார் என்பதை அறியும் போது அவரைப் போற்றாமல் இருக்க முடியுமா?   இத்தகைய இலக்கியப் பணிகள் மட்டுமின்றி இவர் பத்திரிக்கைகளையும் நடத்தியிருக்கின்றார். அவற்றின் பட்டியல்:

  • விவேக பாநு
  • தமிழ் நேஷனல்
  • பத்திரிகை
  • இந்து நேசன்


சைவ சித்தாந்த சபையில் முக்கியமான அங்கம் வகித்தும் சைவ சித்தாந்த தத்துவங்களில் ஆர்வம் கொண்டவராகவும் திகழ்ந்திருக்கின்றார் வ.உ.சி அவர்கள்.  தான் அச்சு வடிவத்தில் வெளியிட்ட சிவஞானபோத நூலுக்கு உரை எழுதுவதற்கு முன்னரே தூத்துக்குடியில் சைவ சித்தாந்த சபையில் அவர் பல சைவ  சித்தாந்தத் தத்துவக் கொள்கைகள் தொடர்பான உரைகளை தொடர்ந்து நிகழ்த்தி வந்துள்ளார்.   1934-35களில் அப்போது புதிதாகத் தொடங்கப்பட்டிருந்த தினமணி நாளிதழின் வருஷ அனுபந்தத்தில் தான் வ.உ.சிதம்பரம் பிள்ளை தனது சிவஞானபோத உரையின் முதல் வடிவை எழுதியிருக்கின்றார்.  பிறகு அந்த உரை, நூல் வடிவில் தூத்துக்குடி எட்டையபுரம் நெடுஞ்சாலையிலுள்ள குறுக்குச் சாலையில் அரங்கேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.  இவரது சொற்பொழிவுகள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பு 'எனது அரசியல் பெருஞ்செயல்'  என்ற தலைப்பில்  அச்சு வடிவம் கண்டுள்ளது.  இது அவரது அரசியல் அனுபவங்களை எடுத்துக் காட்டும் சிறந்த வரலாற்று நூலாகக் கருதப்படுகின்றது.

இந்த விவரங்கள் எல்லாம் இக்கால இளம் தலைமுறையினர் அறிந்து உணர்ந்து போற்ற வேண்டிய விஷயங்கள் அல்லவா? இவையெல்லாம் தமிழ் நாட்டு கல்விப்பாடத்திட்டத்தில் இடம்பெறுகின்றனவா?  வ.உ.சிதம்பரனார் பற்றிய தகவல்கள் செக்கெழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் என்ற மேல் நோக்கானப் புகழ்ச்சியோடு மட்டுமே என நின்று விடாமல் இம்மாமனிதரின் பரந்த சிந்தனை,  உயர்வான வாழ்வியல் நெறி முறைகள்,  தன்னலமற்ற சேவை, ஞானப் பரப்பு,  அறிவின் ஆழம் ஆகியவை பாடத்திட்டத்தில் கூறப்படுகின்றனவா என்று கேட்டு அவை இல்லையென்று அறிந்து சோர்ந்து ஏமாற்றம் அடைகின்றேன்.   இவர் எழுதி அவர் காலத்திலேயே வெளியிடப்படாத நூல்கள் எப்போது அச்சு வடிவம் பெறும்? என நினைக்கும் போதே அதனைத் தேடி அவற்றை பதிப்பிக்க வேண்டும் என்ற என் ஆர்வத்தையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.  தமிழகத்தில் உள்ளோர் இப்பதிவினை வாசிக்க நேர்ந்தால் நான் குறிப்பிட்டுள்ள நூல்கள் கிடைக்கும் இடத்தை எனக்கு அறியத்தருமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

வ.உ.சி அவர்களின் கையெழுத்தில் அமைந்த ஒரு கடிதம் ஒன்றினை எட்டயபுரம் இளசை மணியன் அவர்கள் எனக்கு இந்தப் பயணத்தின் போது காட்டினார். அதன் டிஜிட்டல் வடிவத்தை தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்தில் இணைத்து வைத்துள்ளேன்.  இக்கடிதத்தைப் பார்க்க விரும்புவோர் http://tamilheritagefoundation.blogspot.de/2010/05/blog-post.html பக்கத்தில் காணலாம்.

இந்த சிந்தனைகளுடனேயே இங்கிருந்து புறப்படுவோம். வேறொரு நாட்டில் மற்றுமொரு அருஙகாட்சியகத்தை நாம் அடுத்து காண வேண்டுமல்லவா?